WatTruyen.Top

நெஞ்சில் மாமழை..

❤❤ 02 ❤❤

jamunaguru

“அய்யோ.. இடுப்பெல்லாம் தெரியுதே.. எவ்ளோ இழுத்து விட்டாலும் இந்த தாவணி கீழ கீழ இறங்குதே..

எல்லாம் இந்த ஜானுவால வந்தது..தாவணி வேண்டாம்.. என்னோட பிங்க் சுடியை போட்டுக்குறேன்னு சொன்னா கேட்டாத்தான..

ஜானு உன்னை.. எல்லாம் அப்பா கொடுக்கிற செல்லம்..” தனக்குத்தானே புலம்பியபடி.. இடுப்பில் நிற்க மறுத்த தாவணியை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு நடந்து சென்றாள் அவள்.

பதினாலு பதினைந்து வயது தான் இருக்கும்.. திருவிழா நாளின் போது சந்தித்தான் அவளை.

கொஞ்சம் குழந்தைத்தனமான முகம்.. அப்படியே அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டாள்.

சில பல வருடங்கள் கடந்துவிட்டது. ஒவ்வொரு வருடமும் ஊரில் திருவிழா வரும் போதெல்லாம் அவன் தூக்கத்தை பறிப்பாள் அந்த தேவதை.

ஆனால் அவன் விழிகளின் தேடலை அறிந்திராத அவளை அவன் மீண்டும் சந்திக்க முடியவில்லை.

அவள் நினைவு வரும் போதெல்லாம் ஏதோ பருவத்தின் ஈர்ப்பு.. காலப்போக்கில் மறந்து போகும் என்றே எண்ணினான். ஆனால் அவனுக்கே ஆச்சரியமாக இருக்கும்.. எத்தனையோ பெண்களை சந்தித்திருந்தாலும் இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அவள் தன் நினைவை விட்டு அகலாத மாயம்.

வாழ்க்கை அவளை தன் துணையாக கொண்டு வந்து நிறுத்தும் என சில தினங்களுக்கு முன்பு வரை கூட கிருபா அறிந்திருக்கவில்லை.

அவள் பெயர் அதிதி என்பதையே இப்போது தான் அறிந்து கொண்டான் அவன்.

அவளது தற்போதைய புகைப்படத்தை கொண்டு வந்து நீட்டிய கிருபாவின் தாய் அபிராமி.. பெண் பார்க்க செல்லலாமா என கேட்க.. கிருபாவின் மனம் உற்சாகத்தில் துள்ளியது.

அவ்வப்போது தென்றலாய் வந்து மனதில் சிலிர்ப்பூட்டியவள்.. தன் வாழ்வின் துணையாக போகிறாளா.. அவளுக்கு என்னை பிடிக்குமா.. அவள் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்வாளா.. என மனமெல்லாம் பரவசம்.

அவளை நேரில் சந்திக்கையில் என்ன பேசுவது.. நான் உன்னை முன்னாடியே பார்த்திருக்கேன்.. மெரூன் கலர் தாவணி.. அது இடுப்பில நிக்காம கீழ கீழ இறங்க.. அத பிடிச்சு இழுத்து இழுத்து விட்டுட்டு.. எல்லாம் இந்த ஜானுவால வந்தது.. என்னோட பிங்க் சுடியை போட்ருப்பேனேனு புலம்பிட்டு.. கொஞ்சம் குழந்தைத்தனமா.. அப்பாவி மாதிரி ஒரு முகம்.. அவ்ளோ அழகா.. நினைக்க நினைக்க கிருபாவின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

அதிதியின் அன்னை ஜானகியின் சொந்த ஊர் தான் கிருபாவுக்கு. ஜானகியின் தாய் மங்களம் இருந்தவரையில் அந்த ஊருடன் அவருக்கு தொடர்பு இருந்தது.

அவர் மறைந்தபின் அங்கு செல்வதும் நின்று போனது. ஜானகியின் தம்பி செல்வமும் வெளிநாட்டில் வேலை கிடைத்து குடும்பத்துடன் அங்கேயே தங்கிவிட்டதும் ஒரு காரணம்.

அதிதியும் பாட்டி மங்களம் உயிருடன் இருந்தவரையில் திருவிழா பள்ளி விடுமுறை என எப்போதாவது அங்கு செல்வாள். பெரும்பாலும் வெளியே சுற்ற மாட்டாள்.. அங்கு தோழிகள் என்று யாருமில்லை.

பாட்டி வீடு.. கோவில்.. என சிறு வட்டத்துக்குள்ளே முடங்கிப் போவாள் அதிதி. அதனால் கூட கிருபா அவள் யார் என்ன என்ற விவரம் அறியவில்லை.

கிருபாவின் பள்ளி கல்லூரி படிப்பெல்லாம் விடுதியில் என்ற போதிலும் சொந்த ஊர் பாசம் மிகுந்தவன். படிப்பு முடித்து அப்பாவின் தொழிலை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால்.. அங்குள்ள மனிதர்களையும் நன்கு அறிவான். அதிதி மட்டுமே அவன் அறிய ஆவல் கொண்டும் அறிய முடியாமல் போனவள்.

அதிதியின் மாமா செல்வமும் கிருபாவின் தந்தை மோகனும் நெடுநாளைக்கு பிறகு பேசிக் கொள்ள நேர்ந்ததில் தான் கிருபாவுக்கு.அதிதியை பெண் கேட்பது குறித்து பேச்சு எழுந்தது.

சில தினங்களுக்கு முன்னரே அதிதியின் தாய் தந்தையும் இதுகுறித்து அறிவர். அவர்களுக்கும் அதில் சந்தோஷமே.

கிருபா வீட்டிலிருந்து வரும் தேதி முடிவாகாததால் அதுகுறித்து அதிதியிடம் ஆனந்தனும் ஜானகியும் பேசவில்லை.

அதிதி.. பெயரை மனதுக்குள் உச்சரித்தபடியே அவளிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்ற கற்பனையுடனும் அவள் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான் கிருபா தன் குடும்பத்துடன்.

தனக்கு இருக்கும் எந்த பரபரப்பும் பூரிப்பும் அவளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பது புரிந்தாலும்.. தான் அவளை பார்த்த நாளை பற்றி கேட்டதும் அவளின் எதிர்வினை எப்படியாக இருக்கும் என கற்பனைகளை சுமந்து கொண்டிருந்தான் கிருபா.

அலுவலகம் சென்ற சில நிமிடங்களிலே தந்தை திரும்பி வந்தது ஏன் என புரியாமல் விழித்த அதிதிக்கு கிருபா குடும்பத்துடன் தன்னை பெண் பார்க்க வருவதை அறிந்த போது அதிர்ச்சியாக இருந்தது.

ஆனந்தனுக்கு இருந்த சந்தோஷ பரபரப்பு ஜானகியையும் தொற்றிக் கொள்ள.. கிருபா குடும்பத்தின் வருகையை எதிர்பார்த்து வேலைகளை பார்த்தனர் இருவரும்.

ஆனந்தன் வெளி வேலையாக சென்றுவிட.. “போய் புடவையை கட்டுடா.. சீக்கிரம்..” என ஜானகி அதிதியை உலுக்க அப்போது தான் அதிர்ச்சியில் இருந்து மீண்டாள் அவள்.

“அ.. அம்மா..” என தயக்கத்துடன் ஜானகியை அழைத்தாள் அதிதி.

“அந்த க்ரீன் கலர் சேரியை கட்டுறீயா.. இல்லை மெரூன் கலர் சேரியை கட்டேன்.. அந்த மயில் மாதிரி டிசைன் வருமே..” என அதிதி கேட்காத கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் ஜானகி.

“அம்மா.. இ.. இதெல்லாம் வேண்டாம் ம்மா..” என்றாள் அதிதி தயக்கமாக.

“மெரூன் கலர் வேண்டாம்னா உனக்கு பிடிச்ச பிங்க் கலர் சேரி கட்டு டா..” என்றார் ஜானகி வீட்டை ஒழுங்குபடுத்தியபடியே.

“ப்ச்.. அம்மா..” என சலித்துக் கொண்டவள்.. “இன்னைக்கு ஏன் அவங்க வர்றாங்க.. இ.. இன்னைக்கு இதெல்லாம் வேண்டாமே..” என்றாள் கெஞ்சலாக.

“என்னமா இது.. முதமுதல்ல நல்லது கூடி வர்றப்ப என்ன பேச்சு இது.. போ.. போய் சீக்கிரம் ரெடியாகு..”என்று அதட்டினார் ஜானகி.

வேறுவழியின்றி அதிதியும் ஜானகி எடுத்துக் கொடுத்த மெரூன் கலர் புடவையை கட்டிக் கொண்டு காத்திருந்தாள்.

“ப்ச்.. எதுக்கு இதெல்லாம்.. நானே சாகலாம்னு நினைக்கிறேன்.. அதுக்குள்ள இதெல்லாம் ஏன்.. கடவுள் ஏன்தான் என்னை மட்டும் இப்டி சோதிக்கிறாரோ..” என புலம்பிக் கொண்டிருந்தாள் அதிதி.

“சரி என்னமோ நடக்குது.. நடந்துட்டு போகட்டும்.. அப்பா அம்மா சந்தோஷமா இருக்காங்க.. அந்த சின்ன சந்தோஷம் போதும் இப்போதைக்கு.. வேற எதையும் யோசிக்க வேண்டாம்..” என முடிவு செய்து கொண்டாள் அதிதி.

மோகன்.. அபிராமி.. கிருபா.. கிருபாவின் தங்கை லேகாவின் குழந்தை மகதி.. என நால்வருமாக அதிதியின் வீட்டுக்கு வந்தனர்.

ஆனந்தனும் ஜானகியும் அவர்களை உபசரிப்பது காதில் விழ.. இனம்புரியாத பயம் சூழ தன்னறைக்குள் அமர்ந்திருந்தாள் அதிதி.

நலவிசாரிப்புக்கு பிறகு.. அதிதியை அழைத்தார் ஜானகி. எதிர்பார்ப்புடன் கிருபாவும்.. பயத்துடன் அதிதியும் சந்தித்துக் கொண்டனர்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top