WatTruyen.Top

காற்றினில் உன் வாசம்..

🌸 07 🌸

jamunaguru

“நா.. நான் எங்கையும் போகலை.. இங்கையே இருந்திடவா..” என அபி கேட்க முதலில் திகைத்தான் இளங்கோ.

இது சரியாக வருமா.. பழகிய இடம்.. மனிதர்களை சந்திக்கும் போது தானாகவே நினைவு திரும்பும் என டாக்டர் சொன்னார்.. ஆனால் சம்பந்தமே இல்லாத இந்த இடத்தில் நினைவு திரும்புவது கடினமாகி விடுமோ.. இங்கே அபியை தெரிந்தவர்கள் இருப்பார்களா.. என இளங்கோ யோசனையில் இருந்தான்.

ஆனால் அபி தன் பொறுப்பு என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தான் இளங்கோ.

“ப்ளீஸ்.. நான் இங்கையே இருந்துக்கிறேனே..” என கெஞ்சலாக அபி கேட்க.. சரியென தலையசைத்தான் இளங்கோ.

அபி உற்சாகத்துடன் புன்னகைக்க.. இளங்கோவும் மெலிதாக புன்னகைத்தான். அப்போது அழைப்பு மணி ஒலிக்க.. இளங்கோ சென்று கதவை திறந்தான்.

விஸ்வநாதனும் சுசீலாவும் நின்றிருந்தனர். அவர்கள் மகள் செய்த தவறுக்கு அவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்ற எண்ணம் கொண்டிருந்த இளங்கோ.. “வாங்க..” என்றான் அவர்களின் எண்ணம் அறியாமல்.

ஆனால் அவர்களோ.. “எங்க அவ..” என உரக்க கேட்டனர்.

யாரை பற்றி கேட்கிறார்கள் என்பதே புரியாத இளங்கோ.. “யா.. யாரு..” என கேட்டான்.

“யாரா.. என் பொண்ண அடிச்சு துரத்திட்டு இன்னொருத்தியை கூட்டிட்டு வந்து வச்சிருக்கீயே அவளைத்தான் கேட்கிறோம்..” என்றார் விஸ்வநாதன்.

அவர் பேசுவதை இளங்கோவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“என்ன பேசுறீங்க நீங்க..” என இளங்கோ கேட்டான்.

அதற்குள் விஸ்வநாதன் போட்ட சத்தத்தில் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். அபியும் என்ன என்பதே புரியாமல் விஸ்வநாதனையும் சுசீலாவையும் பார்த்தபடி இளங்கோவின் அருகில் வந்தாள்.

“இவளை கட்டிக்கிட தான் என் பொண்ணை அடிச்சு துரத்துனீயா..” என்றார் சுசீலா.

“நா.. நான் அடிச்சு துரத்துனேனா.. என்ன பேசுறீங்க.. என்னாச்சு உங்களுக்கு..” என இளங்கோ கேட்டான்.

“ஆஹாஹா.. எதுவுமே தெரியாத மாதிரி என்ன நடிப்பு.. என்ன நடிப்பு.. இவ கூட வாழணும்னு கட்டின பொண்டாட்டியை அடிச்சு துரத்திட்டீயே..” என்றார் விஸ்வநாதன்.

“பாவி.. பாவி.. உன்னை நல்லவன்னு நம்பி என் பொண்ணை கட்டிக் கொடுத்தேனே.. என் பொண்ணை துரத்தி விட்டுட்டு ஓடி போய்ட்டானு எங்களையே நம்ப வச்சிட்டீயே.. பாவி பாவி..” என கதறி அழுவது போல் நடித்தார் சுசீலா.

கூடியிருந்த கூட்டமும் இளங்கோவுடன் இருந்த அபியை பார்த்து அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கக்கூடுமோ என்ற எண்ணத்துடன் பார்த்தனர்.

எந்த தவறுமே செய்யாத இளங்கோ.. தான் மற்றவர்களின் பார்வையில் ஏதோ தவறு செய்வதன் போல மனம் கூச நின்றிருந்தான் அந்த இடத்தில்.

இளங்கோவை அசிங்கப்படுத்தி விட்டு.. தங்கள் எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன்.. அங்கிருந்து நகர்ந்தனர் விஸ்வநாதனும் சுசீலாவும்.

ரம்யா எழுதி வைத்திருந்த கடிதத்தை படித்துவிட்டு.. அவளை திட்டி தீர்த்தவர்களா இவர்கள்.. எவ்வளவு ஆறுதல் சொன்னார்கள்..

“உங்க அருமை என் பொண்ணுக்கு தெரியலை மாப்பிள்ளை..” என கண்ணீர் விட்டவர்கள்.. இன்று நான் அவளை அடிச்சு துரத்திட்டேன் றாங்க.  அப்டி என்ன நடந்துச்சு.. என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் இளங்கோ.

வந்தவர்கள் இளங்கோவின் மனைவி.. இல்லை முன்னாள் மனைவி ரம்யாவின் பெற்றோர் என்பதை அவர்கள் பேச்சில் இருந்தே புரிந்து கொண்டாள் அபி.

தன்னை காப்பாற்றி இளங்கோ வீட்டுக்கு அழைத்து வந்ததை தவறாக புரிந்து கொண்டார்கள் போல.. என எண்ணிய அபி.. இளங்கோவின் முகவாட்டம் கண்டு ஆறுதல் சொல்லும் விதம்.. “அ.. அது.. அவங்க..” என பேச்சை தொடங்கினாள்.

அவள் குரல் கேட்ட இளங்கோ திரும்பி அவள் முகம் பார்த்தான். அவள் தன்னிடம் விவரம் கேட்க நினைக்கிறாள் என எண்ணிய இளங்கோ.. தான் எதையும் சொல்லும் மனநிலையில் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக.. “நா.. நான் கொஞ்சம் தனியா இருக்கணும் ப்ளீஸ்..” என சொல்லிவிட்டு அறைக்குள் நகர்ந்தான்.

அபியும் மேலே எதுவும் பேச முடியாமல் தயங்கி நின்றாள். ஒரு நொடி நின்ற இளங்கோ.. “சாரி.. என்னோட பிரச்சனை உன்னை பாதிக்கும்னு நான் நினைக்கலை.. ஐயம் சாரி..” என அபியிடம் சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டான்.

இளங்கோவால் நடப்பது எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. ஏற்கனவே செய்யாத தவறுக்கு.. மற்றவர்களின் கேலி பேச்சுக்களை தாங்கி நிற்கிறான். அதுபோதாதென உண்மையை நன்கு அறிந்தவர்களே மேலும் பழி சுமத்துவது மனதின் வலியை அதிகரித்தது.

“எங்களை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை..” என கதறி அழுதவர்கள்.. இன்று நான் ஏமாற்றியதாக சொல்கிறார்கள்.. அது உண்மை அல்ல தான்.. ஆனால் இப்படி மாற்றி பேச அவர்களை தூண்டிய நிகழ்வு எது.. என யோசித்தான் இளங்கோ.

அவனுக்கு கிடைத்த பதில் அபி.. ஆனால் அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.. எதுவுமில்லையே.. பின் ஏன்..

எந்த சம்பந்தமும் இல்லை என நீதான் சொல்கிறாய்.. இந்த உலகம் நட்பாக பழகும் ஆணையும் பெண்ணையுமே தவறான கண்கொண்டு தான் பார்க்கும்.. என அவன் மனம் பதில் சொல்லிற்று.

ஆழ்ந்த யோசனைக்கு பிறகு.. இளங்கோ ஒரு முடிவு செய்தான்.

இளங்கோவுக்கு தான் பாரமாக இருக்கிறோமோ.. இளங்கோ வந்ததும் அவன் முன்பு கேட்டது போல.. ஏதாவது ஹாஸ்டலில் சேர்த்து விட சொல்வோமா.. என யோசித்துக் கொண்டிருந்தாள் அபி.

ஆனால் இளங்கோ அருகில் கிடைக்கும் இந்த பாதுகாப்பு கிடைக்குமா என அவள் மனம் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.

ஏதேதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவள் அப்படியே அந்த ஒற்றை சோபாவில் கால்களை சுருக்கி அமர்ந்து கொண்டே உறங்கியிருந்தாள்.

தீர்க்கமான முடிவுடன் அறையில் இருந்த வெளியே வந்த இளங்கோ.. உறக்கத்தில் இருந்த அபியை பார்த்தபடியே நின்றிருந்தான்.

அபிக்கும் தனக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்தபின் அபியை எழுப்பினான் இளங்கோ.

“அபி.. அபி..” என்ற இளங்கோவின் குரலை கேட்டு.. மெல்ல கண்விழித்த அபி.. லேசாக புன்னகைத்தாள்.

“சாப்பிட வா..” என்ற இளங்கோ.. அவளுக்கு எடுத்து வைத்துவிட்டு தானும் சாப்பிட அமர்ந்தான்.

இளங்கோ எதுவும் பேசாமல் மௌனமாகவே சாப்பிட.. அபி அவனிடம்.. தான் ஹாஸ்டலில் சேர்ந்து கொள்வதை எப்படி சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தாள்.

அபி சாப்பிட்டுக் கொண்டிருக்க.. இளங்கோ சாப்பிட்டு முடித்துவிட்டு.. போனில் யாருடனே பேசிக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்த அபியும்.. தன் முடிவை சொல்ல எண்ணி இளங்கோவிடம் வந்தாள்.

அவளை பார்த்ததும்.. “டேப்லெட் லாம் சாப்டீயா அபி..” என கேட்டான் இளங்கோ.

ஆம் என தலையசைத்த அபி.. தன் மனதில் இருப்பதை சொல்லும் முன்னர் இளங்கோ தன் முடிவை சொன்னான்.

“நீ இங்க இருக்க வேண்டாம் அபி..”

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top