WatTruyen.Top

வரம் நீயடி..

💞 22 💞

jamunaguru

கல்யாண வீட்டில் தன்னைக் கண்டு பிடித்து போக.. சொந்தம் என்பதால் அப்பா அம்மா மூலமாக தன் விருப்பத்தை தீபக் வெளிப்படுத்தியதாக எண்ணிக் கொண்டிருந்தாள் மானசி.

ஆனால் தீபக் பிரச்சனை என சொன்னதும்.. “என்ன பிரச்சனை..” என கேட்டாள் மானசி.

“அப்பா அத்தை மாமா கூட பேச மாட்டாங்கல்ல..” என தீபக் சொன்ன பின்னரே தன் வீட்டில் நடந்த நிகழ்வுகளை எண்ணி பார்த்தாள் மானசி.

சாரதா ரவிச்சந்திரனிடம் பேசாமல் விலகியிருந்த வாசுதேவன் தன் அண்ணன் உதயாவிடம் மட்டும் பாசமாக பேசியது புரிந்தது.

அது ஏன் என புரியாமல்.. “ஆனா மாமா அண்ணன் கிட்ட பாசமா பேசினாங்கல்ல..” என மானசி தீபக்கிடம் கேட்டாள்.

மானசிக்கு இரு குடும்பத்திற்குமான உறவும் அதில் உள்ள சிக்கல்களும் முழுதாக தெரியாது என்பதை முன்பே உணர்ந்திருந்த போதிலும் அந்த நொடியில் யோசிக்காமல்.. “இந்திரா அத்தை மேல இருந்த மொத்த பாசமும்.. இப்ப இந்திரா அத்தை பையன் மேலயும் இருக்கு..” என மானசியின் கேள்விக்கு பதிலளித்தான் தீபக்.

அவன் சொன்னதன் அர்த்தம் உணர்ந்து.. “எ.. என்ன சொன்னீங்க..” என அதிர்ச்சியுடன் கேட்டாள் மானசி.

அதன் பின்னரே தான் சொன்னதை உணர்ந்த தீபக்.. மானசியின் அதிர்ச்சியை கண்டு அவள் இதுவரையில் அறிந்திராத விஷயத்தை தான் உளறிவிட்டதை அறிந்தான்.

“அ.. அது..” என தீபக் பேச்சின்றி தடுமாறினாலும்.. அவன் வார்த்தைகளையும் மற்ற நிகழ்வுகளையும் கோர்த்து பார்த்த மானசிக்கு உண்மை விளங்கியது.

“அ.. அப்ப உதய் அண்ணன் இந்திரா ம்மா பையனா.. மாமா.. இந்திரா ம்மாவுக்கு அண்ணன்..” என தனக்குள்ளே முணுமுணுத்தாள் மானசி.

அவள் அதிர்ச்சியை உணர்ந்து கொண்ட தீபக்.. “சாரிடா.. நா.. நான் அதை சொல்லணும்னு நினைக்கலை.. என்னை அறியாம.. உளறிட்டேன்.. சாரி..” என உண்மையான வருத்தத்துடன் சொன்னான்.

தீபக்கின் வருத்தத்தை உணர்ந்த போதிலும்.. தன் அதிர்ச்சியில் இருந்து மீளாமலே வீட்டுக்கு கிளம்பினாள் மானசி.

அஞ்சலியுடன் இருந்த இனிமையான நிமிடங்களின் நினைவில் இருந்த உதயாவை அலுவலகத்திலே சந்திக்க வந்திருந்தார் வாசுதேவன்.

மானசி தீபக் திருமணம் குறித்து அறிய வந்திருப்பாரோ.. வீட்டுக்கே வந்திருக்கலாமே.. என்ற எண்ணங்களை தவிர்த்து விட்டு.. வாசுதேவனிடம் பேசினான் உதயா.

“நான் உன்கிட்ட தனியா பேசணும்..” என வாசுதேவன் சொல்ல.. “ம்.. சொல்லுங்க மாமா.. என்ன விஷயம்..” என கேட்டான் உதயா.

“அது.. எனக்கு.. நீ.. அந்தப் பொண்ணு அஞ்சலியை நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பமில்லை..” என நேரடியாக தன் மனதில் இருப்பதை சொன்னார் வாசுதேவன்.

தான் அஞ்சலியை திருமணம் செய்து கொள்வதாக சொன்ன போதே வாசுதேவனுக்கு அதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்து இருந்தான் உதயா.

ஆனாலும் இப்படி நேரடியாக அவர் சொல்வார் என்பதை உதயா எதிர்பாராததால் அமைதியாக இருந்தான்.

“அந்தப் பொண்ணு உனக்கு வேண்டாம் உதயா.. நான் நானே உனக்காக பொண்ணு பார்க்கிறேன்.. வேற நல்ல பொண்ணா பார்க்கிறேன்.. அந்தப் பொண்ணுக்கு எதாவது உதவி வேணும்னா பண்ணலாம்.. பணமோ பொருளோ எது வேணும்னாலும்.. ஆனா நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்..” என வாசுதேவன் பேசினார்.

“அஞ்சலிக்கு தேவை பணமோ பொருளோ இல்லை மாமா.. பாசம்.. என்னோட பாசம் மட்டும் தான்.. எப்பவுமே அஞ்சலி மட்டும் தான் என் வாழ்க்கை.. வேற ஒரு பொண்ணு.. அதெல்லாம் நடக்காது..” என உறுதியாக சொன்னான் உதயா.

“புரிஞ்சுக்காம பேசாத உதயா.. நீ எதுக்காக யாரோ ஒருத்தனோட குழந்தைக்கு அப்பாவா இருக்கணும்.. நீ உன் வாழ்க்கை.. நல்லா இருக்கணும்னு தான் நான் பேசிட்டு இருக்கேன்.. புரிஞ்சுக்கோ..” என்றார் வாசுதேவன்.

“மாமா.. விபு என்னோட பையன்.. என்னோட பையன் மட்டும் தான்..” என அழுத்தமாக சொன்னான் உதயா.

வாசுதேவன் எவ்வளவோ பேசியும் உதயா தன் முடிவில் உறுதியாக இருந்தான்.

“நீ அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறதுல அவ்ளோ உறுதியா இருந்தா.. என்னோட உறவை நீ இழக்க வேண்டியிருக்கும்..” என உறுதியாக சொன்னார் வாசுதேவன்.

“யாருக்காகவும் அஞ்சலியை இழக்க என்னால முடியாது..” என்றான் உதயாவும் தெளிவாக.

“அப்டினா மானசி தீபக் கல்யாணமும் நடக்காது..” என உறுதியுடன் சொன்ன வாசுதேவன் அங்கிருந்து கிளம்ப.. “ஒரு நிமிஷம் மாமா..” என்றான் உதயா.

“நீங்க என்னோட கல்யாணத்தை காரணம் காட்டி உங்க பையனோட விருப்பத்தை தான் மறுக்கிறீங்க.. அதை மறந்துடாதீங்க..” என்றான் உதயா.

“நீயும் யாரோ ஒருத்திக்காக இந்த மாமாவோட பாசத்தை தொலைக்கிற.. அதை மறந்துடாத..” என்ற வாசுதேவன் அங்கிருந்து கிளம்பினார்.

“அவ யாரோ ஒருத்தி இல்லை மாமா.. என் வாழ்க்கை.. என் உயிர்.. என் சந்தோஷம்.. எல்லாமே எனக்கு அவ மட்டும் தான்..” என மனதில் நினைத்தான் உதயா.

என்னதான் உறுதியாக பேசியிருந்தாலும்.. இவ்வளவு நாட்கள் கழித்து தொடர இருந்த உறவு விட்டுப் போகிறதே என்பது வருத்தமாக இருந்தது உதயாவுக்கு.

என் சந்தோஷமே அஞ்சலி தான் என்பதை உணராமல் மாமா இப்படி பேசுகிறாரே என எண்ணியபடியே வீட்டுக்கு வந்தான் உதயா.

“என்ன உதி.. என்னாச்சு.. ஏன் டல்லா இருக்க..” என சாரதா கேட்க.. வாசுதேவன் தன்னை சந்தித்ததையும் பேசிய விஷயத்தையும் கூறினான் உதயா.

மானசி சாதகமான பதிலையே சொல்வாள்.. விட்டுப்போன உறவு நீடிக்கும் என நம்பிக்கை கொண்டிருந்த சாரதாவுக்கும் ரவிச்சந்திரனுக்கும் இது அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் உதயாவின் முடிவை மறுத்து பேசும் எண்ணம் அவர்களுக்கு துளியும் இல்லை.

“நம்ம கல்யாணம் நடக்க வேண்டாம் உதி..” என அஞ்சலி சொல்ல.. இவளுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா என சோர்வாக அவளை பார்த்தான் உதயா.

“அஞ்சு.. நீ ஏன் இப்டி பேசுற.. மாமா தான் ஏதோ புரிஞ்சுக்காம பேசுறாங்கனா நீயுமா.. யாருக்காகவும் உன்னையும் விபுவையும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் போதுமா..” என்றான் உதயா.

“மாமாவுக்காக இல்லை உதி.. மானசிக்காக..” என சொன்ன அஞ்சலி கையை நீட்ட.. அங்கே கண்ணீருடன் மானசி நின்றிருந்தாள்.

மானசி இன்னும் தன் விருப்பத்தை சொல்லாததால் அவள் விருப்பம் குறித்து அறியாமல் மாமாவிடம் அவசரப்பட்டு பேசிவிட்டோமோ.. தான் மானசியின் விருப்பம் குறித்து யோசித்திருக்க வேண்டும் என எண்ணினான் உதயா.

உறவு நீடிக்காமல் போகிறதே என வருந்திக் கொண்டிருந்த சாரதாவும் ரவிச்சந்திரனும் மானசியின் கண்ணீரை கண்டு செய்வதறியாது திகைத்து நின்றனர்.

“சாரிடா.. நா.. நான் இதைப்பத்தி யோசிக்காம அவசரப்பட்டு பேசிட்டேன்.. நா.. நான் மாமா கிட்ட திரும்ப பேசி பார்க்கிறேன்..” என உதயா சொல்ல.. ஓடிவந்து அவன் மடியில் முகம் புதைத்து அழத்தொடங்கினாள் மானசி.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top