WatTruyen.Top

வரம் நீயடி..

💞 11 💞

jamunaguru

அஞ்சலியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அறிந்த காவ்யாவுக்கு வருத்தமாக.. குற்றவுணர்வாக இருந்தது. இனியாவது அவள் வாழ்வில் நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மறுமணம் குறித்து பேசினாள்.

அஞ்சலி மறுத்து பேசியதும்.. விபுவுடன் அஞ்சலி என்ன மாதிரியான துன்பங்களை எதிர்கொள்ள நேரும் என்ற நடைமுறை சிக்கல்களை எடுத்துரைத்தாள் காவ்யா.

இன்னொருவன் தன்னை ஏற்றுக் கொள்ளலாம் விபுவை எப்படி ஏற்றுக் கொள்வான் என மறுத்து பேசினாள் அஞ்சலி.

அஞ்சலி உதயா குறித்தும் உதயாவின் குடும்பம் குறித்தும் கூறியதில் ஏற்பட்ட நல்லெண்ணத்தால்.. “வேற யாரையோ ஏன் யோசிக்கிற.. உதயாவையே கல்யாணம் பண்ணிக்கோ..”என காவ்யா சொல்ல ஒரு நொடி அதிர்ந்தாள் அஞ்சலி.

“என்ன பேசுற நீ.. நான் கஷ்டப்படுறத பார்த்துட்டு உதி ஹெல்ப் பண்ணான்.. அதுக்காக காலம் முழுக்க என்னை ஏத்துக்கோனு எப்டி சொல்ல முடியும்..” என்றாள் அஞ்சலி.

“அப்டி சொல்லலை அஞ்சலி.. உதயாவும் அவங்க வீட்டில எல்லாரும் உன்மேலயும் விபு மேலயும் பாசமா இருக்காங்க.. அவங்க உன்னை ஏத்துப்பாங்க.. யோசிச்சு பாருனு தான் நான் சொல்றேன்.. காலம் முழுக்க தனியாவே இருந்துடலாம்னு நினைக்காத..

வேலைக்கு போய்ட்டு.. டயர்டா வந்து கைக்குழந்தையையும் பார்த்துக்கிட்டு.. யோசி.. அன்பா ஆதரவா பார்த்துக்கிற ஒரு துணை உனக்கும் விபுவுக்கும் இருக்கிறது நல்லதுனு தான் சொல்றேன்..” என காவ்யா அஞ்சலியின் நலன் கருதி பேசினாள்.

காவ்யா பேசியது அஞ்சலியின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. “உதி நல்ல நண்பன்.. மருத்துவமனையில் தனிமையில்.. விபுவையும் வைத்துக்கொண்டு இனி என்ன செய்வது என தவித்துக் கொண்டிருந்த வேளையில் உதி உதவினான்.

இன்றுவரை உதி மட்டுமல்லாது  சாரதா ரவிச்சந்திரன்.. மானசி என எல்லோரும் அன்பாக கவனித்துக் கொள்கின்றனர். சாரதா மட்டும் அருகில் இல்லையென்றால்.. தனியாக விபுவை எப்படி பார்த்துக் கொண்டிருப்பேனோ.. தெரியவில்லை.. ஒரு அம்மாவாக எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தது அவர்தான்..

ஏற்கனவே உதி எல்லா பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருப்பது உறுத்தலாக தான் இருக்கிறது.. இதில் காலம் முழுக்க என்னையும் விபுவையும் ஏற்றுக் கொள் என்றால் எப்படி..

உதி வாழ்வில் வேறு ஒரு பெண் இருக்கலாம்.. உதியின் வாழ்வு குறித்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏதேதோ கனவுகள் இருக்கலாம்.. இதையெல்லாம் யோசிக்காமல் பேசுகிறாளே..” என தனக்குள்ளே குழம்பிக் கொண்டிருந்தாள் அஞ்சலி.

விபு புன்னகைத்துக் கொண்டிருக்க.. அவன் புன்னகையை எப்போதும் ரசிக்கும் அஞ்சலியின் பார்வை விபு மீதிருந்தாலும்..  அவள் எண்ணங்கள் எங்கெங்கோ சுழன்று கொண்டிருந்தது.

உதயா வந்ததை அறிந்தாலும் மனதில் இருந்த குழப்பத்தில் அஞ்சலிக்கு பேச தோன்றவில்லை.

தன் காதலை சொன்னபின் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எண்ணியே தயங்கிக் கொண்டிருந்த உதயாவுக்கு.. சாரதாவின் பேச்சு சற்று பலம் தந்தது.

ஆனாலும் தயக்கமும் தவிப்புமாக வீட்டுக்கு வந்தவன்  யோசனையில் ஆழ்ந்திருந்த அஞ்சலியிடம் “என்ன யோசிச்சிட்டு இருக்க அஞ்சு..” என கேட்டான்.

தன் மனதில் இருந்த குழப்பத்தை வெளிப்படுத்த முடியாததால்.. பதில் சொல்லத் தெரியாமல் விழித்த அஞ்சலி.. விபுவை பார்த்தாள். விபுவின் புன்னகையை கண்டதும்.. “அ.. அது.. விபு எப்ப வளர்ந்து என்னை அம்மானு கூப்பிடுவான்னு இருக்கு..” என்றாள் அஞ்சலி.

சில நொடிகள் மௌனமாக இருந்த உதயா.. “விபு அப்பானு என்னை கூப்பிடணும்னு நான் ஆசைப்படுறேன் அஞ்சு..” என்றான்.

அஞ்சலி மனதில் எதை எண்ணி குழம்பிக் கொண்டிருக்கிறாளோ.. அந்த குழப்பத்தை தீர்த்து வைத்தான் உதயா.

அஞ்சலி அதிர்ச்சியுடன் உதயாவை பார்க்க.. விபுவின் மென்விரல்கள் பற்றியபடி.. விபுவை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான் உதயா. தன் மனதை.. தன் நேசத்தை.. வெளிப்படுத்திவிட்ட நிம்மதி உதயாவுக்கு.

“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் அஞ்சு.. அதுக்கு பேர் காதலானு எனக்கு தெரியாது..

அன்னைக்கு ஹாஸ்பிட்டல நீ தனியா அழுதுட்டு இருந்ததை பார்க்கும்போது உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு மட்டும் தான் தோணுச்சு.. வேற எதுவும் என் மனசில இல்லை..

நீ அந்த சம்பத்தால பட்ட கஷ்டத்தை சொன்னப்ப தான்.. இனி நீயும் விபுவும் சந்தோஷமா இருக்கணும்.. அந்த சந்தோஷம் என்னால கிடைக்கணும்னு தோணுச்சு.. நீங்க இரண்டு பேரும் தான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணினேன்.. நீ யோசிச்சு உன் முடிவை சொல்லு அஞ்சு.. நீ என்ன முடிவெடுத்தாலும் நான் ஏத்துப்பேன்..” என்ற உதயா தன்னறைக்கு சென்றுவிட்டான்.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்த அஞ்சலிக்கு எல்லாம் தெளிவானது போல இருந்தது. காவ்யா சொன்னது போல உதி அவளையும் விபுவையும் ஏற்றுக் கொள்கிறேன் என்கிறான்.

உதயா தன்னைக் கண்டது முதல் நடந்ததை எண்ணி பார்த்தாள் அஞ்சலி. உறக்கம் தொலைத்து விபுவை கவனித்துக் கொண்டதாகட்டும்.. விபுவுக்கென பார்த்து பார்த்து வாங்கி வந்த பொருட்கள்.. தனக்கும் எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்திருக்கிறான் இவ்வளவு நாள்.. உதியை மறுப்பது முட்டாள்தனம் என தோன்றியது அஞ்சலிக்கு.

ஆனால் உதியின் அப்பா அம்மா.. விவாகரத்து பெற்ற ஒருத்தியை.. அதுவும் குழந்தையோடு இருப்பவளை.. தங்கள் ஒரே மகன் இரண்டாவதாக மணக்க எப்படி சம்மதிப்பார்கள்.. அஞ்சலிக்கே அது நியாயமாக தோன்றவில்லை.

இல்லை.. நான் உதிக்கு வேண்டாம்.. வேண்டாம்.. என அஞ்சலியின் மனம் சொல்லியது.

அப்டினா அதுக்கு அப்புறம்.. அப்புறம்.. உதிக்கு பாரமா இருக்க கூடாது.. இந்த வீட்டை விட்டு போய்டணும்.. இந்த வீட்டை விட்டு போகணுமா.. எ.. எங்க போவேன்.. என்ன பண்ணுவேன்.. விபுவை எப்டி பார்த்துப்பேன்..

அம்மா அப்பா மானசி.. எல்லாரலயும் இழக்கணுமா.. இந்த அன்பு பாசம் எதுவுமே இல்லாம திரும்பவும் அதே தனிமை.. யாருமில்லாத ஒரு வாழ்க்கை.. விபுவும் நானும் மட்டுமா.. என் வயித்தில பிறந்த பாவத்துக்கு விபுவுக்கும் எந்த சொந்தமும் இல்லாம போகணுமா..

உறக்கத்தில் இருந்த விபுவின் முகத்தை பார்த்து ஏதேதோ எண்ணியபடியே கண்ணீர் வடித்தாள் அஞ்சலி. எவ்வளவு நேரம் கடந்தது என தெரியவில்லை.

“அஞ்சு..” என்ற உதயாவின் குரல் அஞ்சலியை நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

இந்த இரண்டு வருஷம் என் வாழ்க்கைல இல்லாம இருந்திருக்கலாம்.. அப்பா அம்மா ஆக்சிடெண்ட்ல என்னை விட்டு போகாம இருந்திருக்கலாம்.. சம்பத் என் வாழ்க்கைல வராம இருந்திருக்கலாம்.. நீயே விபுவுக்கு அப்பாவா இருந்திருக்கலாம் உதி.. என எண்ணியபடியே கலங்கிய கண்களோடு உதயாவை பார்த்தாள் அஞ்சலி.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top