❤ 02
குழந்தை போல் சிரித்துக் கொண்டிருந்த அவள் முகம் கண்டதும் சுற்றியிருந்த சூழ்நிலை கூட செழியனின் கவனத்தில் இல்லை.
அங்கே ஆர்த்தி சித்ராவை முறைத்தபடி.. “நீ பேசாத..” என்றாள்.
“சாரி.. சாரி.. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. ஹாஸ்பிட்டல் போய்ட்டு இப்பத்தான் வந்தேன்.. அண்ணி தான் மண்டபத்தில இருந்து கிளம்பிட்டீங்கனு சொன்னாங்க.. அதான் நேரா இங்க வந்தேன்..” என ஆர்த்தியை சமாதானம் செய்து கொண்டிருந்தாள் சித்ரா.
சில நொடிகளில்.. ஆர்த்தி.. “சரி அம்மாவுக்கு இப்ப எப்டி இருக்கு..”என கேட்டாள் லேசான முறைப்புடன்.
“ம்.. இப்ப பரவாயில்லை..” என்ற சித்ரா மீண்டும் குழந்தையுடன் விளையாடத் தொடங்கினாள்.
“சித்து.. சாக்கி.. சாக்கி..”என கை நிறைய சாக்லேட்டுடன் குதித்தாள் குழந்தை. “சித்துக்கு..”என ஏக்கமான குரலுடன் கேட்டாள் சித்ரா.
குழந்தை மறுப்பாக தலையசைக்க.. “ஒன்னே ஒன்னு.. ப்ளீஸ்.. செல்லம்ல..” சித்ரா கெஞ்சிய அழகில் சாக்லேட்டை நீட்டியது குழந்தை.
ஒன்றை மட்டும் சித்ரா புன்னகையோடு எடுத்துக் கொள்ள.. ஆர்த்தியின் அம்மா அழைக்கும் சத்தம் கேட்டதும் அங்கிருந்து சென்றுவிட்டாள் சித்ரா.
செழியன் அசைவின்றி நின்றிருப்பதை பார்த்த ஆர்த்தி.. “டேய் என்ன அப்டி நின்னுட்டு இருக்க..”என கேட்டாள்.
என்ன பதில் சொல்வதென அறியாது நின்றிருந்தான் செழியன். செழியனின் பார்வை இருந்த திசையை கவனித்த ஆர்த்தி.. ”சித்ராவும் அம்மாவும் இங்கதான் பக்கத்து தெருவில இருக்காங்க டா.. இப்ப கொஞ்ச நாளா தான் சிரிக்கிறா.. அதுவும் பாப்பா கூட இருக்கும் போது தான்..” என்றாள் செழியன் எதுவும் கேட்காமலே அவன் மனம் அறிந்தவள் போல.
ஆர்த்தி சொன்னது மனதில் பதிந்தாலும்.. செழியனின் நினைவெல்லாம் சித்ராவை சுற்றிக் கொண்டு இருந்தது.
ஆர்த்தி செழியனிடம்.. “நீ இன்னும் அவ மேல கோபமா இருக்கீயா..”என கேட்டாள்.
“நானா.. கோபமா.. அதுவும் என் சித்.. இல்லை இது தப்பு.. அவ மனசில நான் இல்லை.. அவ மேல எனக்கு என்ன கோபம் இருக்கப் போகுது..”என மனதில் நினைத்த செழியன் இல்லையென தலையசைத்தான்.
“எப்பவாச்சு தான் போன் பண்ண.. அப்டி பேசும் போது கூட.. அவளை பத்தி நீ எதுவுமே கேட்கவேயில்லை..இவ்ளோ நாளா.. அதான்.. அப்டி கேட்டேன்..”என்றாள் ஆர்த்தி.
“அவ இங்க இருக்கிறது எனக்கு தெரியாது.. ஒரு வேளை தெரிஞ்சாலும் எப்டி கேட்கிறதுனு தயக்கம் தான் இருந்திருக்கும்..”என ஆர்த்தியின் கேள்விக்கான பதிலை தன் மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டான் செழியன்.
சில நிமிடங்கள் கடந்த பின்னரே.. தான் மட்டுமே அந்த அறையில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான் செழியன். ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தவன் அந்தக் குரல் கேட்டதும் மனமெல்லாம் இனம்புரியா பரவசம் சூழ்ந்தது.
செழியனின் பரவசத்துக்கு காரணம் சித்ராவின் “செழியன்..” என்ற அழைப்பு தான்.
லேசான படபடப்பும் பதற்றமுமாக திரும்பி பார்த்தான் செழியன். அங்கே இயல்பான புன்னகையோடு நின்றிருந்தாள் சித்ரா.
“எப்டி இருக்க செழியன்..”என கேட்டாள் சித்ரா.
எளிமையான கேள்வி தான்.. பதில் தான் தொண்டையை தாண்டி வரமறுத்தது செழியனுக்கு.
லேசான புன்முறுவலோடு.. “ம்.. நீ எப்டி இருக்க..”என கேட்டான் செழியன்.
“ம்.. இருக்கேன்..”என்றாள் சித்ரா.
வருடங்கள் பல கடந்த பிறகான சந்திப்பு இருவருமே அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்பது போல் புன்னகையை மட்டும் பரிமாறிக் கொண்டனர்.
ஆர்த்தி ஆகாஷ் வீட்டிற்கு கிளம்பியதும் அங்கிருந்து கிளம்பினர் செழியனும் சித்ராவும்.
சித்ரா செழியனை வீட்டுக்கு அழைத்தாள். மறுக்க மனமின்றி அவளுடன் நடந்தான் செழியன்.
“என்ன பண்ற செழியன்.. இப்ப எங்க இருக்க..” என இயல்பாக கேட்டாள் சித்ரா.
“ம்.. மும்பை.. பெங்களூர்ல இரண்டு வருஷம்.. அப்புறம் இப்ப வரைக்கும் மும்பைல தான்..” என்றான் செழியன்.
வெறுமனே தலையை அசைத்தபடி கேட்டுக் கொண்டாள் சித்ரா.
“நீ என்ன பண்ற..”என கேட்டான் செழியன் சித்ராவிடம்.
“என்ன பண்ண.. ஏதோ பண்றேன்..” என சற்று வேண்டா வெறுப்பாக முதலில் பதில் வந்தது.. அப்புறம் என்ன நினைத்தாலோ.. “இங்க தான் ஒரு ப்ரைவேட் காலேஜ்ல லெக்சரர்.. கரஸ்ல பிஜி முடிக்கப் போறேன்.. அதுவும் கூட காலேஜ்ல கம்பல் பண்ணாங்க அதான்..” என சொன்னாள் சித்ரா.
அவள் முன் போல இல்லை என்பதை மட்டும் உணர முடிந்தது செழியனால்.
இருவரும் பேசிக் கொண்டே.. சித்ராவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். “வினோத் அண்ணா தான் இந்த வீடு பார்த்து தந்தாங்க.. இரண்டு பேருக்கு இது ரொம்பவே அதிகம் தான்..”என லேசான புன்னகையோடு சொன்னாள் சித்ரா.
வினோத் ஆர்த்தியின் அண்ணன்.. அப்படியானால் ஆர்த்தியின் குடும்பத்தோடும் சித்ரா தொடர்பில் இருந்திருக்கிறாள்.. பக்கத்து தெருவில் தானே இருக்கிறார்கள்.. முன்பே ஆர்த்தியிடம் சித்ரா பற்றி கேட்டு அறிந்திருக்கலாம்.. ஆனால் ஏன் அப்படி எதுவும் அறிந்து கொள்ளாமல் விலகியிருக்க விரும்பினான் என இப்போது அவனுக்கே புரியவில்லை.
கதவை திறந்த சித்ரா.. அங்கங்கே சிதறிக் கிடந்த சில பொருட்களை ஒதுங்க வைத்தபடி.. “அம்மா.. அம்மா..”என அழைத்தாள்.
“அம்மாவுக்கு இரண்டு நாளா இருமல் ரொம்ப அதிகமா இருந்துச்சு.. அதான் மருந்து சாப்டு தூங்குறாங்க.. நான் இப்ப வந்துடுறேன்.. நீ உட்காரு..”என்ற சித்ரா அங்கிருந்து நகர்ந்தாள்.
அறையில் தூங்கிக் கொண்டிருந்த தன் தாய் கமலியை சித்ரா எழுப்பும் சத்தம் கேட்டது செழியனுக்கு.
அறையில் இருந்து வெளியே வந்த சித்ராவிடம்.. “அம்மாவை எதுக்கு டிஸ்டர்ப் பண்ற.. அவங்க தூங்கட்டும்..” என்றான் செழியன்.
லேசான சிரிப்புடன்.. “சாப்பிட வேணாமா அவங்க..”என்ற சித்ரா.. “நீ சாப்பிடுறீயா..”என கேட்க.. வேண்டாம் என மறுத்தான் செழியன்.
“நான் காபி போடுறேன் உனக்கு..”என்றவாறு அங்கிருந்து நகர்ந்த சித்ரா.. “பயப்படாத.. காபி நல்லா தான் இருக்கும்..”என சொல்ல.. செழியனின் இதழ்கள் தானாக மலர்ந்தது.
முகம் கழுவிவிட்டு வந்த கமலி.. செழியனிடம் பேசிக் கொண்டிருக்க.. கமலிக்கு சாப்பாடும் செழியனுக்கு காபியுமாக அங்கே வந்தாள் சித்ரா.
“தம்பியையும் சாப்பிட சொல்லிருக்கலாம்ல மா..”என்றார் கமலி சித்ராவிடம்.
சித்ரா பதில் சொல்லுமுன்.. “நான் இப்பத்தான் கல்யாண வீட்டில சாப்பிட்டேன் மா..”என்றான் செழியன்.
செழியனின் பதிலை கேட்டதும் கமலியின் முகம் வாடுவதை கவனித்த சித்ரா.. தன் கீழ் உதட்டை பற்களால் அழுந்த கடித்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
கமலி சித்ராவின் திருமணத்தை பற்றி ஏதுவும் பேசத் தொடங்கும் முன்.. சித்ரா செழியனிடம் பேசுவது போல அந்த சூழ்நிலையை இயல்பாக்க முயற்சித்தாள்.
ஒரு சில நொடிகளே எனினும்.. செழியனின் பார்வையில் விழுந்த சித்ராவின் செய்கை.. அவனை கடந்த காலத்திற்கு இழுத்துச் சென்றது.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top