WatTruyen.Top

நேசிக்க நெஞ்சமுண்டு..

❤ 01

jamunaguru

எவ்வளவு நாட்கள் கடந்துவிட்டது.. நாட்களா.. சில வருடங்கள் ஆயிற்று.. சொந்த ஊர் காற்றை சுவாசித்தபடி அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினான் செழியன்..

வீடு வந்து சேர்ந்த சில நிமிடங்களில் நுரை பொங்க ஆற்றிக் கொண்டே காபியை கொண்டு வந்து நீட்டினார் செழியனின் அன்னை வைதேகி.

காபியை வாங்கிக் கொண்டவன் ஜன்னல் அருகில் நின்றபடி தன் பார்வையை வெளியே செலுத்தினான்.

“சொல்லுங்க..”என அன்னை வைதேகி மெல்லிய குரலில் தன் தந்தை சத்யநாதனிடம் பேசுவது கேட்டது. தன்னிடம் ஏதோ சொல்ல விழைகிறார்கள் இருவரும் என்பது நன்கு புரிந்தாலும்.. காதில் விழாதவன் போல தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான் செழியன்.

தோட்டத்தை இன்னும் அதே போல அழகாகவே பேணுகிறாள் அன்னை என்பது மட்டும் புரிந்தது. ஒரு நொடி தன் அன்னையிடம் விழிகள் விரித்து ஆச்சரியமாக செடிகளை பற்றி விசாரித்த அவளின் முகம் கண்முன் வந்து போயிற்று.

தன் தொண்டையை செறுமிக் கொண்டு பேசத் தொடங்கினார் சத்யநாதன். “செழியா.. ஏன் ப்பா இப்டி பண்ற.. எங்க மேல எதுவும் கோபமா.. நீ அப்டி கோபப்படுற அளவுக்கு நாங்க எதுவும் பண்ண மாதிரி கூட நியாபகம் இல்லை.. வருஷக் கணக்கா.. வீட்டுக்கு வராம.. ஏன் இப்டி பண்ற.. அப்டி நீ ஓடி ஓடி உழைக்கணும்னு எந்த அவசியமும் இல்லை ப்பா..”என்றார் அக்கறையும் அன்பும் கலந்த குரலில்.

செழியன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வைதேகி.. “நீ இனிமே இங்கே தான் இருக்கணும்.. வேலைக்கு போ.. இல்லை போகாம இரு.. ஆனா இங்கதான் இருக்கணும்.. அதான் என் முடிவு சொல்லிட்டேன்..” என்றார் லேசான கோபத்துடன்.

பெரியவர்கள் இருவரும் அறையில் இருந்து சென்று விட்டது அறிந்ததும் ஒரு பெருமூச்சுடன் திரும்பினான் செழியன்.

அவர்கள் சொல்வதை எல்லாம் அப்டியே செய்துவிட அவனால் முடியுமா.. தெரியவில்லை.. இங்கேயே இருக்க முடிந்திருக்குமானால் ஏன் வேலையை காரணம் காட்டி ஓடி ஒளியப் போகிறான்.

காபியை குடித்துவிட்டு காலி டம்ளரை அருகிலிருந்த மேஜை மேல் வைத்தவன் பார்வை மீண்டும் வெளியே சென்றது.

அன்னையின் ஆதங்கத்திலும் நியாயம் இருக்கிறது தானே.. ஐந்து வருடங்கள் ஆகப்போகிறது.. அக்காவுக்கு குழந்தை பிறந்த போது பெங்களூரில் இருக்கும் அவள் வீட்டில் தான் அவனை அவர்களும் அவர்கள் அவனையும் கடைசியாக சந்தித்தது.

என்னதான் வாரம் ஒருமுறையோ அல்லது இரு முறையோ போனில் பேசிக் கொண்டாலும் பெற்ற மகனை பார்க்க அவர்களுக்கு ஏக்கம் இருக்காதா.. எவ்வளவு வயது ஏறினாலும் பெற்றவள் கண்ணுக்கு அவன் இன்னும் குழந்தை தானே..

இப்போதும் கூட அவளை பார்க்க அவன் வரவில்லையே.. நெருங்கிய தோழி ஆர்த்தியின் திருமணத்திற்காக தானே இங்கே வந்திருக்கிறான்.. அந்த ஆதங்கம் தான் வைதேகிக்கு.

செழியனின் எண்ணங்கள் எங்கெங்கோ வட்டமடித்துக் கொண்டிருக்க.. ஆர்த்தி போனில் அழைத்தாள்.

“என்னடா வந்துட்டீயா.. இல்லை.. வேலை அது இதுனு எதும் காரணம் சொல்லப் போறீயா..”என கேட்டாள் ஆர்த்தி.

“வந்துட்டேன்.. வீட்டில தான் இருக்கேன்..”என்று செழியன் சொன்னதும் உற்சாகம் ஆனாள் ஆர்த்தி.

“ரொம்ப தேங்க்ஸ் டா.. சடனா பிக்ஸ் பண்ணதால யாருக்கும் சொல்ல முடியலை.. எங்க நீயும் வரமாட்டீயோனு நினைச்சேன்..” என்றாள் ஆர்த்தி.

லேசான புன்முறுவலுடன்.. “நான் வராம எப்டி..” என்றான் செழியன்.

சந்தோஷத்துடன்.. “சரிடா.. காலையில கொஞ்சம் சீக்கிரம் வா.. மண்டபத்துக்கு வந்துடு.. அம்மா கூப்பிடுறாங்க.. நான்..”என ஆர்த்தி சொல்லிக் கொண்டிருக்கையில் இடைமறித்தான் செழியன்.

“கூப்பிடுறது அம்மா தானா..”என கேட்டான் செழியன்.

“ஏன் அப்டி கேட்கிற.. அம்மா தான் கூப்பிடுறாங்க..”என்றாள் ஆர்த்தி.

“நான் கூட மாப்பிள்ளை சாரிடம் இருந்து அழைப்போனு நினைச்சேன்..” என்றான் செழியன் கேலியான குரலுடன்.

அம்மா அழைத்ததை மறந்து அவனிடம் சில நிமிடங்கள் உரையாடி விட்டு தான் போனை வைத்தாள் ஆர்த்தி. செழியனுக்கும் மனம் லேசானது போலிருந்தது.

ஆர்த்தியின் திருமணத்தில் அவளை சந்திக்க நேருமோ.. அவள் இப்போது எப்படி இருக்கிறாளோ.. நிகழ்ந்த எல்லாவற்றையும் மறந்திருப்பாளோ.. ஒருவேளை திருமணம்.. இல்லை.. இருக்காது.. இருக்காது என்பதற்கு என்ன உறுதி.. என்ற கேள்விக்கு விடையில்லை தான். ஏதேதோ எண்ணங்களுடன் உறங்க நெடுநேரம் ஆகிற்று.

அடுத்த நாள் ஆர்த்தியின் திருமணம்.. முகூர்த்த நேரத்துக்கு முன்பாகவே சென்று விட்டதால் ஆர்த்தியுடன் உரையாட சில நிமிடங்கள் கிடைத்தது.

செழியன் கவனித்த வரையில் நட்பென்று அவன் மட்டுமே திருமணத்திற்கு வந்திருப்பதாக தோன்றியது. மாப்பிள்ளை திருமணம் முடிந்ததும் வெளிநாடு செல்வதால் அவசரமாக எல்லாம் நிச்சயிக்கப் பட்டதாக ஆர்த்தி சொன்னாள்.. அதனால் கூட இருக்கலாம் என்று எண்ணினான் செழியன்.

அவள் ஏன் வரவில்லை.. ஒருவேளை அவள் ஆர்த்தியுடனும் தொடர்பில்லாமல் தான் இருக்கிறாளோ.. என யோசித்தான் செழியன்.

ஆர்த்தி ஆகாஷ் திருமணத்தின் எல்லா நிகழ்வுகளிலும் குடும்ப உறுப்பினர் போல உடனிருந்தான் செழியன்.. திருமணம் முடிந்து எல்லோரும் மண்டபத்தில் இருந்து ஆர்த்தியின் வீட்டுக்கு செல்லும் வரை செழியனும் இருந்தான்.

வண்டியில் இருந்து எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டிருந்த ஆர்த்தியின் அண்ணியிடம்.. “நான் எடுத்துட்டு வர்றேன்.. நீங்க போங்க..” என்றான் செழியன்.

பொருட்களுடன் வீட்டினுள் செழியன் நுழைந்த போது.. அவன் கண்கள் அவளைத்தான் முதலில் கண்டது.

ஆர்த்தியின் அண்ணன் மகளிடம் விளையாடிக் கொண்டிருந்தாள் அவள்.

செழியனின் மனம் மெல்ல.. அவள் பெயரை உச்சரித்தது.. சித்ரா.. ❤❤

❤❤ I hope you all support this story too.. Read and tell your comments..

   Jamuna ❤❤
 

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top