WatTruyen.Top

தொடுவானம்

❤ 04 ❤

jamunaguru

மித்ரா கார்த்தியை பார்ப்பதற்காக ஊருக்குச் சென்றாள். வழக்கமான சந்தோஷம் மித்ராவின் மனதில் இல்லை.

அவன் முகமும்.. அந்தக் கண்களும்.. அந்த வசீகரமும்.. அதில் தான் தொலைந்தது போல் உணர்ந்தாள் மித்ரா.

இதுவரையில் எந்த ஆணிடமும் இதுபோலொரு ஈர்ப்பு மித்ராவுக்கு வந்ததில்லை.

அந்த அரை நொடி தடுமாற்றம்.. மித்ராவை கலங்கச் செய்தது.. தன்னை நம்பி தன் தம்பி இருக்கிறான்.. அவனை டாக்டராக்க வேண்டும்.

அவன் நினைவிலிருந்து தன்னை வலுக்கட்டாயமாக பிரிக்க மனதிற்குள் போராட்டமே நடத்திக் கொண்டிருந்தாள்.

ஆனால் சாருவோ.. மித்ராவுக்கு பொருத்தமான ராஜகுமாரன் அவன் தான் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

கார்த்தி.. மித்ராவை கண்ட உற்சாகத்தில் இருந்தான். மித்ரா மனதில் உள்ள நினைவெனும் பாரத்தை மறைத்து.. அவனிடம் சந்தோஷமாக உரையாடினாள்.

தான் கார்த்திக்கு வாங்கிய பேனாவை கார்த்தியிடம் கொடுத்தாள் மித்ரா.

"தேங்க்ஸ் க்கா.. ரொம்ப சூப்பரா இருக்கு.. நான் இதை வச்சு தான் எல்லா எக்ஸாமும் எழுதுவேன்.."என கார்த்தி பேசிக் கொண்டிருந்தான்.

மித்ரா அவன் சந்தோஷத்தில் தானும் சந்தோஷத்தை உணர்ந்தாள்.

"ஆனா ஏன் க்கா.. இவ்ளோ காஸ்ட்லியா வாங்குன.."என கார்த்தி கேட்டான்.

"பரவாயில்லை டா.. இருக்கட்டும்.. எனக்கு இதான் பிடிச்சிருந்துச்சு அந்தக் கடையில.."என மித்ரா சொல்லவும் அன்றைய நிகழ்வுகள் மனதில் ஊஞ்சலாடியது.

"உனக்கு பிடிச்சது எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.."என கார்த்தி சொல்லிக் கொண்டிருக்க.. அப்போது குடிபோதையில் தள்ளாடியபடி வந்து சேர்ந்தார் மித்ராவின் அப்பா சீனிவாசன்.

"மித்ரா.. நீ எப்ப வந்த.. அப்பாவுக்கு கொஞ்சம் பணம் தா.. டா.."என மதுவின் மயக்கத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

"கிளம்பும் போது தர்றேன்.. சாப்பாடு எடுத்து வைக்கவா.."என கேட்டாள் மித்ரா.

அவர் சரியென தலையாட்ட.. அவருக்கும் கார்த்திக்கும் மித்ரா பரிமாறினாள்.

"அப்டியே லட்சுமி கைபக்குவம் மித்ரா உனக்கு.. லட்சுமி இருந்திருந்தா.. உன்னையும் கார்த்தியையும் நல்லா பார்த்திருப்பா.. அவ போய் சேர்ந்துட்டா.. நீயும் கஷ்டப்படுற.. நானும் எப்டியோ ஆகிட்டேன்.."என ஏதேதோ பேசிக்கொண்டே சாப்பிட்டார் சீனிவாசன்.

அவர் சாப்பிட்டு முடித்ததும் அவரை படுக்க வைத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்த மித்ரா தன் அம்மா லட்சுமியின் போட்டோவை பார்த்தபடியே நின்றிருந்தாள் சில நிமிடங்கள்..

அடுத்த நாள் மித்ரா அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருக்க.. அங்கே வந்த சீனிவாசன்.. "மித்ரா.. கிளம்பிட்டீயா.. காசு தர்றேனு சொன்னல்ல.."என கேட்டார்.

மித்ரா அவரிடம் இரண்டாயிரம் ரூபாய் தாளை நீட்டினாள். அவர் சிரித்தபடி அதை பெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

கார்த்தி மித்ராவிடம்.. "அக்கா.. அவருக்கு ஏன் அவ்ளோ பணம் கொடுக்கிற.. மொத்தத்தையும் குடிச்சி முடிச்சா தான் அவர் நிம்மதியா இருப்பாரு.. அவருக்கு குடி மட்டும் தான் முக்கியம்.. அவர்லாம் என்ன மனுஷனோ.."என திட்டிக் கொண்டிருந்தான்.

"கார்த்தி.. அப்பாவை அப்டிலாம் பேசாத.. அம்மா நம்மளை விட்டு போகும் போது உனக்கு இரண்டு வயசு.. எனக்கும் அவ்ளோ விவரம் தெரியாது.. நான் ஒருபக்கம் 'அம்மா எங்க அம்மா எங்க'னு கேட்டுட்டு இருப்பேன்.. நீயும் அழுதுட்டே இருப்ப.. வேலைக்கு போய்ட்டு வந்து இரண்டு பேரையும் சமாளிச்சிட்டே.. சமையலும் பண்ற அப்பா தான் இன்னும் என் மனசில இருக்காரு..

இப்ப தான் இப்டி குடிக்கு அடிமையாகிட்டாரு.. அடுத்த தடவை நான் வரும் போது.. குடியில இருந்து மீள்றதுக்கு rehabilitation centerல சேர்க்கலாம்.. நான் அப்பா கிட்ட பேசுறேன்.."என மித்ரா பேசியதை கேட்டுக் கொண்டிருந்த சீனிவாசனின் கண்கள் கலங்கியது..

"இந்தா.. நீ கையில கொஞ்சம் காசு வச்சுக்கோ.."என கார்த்தியிடம் கொஞ்சம் காசு கொடுத்தாள் மித்ரா.

"நல்லா படி.. எக்ஸாம் நல்லா எழுது.. நான் கிளம்புறேன்.."என கார்த்தியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் மித்ரா.

"அப்பா.. அப்பா.."என மித்ரா அழைத்தாள்.

"அதான் கையில காசு இருக்குல்ல.. கடையைத் தேடி போயிருப்பாரு.."என கார்த்தி சொன்னான்.

தன் மகள் பேசியதைக் கேட்டு கலங்கியிருந்த கண்களை துடைத்தபடி வெளியே வந்த அவர் தலையைக் குனிந்தபடி நின்றிருந்தார்.

"அப்பா.. நாளைல இருந்து கார்த்திக்கு பப்ளிக் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது.. கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோங்க அவனை.."என்று மித்ரா சீனிவாசனிடம் சொன்னாள்.

பதிலுக்கு சரியென தலையை மட்டும் அசைத்தார் அவர். நிமிர்ந்து பாராமல் அவர் அப்படி இருந்தது மித்ராவுக்கு ஏதோ உறுத்தலாக இருந்தது.

இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினாள் மித்ரா.

ஹாஸ்டலுக்கு மித்ரா திரும்பி வந்தபோது.. சாரு ரொம்ப ஆவலாக "மித்ரா.. சொல்லு.. சொல்லு.. கனவு வந்துச்சா.. கனவில அவர் வந்தாரா.."எனக் கேட்டாள்.

"சாரு.. அது ஒரு சாதாரண incident.. அதை ஏன் இவ்ளோ பெருசுபடுத்துற.."என மித்ரா பதிலளித்தாள்.

"நீ எப்பவும் இப்டித்தான் மித்ரா.. வேணா பாரு.. அவரை நீ திரும்பவும் மீட் பண்ணுவ.. அவர் தான் உன் ராஜகுமாரன்.. நான் நம்புறேன்.."என சாரு சொன்னாள்.

மித்ராவுக்கு அது போல் நடக்கும் என்று துளிகூட நம்பிக்கையோ.. அல்லது நடக்க வேண்டுமென்ற ஆசையோ இல்லை.. ஆனால் அவ்வப்போது அவன் முகம் நினைவில் வந்து செல்வது தான் உறுத்தலாக இருந்தது.

வேலையில் தன் கவனத்தை திசைதிருப்பியிருந்தாள் மித்ரா. சாரு மட்டும் தான் அடிக்கடி அதை நினைவூட்டியபடி இருந்தாள்.

கார்த்திக்கு போன் பண்ணி எக்ஸாம் எப்டி எழுதுனான்னு கேட்கலாம் என நினைத்தாள் மித்ரா.

கார்த்திக்கு போன் செய்ய.. "மித்ரா.. நல்லாயிருக்கீயா டா.."என்ற சீனிவாசனின் குரல் கேட்டது..

"ஆங்.. அப்பா நல்லா இருக்கேன்.. நீங்க வெளியே எங்கையும் போகலையா.."என மித்ரா கேட்டாள்.

"இல்லை டா.. கார்த்தி இன்னைக்கு நல்லா எழுதிருக்கேன்னு சொன்னான் டா.. நாளைக்கு தமிழ் செகண்ட் பேப்பராம்.. படிச்சிட்டு இருக்கான்.. நீயும் அவனை நல்லா படிக்கச் சொல்லு.."என சீனிவாசன் சொன்னார்.

மித்ரா கார்த்தியிடம் பேசிவிட்டு போனை வைத்தாள்.

அப்பாவிடம் நல்ல விதமான மாற்றம் தெரிகிறது என்பது மித்ராவுக்கு மகிழ்ச்சியை தந்தது.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top