13 பொய்
13 பொய்
இரண்டு நாட்களுக்குப் பிறகு
நிம்மதி இழந்து தவித்தாள் ஹரிதா. அன்று சுதர்சன் வெளிநாடு புறப்படுகிறான். அவள் அவனை அழைத்த போது, அந்த அழைப்பை அவன் ஏற்கவில்லை. வெளியில் வந்த அவள்,
"அண்ணா என்னை ஏர்போர்ட்டுக்குக் கூட்டிக்கிட்டு போ. நான் சுதர்சனைச் செண்ட் ஆஃப் பண்ணணும்." என்றாள்.
"அவனோட ஃபிளைட்டுக்கு இன்னும் டைம் இருக்கு. அவன் ஏர்போர்ட்டுக்குப் போனானான்னு கூடத் தெரியல."
"நான் அவருக்காக வெயிட் பண்ணுவேன். எப்படி இருந்தாலும் அவர் ஏர்போர்ட்டுக்கு வந்து தானே ஆகணும்?"
அப்போது, அவளைச் சுதர்சன் அழைப்பதைக் கேட்டாள்.
"ஹரி..."
அவனை நோக்கி ஓடிச் சென்றாள். அவள் கரத்தைப் பற்றினான் சுதர்சன்.
"உன்னைப் பார்க்காம நான் எப்படிப் போவேன்?"
"நானும் உங்க கூட ஏர்போர்ட்டுக்கு வரேன்"
"வேண்டாம், ஹரி. நாளைக்கு உனக்கு எக்ஸாம் ஆரம்பிக்குது. வீட்ல இருந்து படி."
"நான் ஏற்கனவே படிச்சிட்டேன். நீங்க கொடுத்த ரெக்கார்டிங்கை நான் பல தடவைக் கேட்டுட்டேன். நான் இப்போ தரோவா இருக்கேன். நான் அதை அப்படியே ஒப்பிச்சா, என்னோட ஸ்கிரைப் அதை எழுதிடுவாங்க."
"பரவால்ல, சுதா. நான் அவளை ஏர்போர்ட்டுக்குக் கூட்டிக்கிட்டு வரேன்." என்றான் உமபதி.
"சரி."
"நான் சுதா கூட கார்ல வரேன்."
"சரி, நான் பைக்ல வரேன்."
கார், விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. சுதர்சனின் கையைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ஹரிதா. அன்பாய் அவள் கையைத் தொட்டான் சுதர்சன்.
"மூணு மாசம் சீக்கிரமா போயிடணும்." என்றாள்.
"போயிடும்டா."
அவன் விரல்களோடு தன் விரல்களைப் பிணைத்துக் கொண்ட அவள், புன்னகை புரிந்தாள், அவன் கையில் இருந்தது தனது அப்பாவின் கைகடிகாரம் என்பதை உணர்ந்து!
"நீங்க இதைத் தான் கட்டி இருக்கீங்களா?" என்றாள் அதை தடவியபடி.
"நீ கொடுத்தா நான் எப்படி கட்டிக்காம போவேன்?"
"உங்களுக்கு என் மேல ஏன் இவ்வளவு பிரியம்?"
"சில கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது."
"என் வாழ்க்கை இவ்வளவு அழகான திருப்பதைச் சந்திக்கும்னு நான் நினைச்சிக் கூட பாக்கல."
"இன்னும் ஒரு அழகான திருப்பம் காத்திருக்கு. உன் ஆப்ரேஷனுக்குப் பிறகு நீ இந்த உலகத்தைப் பார்க்க ஆரம்பிக்கும் போது..."
"அது ஒன்னும் பெரிய திருப்பம் இல்ல. என் வாழ்க்கையோட ரொம்ப பெரிய திருப்பம் நீங்க தான்."
"ரொம்ப எமோஷனலா இருக்காத, ஹரி. நீ வாரியர் மாதிரி இருக்கணும்... ஒரியரா இருக்கக் கூடாது."
"நீங்க என் கூட இருந்தா, தைரியமா ஃபைட் பண்ணுவேன்."
"எனக்காகவா?"
"ஏன் மாட்டேன்? உலகமே எதிர்த்தாலும் சண்டை போடுவேன்." என்றாள் தொண்டை அடைக்க.
புன்னகை புரிந்த சுதர்சன்,
"எமோஷனல் ஆகாதேன்னு சொன்னேன்." என்றான்.
"நீங்க சம்பந்தப்பட்ட விஷயம்... நான் எப்படி எமோஷனல் ஆகாம இருக்கிறது?"
"சரி, உனக்கு ஃபாரின்ல இருந்து என்ன வாங்கிட்டு வரணும்னு சொல்லு?"
"எனக்கு ஒன்னும் வேணாம். சீக்கிரம் திரும்பி வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க."
அவர்கள் விமான நிலையம் வந்தடைந்தார்கள். ஹரிதா இறங்க சுதர்சன் உதவினான். அவன் தனது பெட்டியை எடுக்க நினைத்தபோது,
"நீங்க அவங்க கூட இருங்க, சார். நான் எடுத்துக் கொடுக்கிறேன்." என்றார் ஓட்டுநர்.
அவருக்குப் பணம் கொடுத்தான் சுதர்சன்.
"உங்க கல்யாணத்துக்கு என் வாழ்த்துக்கள், சார்." என்றார் அவர்.
அவரைப் பார்த்து சுதர்சன் புன்னகைக்க,
"தேங்க்ஸ், அண்ணா." என்றாள் ஹரிதா.
ஹரிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு, தன் பெட்டியை எடுத்துக்கொண்டு நடந்தான் சுதர்சன். அவனது விமானத்திற்கான இறுதி அழைப்பு வரும் வரை அவளுடன் இருந்தான் சுதர்சன்.
"நான் உனக்குத் தினமும் ஃபோன் பண்றேன்."
"ம்ம்ம்..."
"எக்ஸாம்சை நல்லா பண்ணு. ஜாலியா இரு. பை."
"பை." என்ற அவள் தொண்டை அடைத்தது.
"என்னைச் சிரிச்சுக்கிட்டு வழியனுப்பு. நீ அழுதா நான் எப்படிப் போறது?"
தன் கண்ணீரை விழுங்கியபடி புன்னகை புரிந்தாள்.
"நான் உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருப்பேன்."
"உன்கிட்ட வர, நான் நாளை எண்ணிக்கிட்டிருப்பேன்."
அவள் கையை உமாபதியிடம் கொடுத்து,
"பார்த்துக்கோ." எனச் சொல்லிவிட்டு, உள்ளே நடந்தான்.
"போகலாம், ஹரி."
"ஃபிளைட் கிளம்பற வரைக்கும் இங்கேயே இருக்கலாம், உமா."
"இங்க இருந்து என்ன பண்ணப் போற?"
"ஒருவேளை அவங்க ஃபிளைட் லேட் ஆச்சுன்னா, அவர் இங்க தனியா இருப்பாரே."
"அவன் ஏற்கனவே இம்மிகிரிஷனுக்குப் போயிட்டான். அவனோட ஃபிளைட் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடும்."
"அதுவரைக்கும் இருக்கலாமே."
பெருமூச்சு விட்ட உமாபதி,
"சரி," என்று அவளை அங்கு அமர வைத்தான்.
சுதர்சனின் விமானம் கிளம்பி விட்டது என்ற அறிவிப்பு கேட்ட பிறகு, அங்கிருந்து கிளம்பினாள் ஹரதா.
"மூணு மாசம் தானே, ஹரி? அவன் வந்துடுவான்." என்றான் உமாபதி.
"அவர் எனக்காகத் தான் வெளிநாடு போறாரு. அவருக்கு வெளிநாடு போறதுல கொஞ்சம் கூட விருப்பமே இல்லாம இருந்தார். ஆனா இப்போ, அதை எனக்காக செய்றாரு."
"ஃபாரின் போறது அவன் விருப்பப்பட்டு எடுத்த முடிவு. அவனைப் போகச் சொல்லி நம்ம சொல்லல. அவன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் அதைச் செய்றான்."
"உனக்குப் புரியல, உமா. வா போகலாம்." என்றாள்.
அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள்.
"சுதர்சன் கிளம்பியாச்சா?" என்றார் சிவகாமி.
"ம்ம்ம்..." என்றபடி சோகமாய் தன் அறைக்குச் சென்றாள் ஹரிதா.
சிவகாமி, உமாபதியைப் பார்க்க,
"அவ சுதாவை இவ்வளவு நேசிக்க தொடங்குவாள்னு நான் நினைச்சுக் கூடப் பாக்கல," என்றான் உமாபதி.
"நானும் கூட எதிர்பார்க்கல. எது அவளை இந்த அளவுக்கு அவன் மேல பிரியம் வைக்க வச்சதுன்னு எனக்கும் தெரியல." என்றார் சிவகாமி.
.........
தனது தேர்வுகளை ஒன்றன் பின் ஒன்றாய் முடித்தாள் ஹரிதா. மீதம் இருந்தது ஒன்றே ஒன்று தான். தான் கூறியது போலவே ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஃபோன் செய்ய மறக்கவில்லை சுதர்சன். அவளிடம் ஆண்ட்ராய்டு கைப்பேசி இல்லாததால், ஐஎஸ்டி அட்டயைப் பயன்படுத்தி அவளிடம் பேசினான் சுதர்சன். அதன் மூலம் குறிப்பிட்ட நேரமே பேச முடியும் என்பதால், அவனிடம் என்ன பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் காத்திருந்தாள் ஹரிதா. அவனது அழைப்பு வந்தது.
"இன்னும் ஒரு எக்ஸாம் தான் இருக்கு."
"ஆல் தி பெஸ்ட். நல்லபடியா முடி. நான் உன் ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்றேன்."
"ஒன்னும் அவசரம் இல்ல. அது ரெண்டு மாசம் கழிச்சு நடக்கட்டும்."
"ஏன்?"
"நீங்க இந்தியா வந்த பிறகு பண்ணிக்கலாம்."
"நான் வர்ற வரைக்கும் நீ காத்திருக்கப் போறியா?"
"நான் இப்படி இருந்து பழக்கப்பட்டவள் தானே? அதுல என்ன புதுசா இருக்கு? ரெண்டு மாசம் ஒன்னும் பெருசில்ல."
"நான் சொல்றதைக் கேளு. நேரத்தை வீணாக்காத. அவ்வளவு தான்."
"ஆனா..."
"நான் சொன்னா கேப்பியா, மாட்டியா?"
"ம்ம்..." என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.
"முகத்தை உம்முன்னு வச்சுக்காத." என்று புன்னகைத்தான்.
"உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"எனக்குத் தெரியாதா?"
"ஆமாம், நீங்க தான் சுதாவாச்சே!"
"சரி, நாளைக்கு எக்ஸாமுக்கு படி. பை."
"பை," என்று அழைப்பைத் துண்டித்தாள் ஹரிதா.
மறுநாள்
ஹரிதாவைத் தேர்வு மையத்தில் விட்டு வெளியே வந்தான் உமாபதி. அப்பொழுது அவனிடம் ஒருவன் வந்தான்.
"ஒரு நிமிஷம்..."
அவனைப் பார்த்த உமாபதிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
"சார், நீங்களா?"
"உங்களுக்கு என்னைத் தெரியுமா?"
"தெரியுமாவா? நீங்க திவ்யமூர்த்தி... நான் பெங்களூர்ல இருக்குற உங்க கம்பெனிக்கு இண்டர்வியூக்கு வந்தேன்."
"அப்படியா?"
"ஆமாம், சார்,"
"இன்டர்வியூ ரிசல்ட் என்ன ஆச்சு?"
"அது இன்னும் வெயிட்டிங்ல தான் சார் இருக்கு."
"நான் சென்னைக்கு ஒரு வெட்டிங்குக்காக வந்தேன்."
"அப்படிங்களா, சார்?"
"நீங்க இப்போ ட்ராப் பண்ணீங்களே அவங்க யாரு?"
"என்னோட தங்கச்சி, சார்."
"ரெண்டு நாளைக்கு முன்னாடி, நீங்க அவங்களைப் பிக்கப் பண்ணும் போது பார்த்தேன். அவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன்."
உமாபதி திடுக்கிட்டான். கோடிஸ்வரன் திவ்யமூர்த்தி ஹரிதாவை மணக்க விரும்புகிறனா?
"சாரி... சார்... அவ கமிட்டட்."
"கமிட்டெட்னா?"
"என் ஃபிரண்ட் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறான். அவ கண் ஆபரேஷனுக்காகத் தான் அவன் ஃபாரினுக்கே போயிருக்கான்."
"கண் ஆபரேஷனா?"
"ஆமாம், சார். அவளுக்குப் பார்வை இல்ல"
"என்ன்னனது?" அதிர்ந்தான் திவ்யமூர்த்தி.
"ஆமாம், சார். என் ஃபிரண்ட் சுதர்சன், அவ ஆபரேஷனுக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டான். ஐ பேங்க்லயும் ரிஜிஸ்டர் பண்ணி இருக்கு. சீக்கிரமே அவளுக்கு ஆபரேஷன் நடக்கப் போகுது. அவ பார்வை சீக்கிரமே திரும்ப வந்துடும்."
"அதனால என்ன? அவங்க ஆபரேஷனை இந்தியாவோட பெஸ்ட் ஹாஸ்பிடல் நான் பண்றேன். அது மட்டும் இல்ல, என் கம்பெனிக்கு உங்களை மேனேஜர் ஆக்கி, என் கம்பெனி ஷேர்ல உங்களுக்கு 5% கொடுக்கிறேன்."
அதைக் கேட்ட உமாபதி உறைந்து நின்றான். மேலாளர் பதவியும், ஐந்து விழுக்காடு லாபமும், லேசாய் அவன் கண்ணை மறைக்கத் துவங்கியது.
"உங்க தங்கச்சியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இன்னும் என்ன வேணும்னாலும் கேளுங்க தரேன்."
"இல்ல, சார். அவ ஒத்துக்க மாட்டா. என் ஃபிரண்டை அவ ரொம்ப ஆழமா காதலிக்கிறா."
திவ்யமூர்த்தி ஏமாற்றம் அடைந்தான்.
"என்னை மன்னிச்சிடுங்க, சார்." என்று உமாபதி அங்கிருந்து மெல்ல நடந்தான். அவனும் கூட ஏமாற்றம் அடைந்து தான் இருந்தான். சுதர்சனும் ஹரிதாவும் சந்திக்காமலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றியது அவனுக்கு. அவ்வளவு பெரிய நிறுவனத்தின் மேலாளர் பதவி என்றால் சும்மாவா? அவனுக்கு வெறுப்பாக இருந்தது.
எதையோ யோசித்த திவ்யமூர்த்தி, உமாபதியை நோக்கி ஓடி வந்து,
"இந்தக் கல்யாணத்துல உங்களுக்கு விருப்பம் இருந்தா, என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. அதைச் செய்ய முடியுமான்னு பாருங்க."
"என்ன ஐடியா, சார்?" அவன் குரலில் ஆர்வம் பொங்கியது.
"அவங்களைப் பொறுத்த வரைக்கும் நான் தான் சுதர்சன்."
"என்ன சார் சொல்றீங்க?"
"அப்படின்னு நீங்க அவங்களை நம்ப வைக்கணும்."
"அது அவ்வளவு ஈஸி இல்ல, சார்."
"ஈஸியா இல்லாம இருக்கலாம். ஆனா முடியாதது ஒன்னும் இல்லயே! நீங்க என் கூட ஒத்துழைச்சா, நான் அதைச் செய்றேன். நீங்க கற்பனைப் பண்ணிப் பாக்க முடியாத ஒரு வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்கும். உங்க தங்கச்சி ராணி மாதிரி இருப்பாங்க. நான் தான் சுதர்சன்னு ஒரே ஒரு பொய் மட்டும் சொல்லுங்க. உங்களைக் கோடீஸ்வரன் ஆக்குறேன்."
கோடி என்றவுடன் உமாபதியின் மனதில் இருந்த பேராசை பேய் வேகமாய் தலை தூக்கியது.
"உங்க ஃபேமிலியில வேற யாரெல்லாம் இருக்காங்க?"
"எங்க அம்மா மட்டும் தான், சார்."
"நான் அவங்ககிட்ட பேசுறேன்."
சுதர்சனை மறந்து, தலையசைத்தான் உமாபதி. சிவகாமியின் ஒத்துழைப்பு இருந்தால், நிச்சயம் அதைச் செய்து விடலாம் என்று அவன் மனதில் தோன்றியது. கோடிகளைத் தவறவிட அவன் தயாராக இல்லை. அவனது ரத்தத்தில் ஊறி கிடந்த சுயநலம் தர்மத்தை மறக்கச் செய்தது.
கண் சிமிட்டும்...
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top