WatTruyen.Top

காற்றினில் உன் வாசம்..

🌸 20 🌸

jamunaguru

நாட்கள்.. இல்லை.. சில வாரங்கள் கடந்துவிட்டது.. அர்ச்சனா இளங்கோ வீட்டில் இருந்து கிளம்பி வந்து.

அவளை தன் பழைய அச்சுவாக.. சந்தோஷமாக.. கலகலப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டிருந்தான் திலீப்.

கண்முன்னே இருந்த திலீப்பிடம் ஏற்பட்ட மாற்றத்தை விட.. கண்காணாத தூரத்தில் இருந்த இளங்கோவிடம் தன்மீதுள்ள கோபத்தில் எதுவும் மாற்றம் இருக்குமா என்ற எண்ணத்தில் தான் ஆழ்ந்திருந்தாள் அர்ச்சனா.

எல்லாவற்றையும் ஓர் இயந்திரம் போல தான் செய்து கொண்டிருந்தாள் அர்ச்சனா. ஏன் இன்னும் அவள் இப்படி இருக்கிறாள் என புரியாமல் தவித்தான் திலீப்.

திலீப் என்ன மனநிலையில் இருக்கிறானோ என பயந்து தான் அபி நினைவு வந்ததை மறைத்திருப்பாள் என மைதிலி எவ்வளவோ எடுத்து சொல்லியும்.. இளங்கோ அதை ஏற்க தயாராக இல்லை..

அவளுக்கு நினைவு வரும் வரை அவள்  என் பொறுப்பில் இருந்தாள்.. இப்போது நினைவு வந்துவிட்டது.. இனி அவள் யாரோ.. தான் யாரோ.. என வேண்டா வெறுப்பாகவே பேசினான் இளங்கோ.

அர்ச்சனாவை தன் அக்காவின் திருமணத்திற்கு அழைப்பதற்காக அவள் வீட்டுக்கு வந்திருந்தாள் ரஞ்சனி.

ஆனால் அவள் இன்னும் எதையோ எண்ணி சோகமாகவே இருப்பது ரஞ்சனியின் மனதை உறுத்தியது.

“அச்சு.. இன்னும் ஏன் இப்டி இருக்க.. உன் அத்தான் மாறிட்டாரு தான.. இல்லை திரும்பவும் எதாவது பிரச்சனையா..” என கேட்டாள் ரஞ்சனி.

“அதெல்லாம் ஒன்னுமில்லை.. திலீப் அத்தான் ரொம்ப மாறிட்டாரு.. கோபப்படுறதே இல்லை..” என்றாள் அர்ச்சனா.

“வேற என்னதான் பிரச்சனை உனக்கு.. ஏன் இப்டி எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க..” என கேட்டாள் ரஞ்சனி.

முதலில் தயங்கிவள்.. அவளிடம் மனம் விட்டு பேசினாலாவது தனக்கு ஆறுதலாக இருக்காதா.. என எண்ணி இளங்கோவை பற்றி எல்லாவற்றையும் எடுத்துரைத்தாள்.

“ஏதோ கோபத்துல தப்பா புரிஞ்சுட்டு அப்டி பேசிருப்பாரு.. நீ திரும்ப அவர்கிட்ட பேசிப்பாரு..” என ரஞ்சனி சொல்ல.. மறுப்பாய் தலையசைத்தாள் அர்ச்சனா.

“ஏன்..” என ரஞ்சனி அர்ச்சனாவிடம் கேட்டாள்.

“திலீப் அத்தான்.. இப்பத்தான் சந்தோஷமா இருக்கான்.. நான் இளங்கோவை விரும்புறது தெரிஞ்சு அவன் திரும்பவும் கோபப்பட்டு.. ப்ச்.. வேண்டாம்.. எனக்கு அவன் சந்தோஷமா இருக்கிறத பார்க்கத்தான் ஆசை..

அதுமட்டுமில்ல.. இளங்கோ மனசில நான் இருக்கேனா இல்லையானு கூட எனக்கு தெரியாது.. அது தெரியாமலே போகட்டும்.. அதுதான் வீட்டில எல்லோருக்கும் நல்லது.. இப்டியே இருக்கட்டும்..” என்றாள் அர்ச்சனா.

அவள் முடிவு சரியா.. தவறா.. என ரஞ்சனிக்கு புரியவில்லை.

சில தினங்கள் கடந்திருந்த நிலையில்.. அர்ச்சனா மாடி அறையில் ஜன்னலருகில் எதையோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

“சாப்பிட வா அச்சு..” என அழைத்தபடி அங்கே வந்தான் திலீப்.

“வேண்டாம் அத்தான்.. நான் அப்புறம் சாப்பிடுறேன்..” என்றாள் அர்ச்சனா.

“எப்பக் கேட்டாலும் இப்டித்தான் சொல்றனு நேத்தே அத்தை திட்டிட்டு இருந்தாங்க.. நானே உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்..” என்ற திலீப்.. சாப்பாடு எடுத்து வந்தான்.

அவனே அர்ச்சனாவுக்கு ஊட்டிவிட தொடங்கினான்.

“அச்சு..” என திலீப் பேச்சை தொடங்கினான்.

“என்ன அத்தான்..”

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..” என கேட்டான் திலீப்.

சில நொடிகள் தயங்கியவள்.. “ம்.. பண்ணிக்கலாம் அத்தான்..” என்றாள்.

அதன்பின் எதுவும் பேசாமலே சாப்பாடு ஊட்டிவிட்டான் திலீப்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருப்பீயா அச்சு..” என திலீப் கேட்க.. ஏன் இப்போது இந்த பேச்சு என புரியாமல் அவனை பார்த்தாள் அர்ச்சனா.

“சொல்லு அச்சு..” என மீண்டும் கேட்டான் திலீப்.

“நீ என்னை சந்தோஷமா தான் பார்த்துப்ப அத்தான்..” என்றாள் அர்ச்சனா.

“ஆனா உன் சந்தோஷம் இளங்கோ தான அச்சு..” என்றான் திலீப்.

இவனுக்கு எப்படி தெரியும்.. என புரியாமல் அர்ச்சனா விழிக்க.. சாப்பாடு ஊட்டி முடித்திருந்தவன் தட்டை வைக்க எழுந்து சென்றான்.

சில நிமிடங்களில் மீண்டும் வந்து அவளருகில் அவள் கரம்பற்றிக் கொண்டு அமர்ந்தான்.

“அச்சு.. சின்ன வயசுல இருந்து எனக்கு ப்ரெண்ட்ஸ்னு யாரும் கிடையாது. எனக்கு எல்லாம் நீ மட்டும் தான்.

என்னோட உலகம் ரொம்ப சின்னது அச்சு.. அப்பா அம்மா அத்தை நீ அவ்ளோதான்.. இதை தாண்டி எனக்கு வேற எதுவும் தேவைப்பட்டது இல்லை..

காலையில எழுந்திருச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் நீ இந்த வீட்டில என்னை சுத்தி சுத்தி வர்றதுல தான் என் சந்தோஷம் இருந்துச்சு..

நீ இல்லாத ஒரு நாளை கூட என்னால நினைச்சு பார்க்க முடியாது.. நீ என்கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.. ஆசை இல்லை அச்சு அது வெறி..

அந்த வெறி தான்.. வெறில தான் உன்னை கஷ்டப்படுத்திட்டேன்..” என்ற திலீப்பின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அ.. அத்தான்.. அழாத.. ப்ளீஸ்..” என்றாள் அர்ச்சனா.

“நா.. நான் பண்ணது தப்பு தான் அச்சு.. அந்த நேரம் எதுவும் புரியலை அச்சு.. நீ என்னை விட்டு விலகிப்போற.. நீ எனக்கில்லைனு மட்டும் தான் மனசில இருந்துச்சு.. தப்பு தப்பா ஏதேதோ..

அன்னைக்கு நீ பயந்து நடுங்கினதை பார்த்தப்ப தான் நான் உன்னை எவ்ளோ கஷ்டப்படுத்துறேன்னு புரிஞ்சது. நீ.. நீ.. காணாம போனதும் நான் எவ்ளோ தவிச்சிட்டேன் தெரியுமா அச்சு.. பைத்தியக்காரன் மாதிரி ரோடு ரோடா தேடி அலைஞ்சேன்.. ஆனா நீ எங்க இருக்கனு எதுவுமே தெரியலை..” என கண்ணீருடன் அவள் மடியிலே தலைவைத்துக் கொண்டான்.

“நடந்து முடிஞ்சத எல்லாம் இப்ப பேசி என்ன ஆகப்போகுது.. விடு அத்தான்.. எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்லை.. என்னாலயும் நிதானமா எதையும் யோசிக்க முடியலை.. அதனால தான்..” என்றாள் அர்ச்சனா.

சில நிமிடங்கள் அப்படியே மௌனத்தில் கழிந்தது.

“நீ.. இளங்கோவை விரும்புற தான அச்சு..” என கேட்டான் திலீப்.

“உனக்கு இதெல்லாம் யார் சொன்னா..” என அவள் தலை கோதியபடி கேட்டாள் அர்ச்சனா.

“நீ.. நீ ரஞ்சனி கிட்ட பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்..” என்றான் திலீப்.

என்ன சொல்வதென தெரியாமல் அமைதியாக இருந்தாள் அர்ச்சனா.

“அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுனு தெரிஞ்சப்ப.. உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்கிறதுக்கு யோசனையா தான் இருந்துச்சு அச்சு..

ஆனா நான் நல்லா விசாரிச்சுட்டேன்.. அதில அவர் மேல எந்த தப்பும் இல்லை.. அந்தப் பொண்ணு மேல தான் தப்பெல்லாம்.. டைவர்ஸ் கூட வாங்கிட்டாரு..” என திலீப் பேசிக் கொண்டே செல்ல.. அர்ச்சனாவுக்கு சிரிப்பாக இருந்தது.

“அத்தான்.. அவர் மனசில நான் இருக்கேனா இல்லையானு கூட எனக்கு தெரியாது.. நீ என்னடான்னா கல்யாணம் வரைக்கும் போய்ட்ட..” என கேலியாக சொன்ன அர்ச்சனா சிரித்தாள்.

“அவரும் உன்னை விரும்புறாரு அச்சு.. அவருக்கு உன்மேல எந்த கோபமும் இல்லை.. நானே அவர்கிட்ட போய் பேசுனேன்..” என திலீப் சொல்ல அதிர்ச்சியில் விழிகள் விரித்தாள் அர்ச்சனா.

“நீ.. நீ.. நிஜமாவா அத்தான் சொல்ற..” என நம்ப முடியாமல் கேட்டாள் அர்ச்சனா.

“என் அச்சுவோட சந்தோஷம் என்னனு தெரிஞ்ச பிறகு அதை எப்டியாவது நிறைவேத்திட மாட்டானா இந்த திலீப்..” என பெருமையாக தன் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

“அப்பா அம்மா அத்தை எல்லார்கிட்டயும் அவரை பத்தி சொல்லி உங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டேன்.. அவருக்கும் அவங்க அம்மாவுக்கும் கூட சம்மதம் தான்..” என அர்ச்சனாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தான் திலீப்.

அந்த அதிர்ச்சியிலும்.. “அத்தான்.. அ.. அப்ப உன் கல்யாணம்..” என தயக்கத்துடன் கேட்டாள் அர்ச்சனா.

ஜன்னலருகில் சென்று வெளியே வெறித்தபடி நின்று கொண்டவன்.. “நா.. நான் உன் மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கேன்.. அந்த பாசத்துல நான் என்ன கிறுக்குத்தனம் லாம் பண்ணேன்.. என் லைப்ல நீ எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சு என்னை ஏத்துக்கிற பொண்ணு கிடைக்கும் போது பார்க்கலாம்..” என்றான்.

அர்ச்சனாவுக்கும் என்ன பேசுவதென புரியவில்லை.

“சொன்னா.. சொன்ன டைம்க்கு கரெக்டா வந்துட்டாரு பாரேன்..” என சிரிப்புடன் திலீப் சொல்ல.. “யாரு..” என கேட்டபடி ஜன்னலருகில் வந்தாள் அர்ச்சனா.

இளங்கோ தான்.. அவன் பைக் தன் வீட்டுக்குள் நுழைவதை ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

“சரி.. நான் போய் அவரை கூட்டிட்டு வர்றேன்..” என்றான் திலீப்.

“ஆங்.. வேண்டாம்..” என்றாள் அர்ச்சனா.

“ஓ.. நீங்களே தான் வரவேற்கணுமோ.. சரி வா..” என அர்ச்சனாவின் கையை பிடித்துக்கொண்டு திலீப் நகர.. “விடு அத்தான்..” என கையை உதறினாள்.

“என்ன அச்சு..” என திலீப் கேட்க.. “என்னை பாரு.. நான் எப்டி இருக்கேன்னு.. வேற டிரெஸ் மாத்தணும்.. தலை பின்னனும்..” என அர்ச்சனா சீரியஸாக சொல்ல சிரித்தான் திலீப்.

“உனக்கு அஞ்சு நிமிஷம் தான் டைம்.. அதுக்குள்ள நீ டிரெஸ் மாத்துவீயோ.. தலை பின்னுவீயோ.. இல்ல இந்த அழுமூஞ்சுக்கு மேக்கப் போடுவீயோ.. அதெல்லாம் எனக்கு தெரியாது..” என்ற திலீப் சிரிப்புடன் கீழே இறங்கினான்.

அஞ்சு நிமிஷத்துல வந்துடுவானோனு பயந்துட்டே.. வேகவேகமா அர்ச்சனா டிரெஸ் மாத்தி.. தலை பின்னிக் கொண்டிருக்கையிலே.. காலடி சத்தம் கேட்டது.

“அச்சு.. அஞ்சு நிமிஷம் ஆகிடுச்சு..” என குரல் கொடுத்தான் திலீப்.

வேகமாக ஒரு பொட்டை வைத்துக்கொண்டு கதவை திறந்தாள் அர்ச்சனா.

இளங்கோவின் மனதிலும் தான் இருக்கிறோம் என்பதை அறிந்து கொண்ட பின்னர் முதல் சந்திப்பு.இருவரின் விழிகளிலும் காதல் நிறைந்திருந்தது.

அவள் கரம்பற்றி இளங்கோவின் கையில் வைத்த திலீப்.. “என் அச்சுவை.. உங்க அபியை உங்ககிட்டே ஒப்படைச்சிட்டேன்..” என்றான் புன்னகையோடு.

அர்ச்சனாவும் இளங்கோவும் எதுவும் பேச தோன்றாமல் அவன் முகம் பார்க்க.. “இந்த கண்ணில இருந்து வெங்காயம் வெட்டும் போது கூட கண்ணீர் வரக்கூடாது..” என கேலியாக சொன்னான் திலீப்.

இளங்கோ சிரிக்க.. நாலு அடி அடித்தாள் அர்ச்சனா.

சிரிப்புடன்.. அர்ச்சனாவின் அடிகளை வாங்கிக் கொண்டவன்.. “நீங்க பேசிட்டு இருங்க.. நான் வர்றேன்..” என அங்கிருந்து நகர்ந்தான் சந்தோஷமும் வலியும் கலந்திருந்தது அவன் மனதில்.

“நா.. நான் உங்ககிட்ட ஞாபகம் வந்ததை மறைச்சிருக்க கூடாது சாரி..” என அபி சொல்ல.. “நான் தான் சாரி சொல்லணும்.. கோபத்துல அன்னைக்கு கொஞ்சம் அதிகமாவே பேசிட்டேன்.. சாரி அபி..” என்றான் இளங்கோ.

“உனக்கு ஞாபகம் வந்ததும் உங்க வீட்டில பேசி உன்னை எனக்கு சொந்தமாக்கிக்கணும்னு தான்.. நான் உன் மனசு புரிஞ்சும் விலகி இருந்தேன்.. அதான் நீ மறைச்சதை தாங்கிக்க முடியலை..” என்றான் இளங்கோ.

“நா.. நான்.. உங்க மனசில இருக்கேனா இல்லையானு தெரிஞ்சிட்டு அப்புறம் சொல்லலாம்னு நினைச்சேன்..” என சிரிப்புடன் அபி சொல்ல.. புன்னகையுடன் அவள் கரம்பற்றி முத்தமிட்டான் இளங்கோ.

உரிமையுடன் சந்தோஷத்துடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அபி.

“நிதானமா யோசிக்கும் போதே.. நீ மறைச்சதுல எந்த தப்பும் இல்லைனு எனக்கும் புரிஞ்சுது.. அம்மாவும் எவ்வளவோ பேசுனாங்க.. ஆனா நான் இவ்ளோ நாள் விலகி இருந்ததுக்கும்.. இப்ப வந்ததுக்கும் காரணம் திலீப் தான்..” என்றான் இளங்கோ.

அபியால் அவன் சொல்ல வருவதை புரிந்து கொள்ள முடிந்தது. தன் மீது திலீப் கொண்டுள்ள அன்பை அறிந்த பின்னும் அவனை புரிந்து கொண்டு

ஏற்றுக் கொள்ளும் அந்தப் பெண் யார்.. என்ற கேள்வி மட்டும் அபி மனதில் விடையின்றி தவித்தது.

இளங்கோ அபியின் திருமணத்தை அடுத்த மாதம் நடத்துவது என இரு வீட்டு பெரியவர்களும் சேர்ந்து முடிவு செய்தனர்.

வேணி.. கண்ணன் மைதிலி மூவரும்.. உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருக்க.. அர்ச்சனா திலீப்புடன் ரஞ்சனியின் அக்கா திருமணத்திற்கு சென்றாள்.

திலீப்பை அமரச் சொல்லிவிட்டு.. ரஞ்சனியிடம் பேசுவதற்காக வந்தாள் அர்ச்சனா.

“ஹே.. அச்சு.. என்ன ஏதோ சேஞ்ச் தெரியுது.. என்ன விஷயம்..”என கேட்டாள் ரஞ்சனி.

இளங்கோவுடன் திருமணம் நடைபெற இருக்கும் சந்தோஷமான விஷயத்தை அர்ச்சனா சொல்ல.. ரஞ்சனியும் மகிழ்ந்தாள்.

ஆனால் அங்கே அமர்ந்திருந்த திலீப்பை கண்டதும்.. ரஞ்சனியின் மனம் அவன் இந்த வலியை எப்படி தாங்கிக் கொள்கிறானோ.. என எண்ணியது.

“பாவம் திலீப்..” என அவள் மெல்ல முணுமுணுத்தாள்.

ரஞ்சனி மெல்ல சொன்ன போதும்.. அதை கேட்ட அர்ச்சனாவின் விழிகள் சந்தோஷத்தில் ஒளிர்ந்தது.

ரஞ்சனியின் கரம்பற்றி இழுத்துச் சென்று திலீப்பின் முன் நிறுத்தினாள் அர்ச்சனா.

“அத்தான் எல்லாம் தெரிஞ்சும் என்னை ஏத்துக்கிற பொண்ணு வேணும்னு கேட்டல்ல.. ரஞ்சி தான் அந்தப் பொண்ணு..” என திலீப்பிடம் சொன்னவள்.. “ரஞ்சி உனக்கு ஓகே தான..” என்க.. முழுதாக புரியாமலே தலையை ஆட்டினாள் ரஞ்சனி.

“ஓகே வா.. ஓகே.. ஓகே..” என சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தாள் அர்ச்சனா.

சில நொடிகளுக்கு பின்னரே நடந்ததை முழுதாக உணர்ந்தனர் திலீப்பும் ரஞ்சனியும்.

“அச்சு.. அச்சு..” என இருவரும் அழைக்க.. அதை காதிலே வாங்காமல் யாருக்கோ போன் பண்ணியபடி அங்கிருந்து நகர்ந்தாள் அர்ச்சனா.

தயக்கத்துடன் இருவரும் பார்த்துக் கொண்டனர்.

“அ.. அது அச்சு..” என திலீப் ஏதோ சொல்ல தொடங்க.. “நா.. நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்..” என்றாள் ரஞ்சனி.

கேளு.. என்பது போல தயக்கமாக அவளை பார்த்தபடி நின்றிருந்தான் திலீப்.

அர்ச்சனா மீது திலீப் கொண்டிருந்த நேசத்தை அறிந்து.. அதுபோல தானும் நேசிக்கப்பட வேண்டும் என்ற ஆசை ரஞ்சனி மனதில் எழுந்தது உண்மை தான்.

அர்ச்சனா திடீரென திலீப் முன் நிறுத்தி.. அவனை ஏற்றுக் கொள்வாயா என கேட்டதும்.. தான் எதிர்பார்த்த நேசம் திலீப்பிடம் இருந்தே கிடைத்தால்.. என்ற எண்ணம்தான் ரஞ்சனிக்கு தோன்றியது.

ரஞ்சனி என்ன கேட்க போகிறாளோ.. என பயத்துடன் நின்றிருந்தான் திலீப். “எல்லாம் இந்த அச்சுவால வந்தது..” என மனதுக்குள் அவளை திட்டிக் கொண்டான்.

“அ.. அச்சு மேல உங்களுக்கு எவ்ளோ பாசம்னு எனக்கு தெரியும்.. எ.. என்மேலயும் அதே பாசத்தோட இருப்பீங்களா..” என கேட்டாள் ரஞ்சனி.

திலீப் எதிர்பார்த்திராத கேள்வி தான்.. ரஞ்சனியின் கண்களில் இருந்த ஏக்கமா.. காதலா.. ஏதோ ஒன்று சரியென தலையாட்ட வைத்தது திலீப்பை.

வெட்கப் புன்னகையுடன் ரஞ்சனி அங்கிருந்து நகர.. “ஒரு நிமிஷம்..” என அவளை தடுத்தான் திலீப்.

என்ன என்ற கேள்வியுடன் அவள் திலீப்பை பார்க்க.. “அ.. அச்சு மாதிரி.. எனக்கு எல்லாமுமா இருப்பல்ல..” என கேட்டான்.

“ம்.. கண்டிப்பா..” என வெட்கமும் சந்தோஷமுமாக ஓடினாள் ரஞ்சனி.

அவளை புன்னகையோடு பார்த்தபடி நின்றிருந்தான் திலீப்.

அபி.. இளங்கோவிடம் போனில்.. தங்கள் திருமணத்தையும் திலீப் ரஞ்சனி திருமணத்தையும் ஒரே நாளில் நடத்தலாமா என ஆலோசித்துக் கொண்டிருந்தாள்.

❤ முற்றும் ❤

Thanks everyone.. starting la koncham boring ah pora mathiri enake feel achu.. ana athai elam sahichutu continuous ah vasicheenga.. Thanks for your support..❤❤

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top