🌸 05 🌸
சில தினங்களுக்கு முன்.. ரம்யா தன் தாய் சுசீலாவுக்கு போன் செய்திருந்தாள்.
முதலில் ரம்யா என்பதை அறிந்த சுசீலாவுக்கு கோபம் வந்து.. “ஏன்டி எங்க மானத்தை வாங்குற.. ஓடிப்போறவ.. கல்யாணத்துக்கு முன்னாடியே ஓடிப்போய் தொலைய வேண்டியது தான.. இப்டி கல்யாணம் பண்ணின பிறகு.. காதலிச்சவனோட ஓடிப்போய் எங்க மானத்தை வாங்கிட்டீயே.. வெளியில தலைகாட்ட முடியலை.. அசிங்கமா இருக்கு.. இப்டி கேவலப்படுத்திட்டீயே..
அந்த மனிசன் உன்னை நல்லா தான வச்சிருந்தாரு.. காதல் கண்றாவி எல்லாம் மறந்துட்டு வாழ்றனு சந்தோஷப்பட்டுட்டு இருந்தா இப்டி அசிங்கப்படுத்திட்டீயே..” என வார்த்தைகளில் வறுத்தெடுத்தார்.
“அம்மா.. அம்மா..” என ரம்யா கண்கள் கலங்க.. பெற்றவளின் மனம் இளகிவிட்டது.
“அம்மா நானும் அத்தான் கூட சந்தோஷமா தான் மா இருந்தேன்..” என ரம்யா சொல்ல.. “அப்புறம் ஏன்டி இந்த கிறுக்குத்தனம் பண்ண..” என சற்று கோபம் குறைந்த குரலில் கேட்டார் சுசீலா.
“எல்லாம் சஞ்சய்யை பார்க்கிற வரைக்கும் தான் ம்மா.. நான் அவன் கூட பேசின பிறகு தான் என்னால அவன்கூட மட்டும் தான் சந்தோஷமா இருக்க முடியும்னு புரிஞ்சுது.. இளங்கோ அத்தான் நல்லவர் தான்.. அவர் என்னை எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்கிட்டாரு தான்.. ஆனா எனக்கு சஞ்சய் மட்டும் தான் ம்மா வேணும்.. ப்ளீஸ் ம்மா.. புரிஞ்சுக்கோ..” என கண்ணீருடன் சொன்னாள் ரம்யா.
“அவன்கிட்ட ஏன்டி திரும்ப பேசின.. பேசாமலே இருந்து தொலைக்க வேண்டியது தான.. மானம் மரியாதையோடவாது இருந்திருக்கலாம்..”
“நான் பேசலை ம்மா.. அவன் தான் என்னை பார்க்க வந்தான்.. அவனுக்கு நல்ல வேலை கிடைச்சிடுச்சு ம்மா.. மாசம் ஐம்பதாயிரம் சம்பளம்.. நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன்.. என்கூடவே வந்துடுனு சொன்னான் ம்மா..” என பெருமிதம் கலந்த குரலில் சொன்னாள் ரம்யா.
“உடனே ஈஈனு பல்லை இளிச்சிட்டு கிளம்பிட்டீயோ.. அறிவு இல்லையாடி உனக்கு..” என திட்டினார் சுசீலா.
“அம்மா சும்மா சும்மா திட்டாத ம்மா..” என ரம்யா சிணுங்க.. “நீ பண்ணதுக்கு வேற என்னடி பண்றது.. உன் அத்தைக்காரி மங்களம் ஒருத்தி போதும்.. ஊரெல்லாம் பரப்பிட்டு இருக்கா..” என எரிச்சலுடன் சொன்னார் சுசீலா.
“போதும் நிறுத்து ம்மா.. நான் உனக்கு ஒரே பொண்ணு.. உனக்கு என் சந்தோஷம் முக்கியம் இல்லையா.. ஊர்ல உள்ளவங்க என்ன பேசுவாங்கன்றது தான் பெருசா போச்சா..” என ரம்யா பேசிய பின் சுசீலாவின் வார்த்தைகளிலும் இளக்கம் தோன்றியது.
“சரி.. இப்ப எதுக்கு போன் பண்ண..” என இல்லாத எரிச்சலை குரலில் காட்டினார் சுசீலா.
“அ.. அதுவந்து ம்மா.. அடுத்த வாரம் கோவில்ல நாங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்.. நீங்க வந்தா நல்லா இருக்கும்.. அதான்..” என ரம்யா சொல்ல.. “அப்பா கிட்ட பேசி பார்க்கிறேன்..” என்றார் சுசீலா.
ரம்யாவிடம் சொன்னது போலவே அவள் தந்தை விஸ்வநாதனிடமும் அதுகுறித்து பேசினார் சுசீலா.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..” என மறுத்தார் விஸ்வநாதன்.
“என்னங்க இப்டி சொல்றீங்க.. அவ நமக்கு ஒரே பொண்ணு.. ஏதோ தப்பு பண்ணிட்டா அதுக்காக அப்டியே தூக்கி எறிஞ்சிட முடியுமா..” என கண்கள் கலங்கினார் சுசீலா.
“அழாத டீ.. எனக்கு மட்டும் நம்ம பொண்ணு மேல அக்கறை இல்லையா.. இப்பவே நாம அவளை சேர்த்துக்கிட்டா.. ஏதோ நாமளும் சேர்ந்து தான் இப்டி பண்ணதா மாப்பிள்ளை நினைச்சிப்பாரு.. மத்தவங்களும் அப்டித்தான் பேசுவாங்க..
கொஞ்ச நாள் போகட்டும்.. எல்லாம் இதை மறந்துடுவாங்க..அப்புறம் நம்மள யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க..” என சமாதானம் சொன்னார் விஸ்வநாதன்.
முழுமனதோடு ஏற்க முடியாத போதிலும் சரியென தலையசைத்தார் சுசீலா.
இளங்கோவே என்ன சொல்லி சமாளித்து அபியை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வது என தவித்துக் கொண்டிருக்க.. அபியே.. “நான் உங்க வீட்டுக்கு வந்துடட்டுமா..” என கேட்டாள்.
ஆனால் அதன்பிறகு உடை மாற்றுகையில் தன் உடலில் கண்ட சிகரெட்டினால் சூடு வைத்த புண்கள்.. ஏதோ பயத்தை ஏற்படுத்தியது அபிக்கு.
யார் தன்னிடம் இப்படி நடந்து கொண்டிருப்பார்கள்.. இளங்கோவுக்கு அதெல்லாம் தெரிந்திருக்குமா.. இல்லை தெரியாமல் இளங்கோ அவர்களிடமே தன்னை ஒப்படைத்து விடுவானோ.. என ஏதேதோ எண்ணி குழம்பிக் கொண்டிருந்த அபிக்கு இனம்புரியாத பயமும் வந்தது.
ஆட்டோவில் செல்கையில் இளங்கோவிடம் தன் குடும்பத்தை பற்றி அறிந்து கொள்ளும் எண்ணத்துடன் அபி கேள்விகள் கேட்க.. திணறினான் இளங்கோ.
“அ.. அது வீட்டில போய் எல்லாத்தையும் பேசிக்கலாமே..” என சமாளித்தான் இளங்கோ.
இளங்கோவையே நம்பலாமா வேண்டாமா.. என்ற குழப்பம் எழுந்தது அபியின் மனதில்.. ஆனால் அவன் அருகாமை பாதுகாப்பு உணர்வையும் தருவதாக முரணான எண்ணங்களில் ஆழ்ந்திருந்தாள் அபி.
இளங்கோ அபியை தன் ப்ளாட்டுக்கு அழைத்துச் செல்வதை கண்ட விஸ்வநாதன் மனதில் ரம்யாவை தங்களுடன் சேர்த்துக் கொள்வது குறித்து இருந்த தடைகள் நீங்கியது.
இளங்கோவின் வீட்டுக்குள் வந்த அபி முதலில் கண்டது உடைந்து சிதறி கிடந்த இளங்கோ ரம்யாவின் திருமண புகைப்படம்.
“இளங்கோவை நம்பி இங்கே வந்தது தவறோ.. இளங்கோவுக்கும் தனக்கும் இடையே இருப்பது என்ன மாதிரியான உறவு.. இளங்கோ தான் தன்னை கொடுமைபடுத்தியதோ..” என நொடிக்குள் ஏதேதோ எண்ணங்கள் தோன்ற பயத்துடன் புகைப்படத்தை பார்த்தாள் அபி.
அபியிடம் தன் செயல்களுக்கான விளக்கத்தை எப்படி அளிப்பது என்ற யோசனையில் இருந்த இளங்கோ.. அவள் பார்வை சென்ற திசையை கவனித்ததும்.. “சா.. சாரி.. நான் தான் நேத்து ஏதோ டென்ஷன்ல உடைச்சிட்டேன்..” என்றவாறு அதை சுத்தம் செய்தான்.
பயத்தில் இருந்த அபியோ.. “அது தன்னுடைய போட்டோ தானோ.. என்னையும் இவன்தான் அடிச்சிருப்பானோ.. அப்புறம் அவனே காப்பாத்துற மாதிரி நடிக்கிறானோ..” என எண்ணியபடியே இளங்கோவை வெறித்துக் கொண்டிருந்தாள்.
புகைப்படத்தில் இளங்கோவுடன் ரம்யாவை கண்டதும்.. மனதில் ஒருவித நிம்மதி பரவ.. “அ.. அது யாரு..” என கேட்டாள் அபி.
“ரம்யா.. என் wife..” என பதிலளித்த இளங்கோ.. “எக்ஸ் wife..” என மாற்றி.. அழுத்தமாக சொன்னான்.
ரம்யா பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் துளிர்த்தாலும்.. ஏதோ தயக்கமும் தோன்ற எதுவும் கேட்காமலே இருந்து விட்டாள் அபி.
தன்னை காயப்படுத்தியது இளங்கோ அல்ல.. காப்பாற்றியது தான் இளங்கோ.. என்ற முடிவுக்கு வந்தாள் அபி.
அப்போது இளங்கோ.. “நா.. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் அபி..” என தொடங்க.. என்ன சொல்லப் போகிறான் என ஆவலாக அவன் முகம் நோக்கினாள் அபி.
“நான் உன்னோட பேமிலி ப்ரெண்ட் இல்லை அபி..” என இளங்கோ சொல்ல அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள் அபி.
“நா.. நான்.. அதுவந்து அபி.. உன் பேர் என்ன.. நீ யாரு.. என்ன.. எதுவுமே எனக்கு தெரியாது..” என சொன்னான் இளங்கோ.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top