WatTruyen.Top

வரம் நீயடி..

💞 25 💞

jamunaguru

மானசி விபுவுடன் விளையாடிக் கொண்டிருக்க.. அழைப்பு மணி ஒலித்தது. அஞ்சலி கதவை திறக்க.. அங்கே தீபக் நின்றிருந்தான்.

“நான் மானசி கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..” என தீபக் சொல்ல.. மானசி இருந்த அறையை நோக்கி கையை காட்டினாள் அஞ்சலி.

விபுவை கொஞ்சிக் கொண்டிருந்த மானசி.. அறை வாயிலில் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பி பார்க்க.. தீபக் நின்றிருந்தான்.

“வாங்க அத்தான்..” என புன்னகையுடன் சொன்ன மானசி.. விபுவை கொஞ்ச தொடங்கினாள்.

சில நொடிகள் அவளையே பார்த்தபடி நின்றிருந்தவன்.. “இந்த கல்யாணம் நடந்தாலும் நடக்கலைனாலும் எதுவுமில்லைனு சொல்ற.. எந்த பீலிங்சுமே இல்லையா உனக்கு..” என கேட்டான்.

“இல்லை..” என மானசி இயல்பாக சொன்னாள்.

“அதை என்னை பார்த்து சொல்லு..” என தீபக் சொல்ல மானசி சிரித்தாள்.

“என்ன அத்தான் நீங்க.. உங்களை பார்த்து சொன்னாலும் பார்க்காம சொன்னாலும் எனக்கு எந்த பீலிங்சும் இல்லை..” என்றாள் மானசி சிரிப்புடன்.

அவள் வார்த்தைகள் மனதை வருத்த.. “அ.. அப்ப உனக்கு என்னை பிடிக்கலையா..” என கேட்டான் தீபக்.

“நான் எப்ப அப்டி சொன்னேன்..” என்றாள் மானசி.

“அப்புறம் ஏன் உதயா அத்தானை அப்பா கிட்ட பேச வேண்டாம்னு சொன்ன..” என கேட்டான் தீபக்.

“அண்ணன் ஏன் பேசணும்..”

“உனக்கு என்னை பிடிச்சிருக்கு தான..”

“அத்தான்.. என்னை பார்த்ததுமே பிடிச்சு போனது உங்களுக்கு தான்.. இப்பவும் நான் என்ன முடிவெடுத்தாலும் அப்பா அம்மா அண்ணன் அண்ணி யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. வேண்டாம்னு சொன்னது மாமா தான..” என்றாள் மானசி.

“உதயா அத்தான் அப்பா கிட்ட பேசினா எல்லாம் சரியாகிடும்.. நீ ஏன் பேச வேண்டாம்னு சொல்ற..” என கேட்டான் தீபக்.

“அண்ணன் ஏன் அத்தான் பேசணும்.. நான் வேணும்னு நினைச்சா நீங்க பேசுங்க மாமா கிட்ட.. மாமாவோட பிடிவாதத்தை கொஞ்சமாவது மாத்துங்க.. அப்பா அம்மா கூட பேச மாட்டாங்க.. அண்ணியும் வேண்டாம்.. உங்க விருப்பமும் முக்கியமில்லை.. அதனால நானும் வேண்டாம்.. இப்டி இருந்து வாழ்க்கைல மாமா என்ன சாதிக்க போறாங்க..

உலகத்துலே இல்லாத இந்திரா ம்மா மேலயும் அவங்க பையன் மேலயும் தனக்கு இருக்கிற பாசம் தான் பெருசுனு காட்டிக்கிறாங்களா.. அப்டி பார்த்தா கூட என் அண்ணனோட உண்மையான சந்தோஷம் அண்ணியும் விபுவும் தான்னு மாமா புரிஞ்சுக்கலையே.. யாருக்கு நல்லது பண்றதா நினைச்சிட்டு இருக்காங்க..” என மானசி கேள்விகளை எழுப்பினாள்.

அவள் பேசிய அத்தனையும் சரியென புரிந்தாலும்.. தான் என்ன செய்ய வேண்டும் என்பது தீபக்கிற்கு புரியவில்லை.

“எனக்கு புரியுது மானசி.. ஆனா என்ன பண்றதுனு தான் தெரியலை.. என்னால முடிஞ்சத பண்றேன்..” என்ற தீபக் அங்கிருந்து கிளம்பினான்.

புன்னகைத்த மானசி.. “விபு செல்லம்.. தீபு மாமா என்ன பண்றாங்கனு பார்க்கலாம்..” என்றாள் விபுவின் விரல்களில் முத்தமிட்டபடி.

சில தினங்கள் கடந்திருந்த நிலையில்.. தனக்கும் அஞ்சலிக்கும் நடைபெறவிருந்த திருமணத்திற்கு வாசுதேவனை அழைக்கச் சென்றான் உதயா.

யசோதா உதயாவை உபசரிக்க.. எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார் வாசுதேவன்.

“மாமா.. நாளைக்கு எனக்கும் அஞ்சலிக்கும் கல்யாணம்.. நீங்க கண்டிப்பா வரணும்..” என்றான் உதயா.

வாசுதேவன் எதுவும் பேசாமலே இருக்க.. “நீங்க அஞ்சலியையும் விபுவையும் ஏத்துக்காம இருக்கலாம்.. மானசிக்கும் தீபக்கும் கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ணலாம்..

அதுக்காக உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு ஆகிடாது மாமா.. எப்பவும் நான் உங்க மேல வச்சிருக்க பாசமும் மரியாதையும் அப்டியே தான் இருக்கும்..

நாளைக்கு நீங்க வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் மாமா.. அப்புறம் உங்க விருப்பம்..” என்றான் உதயா.

உதயா பேசியது மனதில் சிறு சஞ்சலத்தை ஏற்படுத்திய போதிலும்.. “அவன் நல்லதுக்கு தானே நான் சொல்றேன்..” என்ற பிடிவாதமும் வாசுதேவனின் மனதில் இருந்தது.

உதயா அஞ்சலியின் திருமண நாள்..

இனி தான் உதிக்கு மட்டுமே சொந்தமானவள்.. என்ற எண்ணமும் அவன் மனைவி என்ற உரிமையை பெறப்போகும் மகிழ்ச்சியுமாக கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் அஞ்சலி. உதயாவும் அதே மகிழ்ச்சியோடு இருந்தான்.

மானசி அஞ்சலிக்கு உதவியபடியே விபுவையும் பார்த்துக் கொண்டிருக்க.. சாரதாவும் ரவிச்சந்திரனும் மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

உதயா அஞ்சலியின் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த யசோதா.. இந்துவை பார்த்து.. “இந்து இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவு சொல்லிடு.. உதயா அத்தான் கல்யாணத்துக்கு போக போறோம்..” என்றார்.

அதை கேட்டுக் கொண்டிருந்த வாசுதேவன்.. “இந்து ஒழுங்கா ஸ்கூலுக்கு கிளம்பு.. லீவு லாம் போடக்கூடாது..” என சொல்ல.. யார் சொல்வதை கேட்பது என புரியாமல் இந்து விழித்துக் கொண்டிருந்தாள்.

“இந்து.. அம்மா சொல்றாங்கல்ல.. போ.. போய் அத்தான் கல்யாணத்துக்கு கிளம்பு..” என்றான் தீபக்.

“ஓ.. எல்லாரும் ஒன்னா சேர்ந்து என் பேச்சை கேட்க கூடாதுனு முடிவு பண்ணிருக்கீங்களா..” என்றார் வாசுதேவன்.

“நாங்க ஏன் கேட்கணும்.. யாரோட மனசை பத்தியும் கவலைப்படாத உங்க பேச்சு நாங்க ஏன் கேட்கணும்..” என இயல்பான குரலில் கேட்டான் தீபக்.

“ஓ.. உனக்கு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கலைனு கோபமா..” என கேட்டார் வாசுதேவன்.

சிரித்துக் கொண்ட தீபக்.. “நீங்க என் கல்யாணத்தை மட்டுமா வேண்டாம்னு சொன்னீங்க.. யார் மேல அதிகமா பாசம் வச்சிருக்கீங்களோ.. அந்த உதயா அத்தான் கல்யாணத்தையும் தான் வேண்டாம்னு சொல்றீங்க..” என்றான்.

“அவன் தான் புரிஞ்சுக்காம பிடிவாதம் பண்றான்னா உங்களுக்கும் ஏன் புரிய மாட்டிக்குது.. அவன் எதுக்கு..” என வாசுதேவன் சொல்ல.. இடைமறித்தார் யசோதா.

“விபுவை உதயா அவனோட குழந்தையா தான் பார்க்கிறான்.. அஞ்சலி உதயாவோட ஸ்கூல்ல படிச்ச பொண்ணு.. அவளுக்கு உதவி பண்றதா நினைச்சிட்டு அவன் இந்த கல்யாணத்தை பண்ணலை..

உதயா மனசார அந்த பொண்ணை விரும்புறான்.. அதை புரிஞ்சுக்கோங்க..” என்றார் யசோதா.

“இருக்கலாம்.. ஆனா..” என வாசுதேவன் சொல்ல.. “ஆனா என்னப்பா.. உங்களுக்கு உங்க பிடிவாதம் தான் பெருசு.. நீங்க நினைக்கிறது தான் சரி.. அப்டித்தான..

சாரதா அத்தை உதயா அத்தானை நல்லா பார்த்துக்க மாட்டாங்கனு பேசாம இருந்தீங்க.. ஆனா அத்தை உண்மையான பாசத்தோட தான் இருக்காங்க..

இத்தனை வருஷமா பேசாம இருந்ததுல உதயா அத்தானோட இருக்கிற சந்தோஷத்தை இழந்துட்டு நிக்கிறீங்க.. இப்பவும் உதயா அத்தான் உங்க மேல அதே பாசத்தை காட்ட தயாரா இருக்காங்க.. ஆனா நீங்க..

இப்பவும் பாசம்ன்ற பேர்ல எல்லா சொந்தத்தையும் இழந்துட்டு நிக்கிறீங்க.. நாங்களும் ஏன் அப்டி இருக்கணும்..” என கேட்டான் தீபக்.

அவன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார் வாசுதேவன். யசேதா தீபக் இந்து மூவரும் உதயா அஞ்சலி திருமணத்திற்கு கிளம்பினர்.

அவர்கள் மூவரும் சென்ற பின் தனிமையில் இருந்த வாசுதேவனுக்கு மனம் வலித்தது. தன் குடும்பத்தினர் தன் பேச்சை மீறியதால் வந்த மனவலி அல்ல..

உதயா அத்தானோட இருக்கிற சந்தோஷத்தை தான் இழந்துட்டு நிக்கிறீங்க.. என தீபக் சொன்ன வார்த்தைகள் தான் வாசுதேவனின் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

அதுதானே உண்மை.. பாசம் பாசம் என்று சொல்லியே எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறேனே.. சாரதாவை ஏற்றுக் கொண்டிருந்தால்.. உதயா தன் குடும்பத்தில் ஒருவனாக.. தன்னுடனே இருந்திருப்பானே.. என எண்ணிக் கொண்டிருந்தார் வாசுதேவன்.

இப்போதும் உறவை மறுப்பது தன்னுடைய தவறு என்ற உண்மை விளங்கினாலும் முழுமனதோடு அஞ்சலியையும் விபுவையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தார்.

“நீங்க வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் மாமா..” என உதயா சொன்னதை எண்ணிப் பார்த்தவர் தன் பிடிவாதத்தை விட்டுவிட்டு உதயாவின் திருமணத்திற்கு கிளம்பினார்.

கோவிலில் எளிமையாக எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க.. உதயாவும் அஞ்சலியும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

யசோதா சாரதா ரவிச்சந்திரனுக்கு உதவிக் கொண்டிருந்தார். தீபக் விபுவுடன் விளையாடிக் கொண்டு இந்துவுடன் பேசிக் கொண்டிருந்த மானசியை ரசித்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையை கவனித்தாலும் கவனிக்காதவள் போல உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் மானசி.

தங்களின் பேச்சு வாசுதேவன் மனதில் சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு.. அவர் உதயாவின் திருமணத்திற்கு கிளம்பி வந்தது அதிர்ச்சியாக தான் இருந்தது.

சாரதாவும் ரவிச்சந்திரனும் மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்க.. தலையை மட்டும் அசைத்தார்.

கடவுள் சாட்சியாக.. தன் மீது பாசம் கொண்டவர்கள் தன் நேசத்தை விரும்புவர்கள் முன்னிலையில்.. அஞ்சலிக்கு திருமாங்கல்யம் அணிவித்து அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் உதயா.

சாரதா ரவிச்சந்திரனிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டவர்கள்.. வாசுதேவன் யசோதா காலிலும் விழுந்தனர்.

“உன் மனம் போல நல்லா இருப்ப..” என உதயாவின் தலையில் கைவைத்து வாசுதேவன் வாழ்த்த.. அவரின் வருகை தந்த மகிழ்ச்சியில் பூரித்திருந்தாள் அஞ்சலி.

சிறிது நேரத்திற்கு பிறகு எல்லோரும் உதயாவின் வீட்டுக்கு கிளம்பினர். சாரதா ஆரத்தி எடுக்க.. உதயாவின் மனைவியாக.. அந்த வீட்டின் மருமகளாக.. தன் பாதம் பதித்தாள் அஞ்சலி.

வாசுதேவன் மனமிறங்கி வந்திருந்த போதிலும்.. யாருடனும் பேசாமல் விலகியே இருந்தார். திடீரென உதயா ஏதோ தோன்ற தன் அன்னையின் காதில் கிசுகிசுத்தான்.

சாரதாவும் ரவிச்சந்திரன் யசோதாவிடம் உதயா சொன்னதை சொன்னார். புன்னகையுடன் அவர்களும் உதயாவை பார்த்து தலையாட்டினர்.

“நான் எல்லாருக்கும் சாப்பாடு ரெடி பண்றேன்..” என்ற சாரதா எழும்ப.. “நானும் வர்றேன் அண்ணி..” என்ற யசோதாவும் அவருடன் சென்றார்.

“உதய்.. நீயும் அஞ்சலியும் ரூமுக்கு போங்க.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க..” என ரவிச்சந்திரன் சொல்ல.. புன்னகையோடு எழுந்து சென்றான் உதயா.

அறைக்குள் வந்த அஞ்சலி.. “உதி இங்க என்ன நடக்குது..” என கேட்டாள். அவளிடமும் விவரத்தை சொன்னான் உதயா. என்ன நடக்க போகிறதோ என்ற படபடப்பு தொற்றிக் கொண்டது அஞ்சலியை..

ரவிச்சந்திரன்.. தீபக்கிடம் ஏதோ பேசியபடியே அங்கிருந்து எழுந்து சென்றார்.

வாசுதேவன் அருகில் இந்து அமர்ந்திருக்க.. அவளருகில் அமர்ந்திருந்த மானசி “என் செல்லக்குட்டி இன்னைக்கு ரொம்ப குஷியா இருக்கீங்க.. என்ன விஷயம்.. அப்பா அம்மாவுக்கு கல்யாணம்னா..” என விபுவை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

“தம்பியை நான் வச்சிருக்கேன்.. கொடுங்க அண்ணி..” என இந்து கேட்க.. அவளிடம் விபுவை கொடுத்த மானசி யதேச்சையாக திரும்ப.. தீபக் அவளை சைகையால் அழைத்தான்.

வாசுதேவனையும் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மானசி.

“அப்பா.. இங்க பாருங்களேன்.. எவ்ளோ அழகா இருக்கான் இந்த குட்டி பையன்.. சிரிப்பை பாருங்க..” என வாசுதேவனின் அருகில் அமர்ந்து விபுவை கொஞ்சிக் கொண்டிருந்தாள் இந்து. திரும்பி பார்க்க மனம் துடித்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார் வாசுதேவன்.

“இந்து இங்க கொஞ்சம் வா..” என்ற யசோதாவின் குரல் கேட்டு.. விபுவுடன் எழும்பப் போன இந்து.. அங்கங்கே நின்றுகொண்டு.. விபுவை வச்சிட்டு வா.. என எல்லாரும் சைகை செய்ய குழம்பிப் போனாள்.

ஒருவழியாக புரிந்து கொண்டு விபுவை வாசுதேவனின் அருகில் வைத்துவிட்டு எழுந்து சென்றாள்.

“உதி.. என்ன நடக்கும்..” என அஞ்சலி படபடப்புடன் வினவ.. “மாமா விபுவை கையில எடுத்துப்பாங்க..” என சொன்னான் உதயா.

“நிஜமாவா..” என விழிகள் விரித்து அஞ்சலி வினவ.. “நிஜமா தான்..” என அவளை அணைத்துக் கொண்டான் உதயா.

வாசுதேவனை பார்த்தபடி தீபக்குடன் ஒளிந்து நின்று கொண்டிருந்த மானசி.. “இது அண்ணனோட ப்ளான் தான..” என கேட்க.. தீபக் தலையசைத்தான்.

மானசியின் குதூகலமும்.. மகிழ்ச்சியும்.. அவளை நெருங்க தூண்டினாலும்.. வெகு சிரமத்துடன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான் தீபக்.

கையில் இருந்த விளையாட்டு சாமானை ஆட்டியபடி புன்னகைத்தான் விபு.. அந்த சத்தம் அவன் முகம் காணும் ஆவலை உண்டாக்கினாலும் வேறுபுறம் தன் பார்வையை செலுத்தினார் வாசுதேவன்.

தன் பிஞ்சு பாதங்களால் விபு அவரை உதைத்தான். அந்த நொடியில் “விபு என்னோட பையன்.. என்னோட பையன் மட்டுந்தான்..” என்ற உதயாவின் அழுத்தமான குரல் வாசுதேவனின் செவிகளில் கேட்டது.

தன் வீண் பிடிவாதத்தை தொலைத்து.. விபுவை தன் கைகளில் ஏந்தினார் வாசுதேவன்.. உதயாவின் மகன் என்ற எண்ணத்துடன்.

“உதி..” என அஞ்சலி காதலுடன் உதயாவை அணைத்துக் கொள்ள.. உதயாவும் அவளை முத்தமிட்டான்.

மானசியை நெருங்க துடிக்கும் தன் மனதை தீபக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்க.. அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள் மானசி.

இது அப்பாவின் மாற்றத்தினால் வந்த சந்தோஷம் மட்டுமா.. என்ற தவிப்புடன்.. “மானசி..” என தீபக் அழைக்க.. வெட்க புன்னகையுடன் அவன் முகம் பார்த்தாள் மானசி.

“செல்லம்..” என உற்சாகமாக அவளை இறுக்கி அணைத்தான் தீபக்.

வாசுதேவனை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த சாரதா ரவிச்சந்திரன் யசோதா இந்துவும் மகிழ்ந்திருக்க.. “ஒளிஞ்சிருந்து பார்த்தது போதும்..எல்லோரும் வெளியே வாங்க..” என்றார் வாசுதேவன்.

சிரிப்புடன் எல்லோரும் வெளியே வர.. “சாரதா.. அடுத்த நல்ல நாள் என்னைக்கு இருக்குனு பாரு மா..” என்றார் வாசுதேவன்.

“எ.. எதுக்கு ண்ணா..” என சாரதா தயக்கத்துடன் கேட்க.. “தீபக் மானசி கல்யாணத்துக்கு மா..” என்றார் வாசுதேவன்.

எல்லோர் மனதின் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் விதம் புன்னகைத்துக் கொண்டிருந்தான் விபு.

முற்றும்❤❤

Thanks everyone for your love and support..

  Jamuna❤❤

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top