WatTruyen.Top

வரம் நீயடி..

💞 18 💞

jamunaguru

வாசுதேவன் உதயா வீட்டுக்கு செல்ல.. இந்திராவின் நினைவு நாளை தேர்ந்தெடுத்ததன் காரணம் அந்த நாளில் மட்டுமாவது தன் தங்கையை நினைவில் வைத்திருக்கிறார்களா இல்லை.. சாரதாவின் அன்பில் இந்திராவை மறந்தே போய்விட்டார்களா என்பதை அறிந்து கொள்ளத்தான்.

இந்திராவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பிடித்த உணவுகளை படைத்திருப்பதை பார்க்கையில் வாசுதேவனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.

ஆனால் மானசி.. தன் அம்மாவின் அக்கா என இந்திராவின் புகைப்படத்தை பார்த்து சொன்ன போது.. உதயாவிடமும் இப்படித்தான் சொல்லியிருப்பார்களோ என தோன்றியது வாசுதேவனுக்கு.

உதயாவை தன்னிடமிருந்து பிரிப்பதாக எண்ணிக்கொண்டார். தன் தங்கையின் மகன் மீது சாரதாவை விட தனக்கு தான் உரிமை அதிகமாக இருப்பதாக எண்ணினார் வாசுதேவன்.

உதயா வீட்டில் இல்லை என்பதால் அவனுக்காக காத்திருக்க நேர்ந்த போது அவனுக்கு தன்னை யார் என தெரியுமா.. இவ்வளவு நாட்கள் அவனை பிரிந்து இருந்தது தவறு.. அவனை தானே வளர்த்திருக்க வேண்டும் என எதைஎதையோ எண்ணியபடி தவிப்புடன் அமர்ந்திருந்தார்.

அவர் உதயாவை காண விரும்புகிறார் என்பதை மட்டும் மற்றவர்கள் புரிந்து கொண்டனர். அஞ்சலி வெளியே நின்று பங்கஜத்துடன் பேசிக் கொண்டிருக்க.. உதயா மட்டும் வீட்டுக்குள் வந்தான்.

வந்திருப்பவர்கள் யாரென புரியாமல் உதயா சாரதாவை பார்க்க.. “இந்திரா அக்காவோட அண்ணன்..” என சொன்னார் சாரதா.

“பழைய போட்டோவில பார்த்தது.. அதான் சட்டுனு ஞாபகம் வரலை.. அப்பா அம்மா உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்காங்க.. எப்டி இருக்கீங்க மாமா..” என உற்சாகமாக உதயா பேசியதில் வாசுதேவனுக்கு இருந்த தவிப்பெல்லாம் நீங்கிவிட்டது.

எங்கே பாசம் என்ற பெயரில் உதயாவை தன்னிடம் இருந்து சாரதா பிரித்து விட்டாரோ.. என எண்ணியவருக்கு.. உதயா தன்னிடம் சந்தோஷமாக பேசியது நிம்மதியாக இருந்தது.

மகிழ்ச்சியுடன் தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தார் வாசுதேவன். உதயாவும் அவர்களுடன் இயல்பாக உரையாடினான்.

உதயா தன் இரத்த சொந்தமாக தன் தங்கை மகனாக தான் இருக்கிறான்.. அவனை யாராலும் தன்னிடம் இருந்து பிரிக்க முடியாது என எண்ணி மகிழ்ந்தார் வாசுதேவன். அந்த சந்தோஷத்தில் தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் இருந்த தயக்கம் நீங்கியது.

உதயாவை கண்டபின் வாசுதேவனிடம் இருந்த உற்சாகத்தை காண்கையில் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சிறிது நேர உரையாடலுக்கு பிறகு.. அடுத்து என்ன என்பது போல என்ன பேசுவது என புரியாமல் சில நொடிகள் மௌனமாக இருந்தனர் எல்லோரும்.

“அ.. அது மானசியை கல்யாண வீட்டில பார்த்ததும் தீபக்கு பிடிச்சு போச்சு.. அ.. அதான்..” என வாசுதேவன் சொல்ல உதயா வீட்டினருக்கு மட்டுமல்லாது யசோதா தீபக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.

வாசுதேவன் தங்களிடம் பேசாமல் விலகியிருந்தது கூட பாசத்தில் தான் என்பதை உணர்ந்திருந்த சாரதாவுக்கும் ரவிச்சந்திரனுக்கும் இது மகிழ்ச்சியாக இருந்தது. உதயாவும் அவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டான்.

இதுநாள் வரையில் தான் யோசிக்காத ஒரு விஷயத்தை பற்றி திடீரென பேசியது மானசிக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. கண்களில் மிரட்சியுடன் தீபக்கை பார்த்தாள் மானசி.

விபுவை ரசித்தபடியே அஞ்சலியுடன் பேசிக் கொண்டிருந்த பங்கஜம்.. சம்பத் குடும்பத்தை பற்றி பேசத் தொடங்கினார்.

“மாயாவா.. அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டான் மா அந்த பாவி.. அந்த அம்மாவும் மருமகளை அப்டித்தான் தாங்குச்சு.. ஆனா அந்தப் பொண்ணு.. வேலைக்காரி மாதிரி நடத்துது அந்த அம்மாவை.. கொஞ்சநாள் பொறுத்து போச்சு.. இப்பலாம் மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரே சண்டை தான்.

அவனுக்கு வேலையும் போயிடுச்சு போல.. நீ இருந்த வரைக்கும் செலவுக்கு கவலையில்லாம இருந்தாங்க.. இப்ப அதுக்கும் திண்டாட்டமா இருக்கா.. புருஷனும் பொண்டாட்டியும் சண்டை போட்டுட்டே இருக்காங்க.. உனக்கு பண்ண கொடுமைக்கு அனுபவிக்கிறாங்க மா..” என பங்கஜம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

அவர்களின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியோ வருத்தமோ தோன்றவில்லை அஞ்சலிக்கு. அவர்களிடம் இருந்து தானும் விபுவும் பிரிந்து விட்டோம்.. தங்களுக்கு உதி இருக்கிறான். அந்த நிம்மதி போதும் என நினைத்த அஞ்சலி உறக்கத்தில் இருந்த விபுவை முத்தமிட்டபடியே வீட்டுக்குள் வந்தாள்.

தன் தந்தை நடந்து கொண்ட விதத்தில்.. தன் காதல் கைகூடும் என்ற நம்பிக்கையே இல்லாமல் இருந்த தீபக்.. ஆனந்த அதிர்ச்சியுடன் மானசியை பார்க்க.. அவள் பார்வையும் அவன் மீதுதான் இருந்தது.

அப்பா அம்மாவுக்கு சம்மதம் என்பதை புரிந்து கொண்ட உதயா.. மானசி மனதையும் புரிந்து கொண்டு.. “மானசி இன்னும் படிப்பை முடிக்கலை மாமா.. அவ விருப்பமும் என்னனு தெரிஞ்சிட்டு நாங்க உங்களுக்கு முடிவை சொல்றோம்..” என்றான்.

“ஆம்.. ரொம்ப சந்தோஷம் ப்பா..” என மகிழ்ச்சியுடன் வாசுதேவன் சொன்னார்.

விபுவுடன் வீட்டுக்குள் வந்த அஞ்சலி.. வந்திருப்பவர்கள் யாரென கேள்வியாய் உதயாவை பார்க்க.. அஞ்சு.. அஞ்சலி.. நானும் அஞ்சலியும் கல்யாணம் பண்ணிக்க போறோம்..” என வாசுதேவனிடம் அஞ்சலியை அறிமுகம் செய்து வைத்தான் உதயா.

உதயாவை மணக்க போகிறவள் என்ற எண்ணத்துடன் மகிழ்ச்சியாக அஞ்சலியை பார்த்த வாசுதேவன் விபுவை கண்டதும் குழப்பமானார்.

“எங்க பையன் விபு..” என உதயா சொல்ல வாசுதேவன் மேலும் குழப்பத்துடன் அஞ்சலியை பார்த்தார்.

யசோதா தீபக் இந்துவும் புரியாமல் அஞ்சலியை பார்த்தனர். அவர்களின் கேள்வி நிறைந்த பார்வை அஞ்சலிக்கும் எதுவும் பேச இயலாத தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

“அஞ்சலி.. விபுவை ரூம்ல படுக்க வை மா..” என சாரதா சொல்ல.. அஞ்சலி விபுவுடன் அங்கிருந்து நகர்ந்தாள். மகிழ்ச்சியாக இருந்த அஞ்சலியின் மனநிலையும் மாறியது.

அஞ்சலி அறைக்குள் சென்றதும்.. “அஞ்சுவும் நானும் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்.. அஞ்சுவோட அப்பா அம்மா ஆக்சிடெண்ட்ல தவறிட்டாங்க.. கல்யாணத்துக்கு பிறகு அந்த குடும்பத்தால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. இப்பத்தான் டைவர்ஸ் ஆச்சு.. நாங்க சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க போறோம்..” என உதயா விளக்கி சொன்னான்.

இதுபோல எத்தனையோ பேரின் கேள்வி நிறைந்த பார்வையை சந்திக்க நேரும் என்பது புரிந்து மனதை திடப்படுத்திக் கொண்டாலும்.. அதை எதிர்கொள்ளும் திடம் அஞ்சலிக்கு இல்லை.

உதயாவுக்கு தான் வேண்டாம்.. தான் அவன் அன்புக்கு தகுதியானவள் அல்ல என்ற எண்ணம் அஞ்சலிக்கு எழுந்தது.

உதியின் அன்பை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் கண்ணீர் வந்தது அஞ்சலிக்கு.

உதயாவை கண்டபின் இருந்த மகிழ்ச்சி அஞ்சலியை பற்றி அறிந்ததும் மறைந்துவிட வாசுதேவன் குடும்பத்தினருடன் விடைபெற்றுக் கொண்டார்.

அவருக்கு இதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்கிறது என எண்ணிய உதயா அதை பெரிதாக எண்ணவில்லை.

அஞ்சலியை பார்க்க உதயா அறைக்குள் வர.. அவள் அழுது கொண்டிருந்தாள்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top