04
நெருங்காமல் விலகாமல்.. இயல்பான இடைவெளியோடு.. குணாவுடன் நேரம் செலவிட முடிந்தது மதுவின் மனதுக்கு இனிமையாக இருந்தது.
குணாவும் கடந்து போன நிகழ்வுகளை நினைவூட்டாமல்.. பிரிவு குறித்து கேள்வி எழுப்பாமல் நடந்து கொண்ட விதத்தில் நெடு நாட்களுக்கு பிறகு மனதில் நிம்மதியுடன் இருந்தாள் மது.
இதே நிலை நீடித்தால் கூட மனதில் நிம்மதி சூழ்ந்திருக்கும் என தோன்றியது.
இன்று மதியம் குணாவுக்கு பிடித்த சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல் கொண்டு செல்லலாம் என ஆசையாக செய்து எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்றாள் மது.
குணாவின் வரவுக்காக காத்திருந்து ஏமாந்து போனது தான் மிச்சம்.. செய்வதற்கென்று வேலையும் இல்லாமல்.. குணாவின் அருகாமையும் இல்லாமல்.. குணா வராததற்கு காரணமும் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மது.
“ஏன் கடவுளே இப்டி பண்றீங்க.. நான் என் குணா கூட சேர்ந்து வாழணும்னு லாம் ஆசைப்படலையே.. தள்ளி இருந்து பார்க்கிற அந்த சந்தோஷத்தையும் பறிக்கிறீங்களே.. ஏன்..” என எண்ணி கண்ணீர் சிந்தினாள் மது.
“இ.. இது மெயின் ப்ராஞ்ச் இல்லை.. அதனால அதிகபட்சம் ஒரு வாரம் பத்து நாள் தான் இங்க குணா இருக்க ப்ளான் பண்ணிருப்பாரு.. அந்த வேலை முடிஞ்சிட்டு போல..” என காரணம் கண்டுபிடித்தாள் மது.
“அதுக்காக.. இன்னைக்கு கிளம்புறதா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே..” என மனம் கேள்வி கேட்டது.
“உன்கிட்ட சொல்றதுக்கு நீ யாரு.. நீ.. நீதான அவரை விட்டு விலகுன..” என தன்னைத்தானே திட்டிக் கொண்டு கண்ணீர் சிந்தினாள்.
“இதுதானே நிரந்தரம்.. இரண்டு வருஷம் எப்டியோ உன்னை பிரிஞ்சு இருந்துட்டேனே குணா.. திரும்பவும் ஏன் வந்த.. இப்ப என்னால முடியலை..” என தவித்துக் கொண்டிருந்தாள் மது.
அடுத்த நாளும் அலுவலகம் வந்தாள் மது. குணா வரவில்லை. வருவான் என்றும் தோன்றவில்லை. அவனை ரசித்துக் கொண்டிருந்த.. அவன் அருகாமையில் பாதுகாப்பை உணர்ந்த அந்த அறையிலே அமர்ந்திருந்தாள் மது வெறுமையாக இருந்த குணாவின் இருக்கையை பார்த்தபடி.
முந்தைய நாள் இரவில் உறங்காததாலும்.. ஒழுங்காக சாப்பிடாத சோர்விலும் அப்படியே மேஜை மீது தலைவைத்தபடி உறங்கிப்போனாள் மது.
நேரம் கடந்ததையோ.. அறையில் ஆள் நடமாட்டம் இருந்ததையோ மது உணரவேயில்லை.. அவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
உறக்கம் கலைந்து கண்விழித்த போது.. குணா அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னுடைய மனபிரம்மையோ.. என எண்ணிய மதுவும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நொடிகள் கடந்ததும்.. “கிளம்பலாமா மது..” என குணா கேட்க.. அந்தக் குரல் காதில் கேட்டதும் தான்.. மனப்பிரம்மை அல்ல என்பது மதுவுக்கு உரைத்தது.
பதறி எழுந்து நின்றாள் மது. ஆனால் உடல் சோர்வு.. தலையை பிடித்தபடி இருக்கையிலே விழுந்தாள். பதற்றத்துடன் அவளருகில் வந்த குணா.. அவளை தன்மேல் சாய்த்துக் கொண்டான்.
பழச்சாறு வரவழைத்து அவளை அருந்த வைத்தான். குணாவின் அருகாமை.. மனதுக்கு பலம் தர.. உடல் சோர்வும் சற்று நீங்கியது.
இருள் சூழ்ந்திருக்க.. “எப்டி இவ்ளோ நேரம் தூங்கினேன்.. குணா எப்ப வந்திருப்பாரு..” என மது மனதில் கேள்விகள் பல எழுந்தது.
மதுவின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல்.. அலுவலகத்தில் இருந்து மது தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றான் குணா. வழக்கம் போல மது எதுவும் பேசாமல் காரில் இருந்து இறங்க முயன்றாள்.
“என்னை வீட்டுக்கு வா..னு கூப்பிட மாட்டீயா மது..” என குணா கேட்க.. இதயம் படபடக்க.. திரும்பி அவனை பார்த்தாள் மது.
“அ.. அது..” என மது தயங்க.. “வரலாம் தான..” என குணா கேட்டான்.
ஆம் என்பது போல தலையசைத்தாள் மது.
ஹாலில் இரண்டு சேர் தவிர வேறு எந்த பொருட்களும் இல்லை.. படுக்கை அறையில் கட்டில் மட்டும்.. சமையல் அறையில் உள்ள பொருட்கள் மட்டுமே வீட்டில் ஆள் தங்கியிருப்பதை உணர்த்தும் வகையில் இருந்தது.
வீட்டை அலசிய குணாவின் பார்வை தீவிரமாக தன்மீது பதியவும் தடுமாறினாள் மது.
“நா.. நான்.. சாப்பிட எதாவது.. செய்றேன்..” என தடுமாற்றத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர முயன்றாள் மது.
“எதுவும் வேண்டாம் மது.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான் குணா அழுத்தமான குரலில்.
அவன் எதைப்பற்றி பேசப்போகிறான் என்பதை உணர்ந்தவள் போல படபடப்புடன் நின்றிருந்தாள் மது.
“என்ன மது இதெல்லாம்.. இதுக்காகவா..” என சலிப்புடன் தொடங்கிய குணா.. “சரி வா.. இங்கிருந்து கிளம்பலாம்..”என சொன்னான்.
குணாவை பார்க்கும் பலமின்றி தலையை மட்டும் வேண்டாம் என்பது போல் அசைத்த மதுவின் கண்களில் கண்ணீர் கசிந்தது.
அவள் கண்ணீரை கண்டதும் அதை தாங்க முடியாதவனாக.. அவளை நெருங்கி அவள் கண்ணீரை துடைத்தான்.
“வே.. வேண்டாம் குணா.. போய்டுங்க.. ப்ளீஸ்..” என்றாள் மது கெஞ்சலாக கண்ணீருடன்.
“நீ இல்லாம எப்டி மது..” என்றான் குணா.
எதுவும் பேச இயலாமல் மௌனமாக அவன் நெஞ்சில் சாய்ந்து அழத்தொடங்கினாள் மது. குணாவும் எதுவும் பேசாமல் ஆறுதலாக அவள் முதுகில் வருடினான்.
சில நிமிடங்கள் கடந்த பின்.. மதுவின் அழுகை சற்று குறைந்ததும்.. அவள் முகத்தை தன் கரத்தில் ஏந்தியபடி கண்ணீரை துடைத்தான் குணா.
“எல்லாத்தையும் மறந்துடலாம் மது ப்ளீஸ்..” என்றான் குணா.
முடியாது என்பது போல தலையசைத்தாள் மது கண்ணீருடன்.
“முடியும் மது.. முடியும்..” என்ற குணா அவள் இதழ்களில் மென்மையான ஒரு முத்தத்தை பதித்தான்.
“குணா.. ப்ளீஸ்..” என அவனிடம் இருந்து விலக முயன்றாள் மது.
“ஏன் மது.. எனக்கு உரிமை இல்லையா.. சொல்லு மது..” என குணா கேட்க.. “இருக்கு.. குணா.. உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு..” என மனதில் நினைத்த மது அதன்பின் குணாவை தடுக்கவில்லை.
காதலுடன் உடலாக உயிராக அவனுள் ஒன்றிப்போனாள் மது.
தன் வெற்று மார்பில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த மதுவின் கேசம் வருடினான் குணா.
“மனசுக்குள்ள என்னத்த மறைச்சு வச்சிட்டு இப்டி நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்துற டீ என் செல்ல பொண்டாட்டி..” என கொஞ்சியவன்.. “எல்லாம் சரியாகிடும்.. மது.. நம்மள யாரும் பிரிக்க முடியாது..” என மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
மது தன் மனைவியான அந்த நாளை நினைத்து பார்த்தான் குணா.
“குணா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. அப்பா அம்மா பொண்ணு பார்க்க யாரையோ வரச்சொல்லிருக்காங்க.. என்ன பண்றது இப்ப..” என பயத்துடன் படபடத்தாள் மது.
“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் மது..” என இயல்பாக.. பதற்றமின்றி சொன்னான் குணா.
“விளையாடாத குணா.. ஐயம் சீரியஸ்..” என்றாள் மது லேசான கோபத்துடன்.
“விளையாடல மது.. இன்னைக்கு முகூர்த்த நாள் தான்.. இன்னைக்கே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்றான் குணா.
“நிஜமாவா..” என மது நம்ப முடியாமல் கேட்க.. ஆம் என்றான் குணா.
“கல்யாணம் அவ்ளோ ஈசியா..” என மது நினைத்துக் கொண்டிருக்க.. அத்தனை எளிதாகவே நடத்திக் காட்டினான் குணா.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top