03
வேலை என்று காரணம் சொன்னாலும்.. தன்னுடன் பேசுவதற்கு தான் இதையெல்லாம் குணா செய்கிறான் என்பது புரிந்தது மதுவுக்கு.
எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும் எதையும் சொல்லக்கூடாது.. குணாவிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும்.. என தன்னால் முடியாத விஷயங்களை மனதுக்குள் உறுதியாக எண்ணிக் கொண்டாள் மது.
தன்னை எவ்வளவோ திடப்படுத்திக் கொண்டு.. குணா கேட்ட பைல்களை எடுத்துக்கொண்டு அந்த அறைக்குள் மீண்டும் வந்தாள் மது.
சுமித்ராவுடன் போனில் பேசிக் கொண்டிருந்த குணா.. “நா.. நான்.. அப்புறம் பேசுறேன்..” என சொல்லிவிட்டு போனை கட் பண்ணினான்.
மதுவிடம் சில வேலைகளை கொடுத்து விட்டு.. தன் வேலையில் மூழ்கினான் குணா.
இந்த தனிமையை குணா ஏற்படுத்திக் கொண்டதே.. தன்னிடம் பேசுவதற்கு தான் என மது நம்பிக் கொண்டிருக்க.. குணா எதுவும் பேசாமல் தன் வேலையில் மூழ்கியிருக்க.. குழப்பத்துடன் அவனை பார்த்தாள் மது.
மது தன்னை கவனிப்பது தெரிந்தாலும் கண்டு கொள்ளாதவன் போல நடந்து கொண்டான் குணா.
கடந்த காலத்தின் நிகழ்வுகள் விலகியிருக்க தூண்டினாலும்.. காதல் கொண்ட மனம் குணாவை நெருங்க தூண்டியது.. விலகவும் முடியாமல் நெருங்கவும் தவித்துக் கொண்டிருந்தாள் மது.
தன்னுடைய குணா.. தன் அருகில் இருந்தும் பேசாமல் இருக்கிறானா.. என கவலையாக இருந்தது மதுவுக்கு. அப்படியானால் குணா தன்னை மறந்துவிட்டு வேறு ஒருத்தியை.. வலித்தாலும் அதுதான் நிஜம் என நினைத்தாள் மது.
நேரம் கடப்பதே அறியாமல் வேலையில் மூழ்கியிருந்த குணாவின் மீது தன் பார்வையையும் அவ்வப்போது பதித்தபடி இருந்தாள் மது.
ஆனால் தன் மது விலகியிருக்க முடியாமல் தன்னை ரசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து உள்ளம் குதூகலித்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் வேலையில் கவனத்தை செலுத்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தான் குணா.
ஒரு நொடி.. கடந்தகாலம்.. தன் வலி.. என எல்லாம் மறந்து.. மது குணாவை ரசித்துக் கொண்டிருக்க.. “சாப்பிட என்ன வேணும்..” என கேட்டான் குணா.
என்ன பேசினான் என்பதே புரியாமல்.. திருதிருவென விழித்தாள் மது.
“சாப்பாடு என்ன வேணும்..” என மீண்டும் அழுத்தங் திருத்தமாக.. சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான் குணா.
“அ.. அது.. எதுவும் வே.. வேண்டாம்..” என தயங்கி தயங்கி சொன்னாள் மது.
எதுவும் சொல்லாமல்.. இருவருக்கும் உணவை வாங்கிவர.. ஆள் அனுப்பினான். சாப்பாடு வந்ததும் மதுவுடன் சாப்பிட அமர்ந்தான் குணா.
எதுவுமே தெரிந்து கொள்ள குணா விரும்பவில்லையா.. இல்லை நான் சொல்ல மாட்டேன் என குணா நினைக்கிறாரா.. என தனக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொண்டாள் மது.
மதுவின் தவிப்பு புரிந்தாலும்.. அவளே சொல்லட்டும்.. அவளே தன்னை நெருங்கட்டும் என அமைதி காத்தான் குணா.. தன்னால் முடியாவிட்டாலும்.
வழக்கமாக அலுவலக நேரம் முடிந்ததும் கிளம்பிவிடும் மது.. குணாவை ரசித்துக் கொண்டிருந்ததில்.. நேரம் இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்ததை கவனிக்கவில்லை.
மீதமிருக்கும் வேலைகளை நாளை பார்த்துக் கொள்ளலாம் என குணா கிளம்பச் சொல்கையில்.. குணாவிடம் இருந்து பிரிய விரும்பாமல் மனம் தவித்தாலும் அங்கிருந்து கிளம்பினாள் மது.
அலுவலகத்தின் வாயில் வரை வந்ததும் தான் மணியை பார்த்தாள் மது. “மணி ஒன்பது ஆகிடுச்சா..” என மனதுக்குள் பதறிய மது.. இப்போது தனியாக எப்படி செல்வது என தவிப்புடன் இருளை வெறித்தாள்.
“எங்க தங்கியிருக்க மது..” என மிக அருகில் குணாவின் குரல் கேட்க.. படபடப்புடன் திரும்பி பார்த்தாள் மது.
“அ.. அது.. இ.. இங்க பக்கத்துல தான்..” என்றாள் மது.
“சரி வா.. நான் உன்னை ட்ராப் பண்ணிடுறேன்..” என காரில் ஏறச்சொன்னான். எப்படி செல்வது என தவித்துக் கொண்டிருந்த மது.. பயமும் படப்படப்பும் நீங்கி குணாவின் அருகாமையில் பாதுகாப்பாக உணர்ந்தாள்.
மதுவுக்கு திவ்யாவிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அட்டெண் பண்ணிய மது.. “நான் வீட்டுக்கு போய்ட்டு பேசுறேன் திவ்யா..” என சொல்லிவிட்டு போனை கட் பண்ணினாள்.
“திவ்யா உன்கூட தான இருக்கா..” என குணா கேட்க.. இல்லையென தலையசைத்தாள் மது.
“நீ மட்டும் தனியா இருக்கியா..” என லேசாக புருவத்தை சுழித்தபடி குணா கேட்க.. ஆம் என தலையசைத்தாள் மது.
அதற்கு மேல் எதுவும் கேட்டால் உளறிவிடுவோமோ என பயமாக இருந்தது மதுவுக்கு. கூடவே வீட்டுக்கு வருவானோ என்றும்.
ஆனால் குணா எதுவும் கேட்கவும் இல்லை.. மது சொன்ன இடத்தில் அவளை இறக்கி விட்டான். வீட்டுக்கு கூப்பிடுவதா வேண்டாமா என தயக்கத்துடன் மது நிற்க.. “நாளைக்கு பார்க்கலாம்..” என சொல்லிவிட்டு கிளம்பினான் குணா.
குணா எதுவும் கேட்காமல் இருப்பது மனதுக்கு நிம்மதியாக இருந்தாலும்.. தன்னை மறந்துவிட்டு வாழ தொடங்கிவிட்டான் என நினைத்து கண்ணீரும் வந்தது.
வீட்டுக்குள் வந்த மது.. தன் வாழ்க்கை எப்படி தடம் புரண்டு விட்டது என்பதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.
திவ்யா மீண்டும் அழைக்க.. அவளிடம் நடந்ததை சொன்னாள் மது.
“மது.. நடந்ததை எல்லாம் குணா கிட்ட சொல்லு.. அவர் புரிஞ்சுப்பாரு..” என திவ்யா எவ்வளவோ பேசியும் தன் முடிவில் உறுதியாக இருந்தாள் மது.
ஆனால் தன் மன உறுதியெல்லாம் குணாவின் முன் தோற்றுப்போகுமே என்ன செய்வது என தவிப்பாக இருந்தது மதுவுக்கு.
மது அறியாமல் குணாவிடம் பேச வேண்டும் என எண்ணிக் கொண்டாள் திவ்யா.
மது மனதில் உறுத்திக் கொண்டிருப்பது எதுவாக இருந்தாலும் அதை மீறி அவளை தன்னிடம் தங்கள் காதல் சேர்க்கும் என்ற மனநிம்மதியுடன் இருந்தான் குணா.
அடுத்த நாள் முதல்.. அலுவலகத்தில் சில மாற்றங்கள் மதுவின் மனதுக்கு சந்தோஷம் தருவதாக அமைந்தது.
மதுவின் இருக்கை.. குணாவின் அறைக்கே மாற்றப்பட்டது.. மதிய உணவும் இரவு உணவும் இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட நேர்ந்தது.. அல்ல.. சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினான் குணா.
அதுமட்டுமின்றி.. குணா.. தங்கள் பழைய வாழ்வு குறித்தோ.. பிரிவு குறித்தோ.. எந்த கேள்வியும் எழுப்பாதது.. என எல்லாம் மனதுக்கு இனிமையாக இருந்தது.
அன்று குணாவுக்கும் சேர்த்து மதிய உணவை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் மது.. மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்.
நெருங்காமல் விலகாமல்.. இதே இடைவெளியுடன் குணாவுடன் இருக்கும் சந்தோஷத்தை மட்டும் எனக்கு கொடு கடவுளே.. என வேண்டிக் கொண்டு அலுவலகத்திற்கு சென்றாள் மது.
ஆனால் அன்று குணா அலுவலகத்திற்கு வரவேயில்லை.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top