❤ 04
மென்மையாக தலையை வருடியபடி.. “சித்துமா..”என அழைத்தான் மிதுன்.
அப்பாவின் நினைவில்.. தவித்துக் கொண்டிருந்த சித்ராவின் உயிரை ஊடுருவிய அந்த அழைப்பில்.. மெல்ல எழுந்த சித்ராவின் விழிகள் முதலில் கண்டது.. அவள் சோகத்தை தன் சோகமாக கண்களில் பிரதிபலித்தபடி நின்றிருந்த மிதுனை தான்.
“என்னடா..”என மிதுன் கேட்ட விதத்தில் உருகிப் போனாள் சித்ரா.
“ஒ.. ஒன்னுமில்லை..”என தடுமாற்றத்துடன் சொன்னாள் சித்ரா.
அருகிலிருந்த பெஞ்ச்சை சற்று நகர்த்தி.. அவளருகில் அமர்ந்த மிதுன்.. மெல்ல அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.. “ஒன்னுமில்லாததுக்காடா அழுற..” என கேட்டான்.
கண்ணீர் வழிவதையே அவன் கேட்ட பிறகு தான் உணர்ந்தாள் சித்ரா.
ஏதோ தவறு இழைத்து விட்டவள் போல விழிகள் மருள அவனை பார்த்தாள் சித்ரா. இருவருமே சில நொடிகள் தங்கள் சுற்றுப்புறத்தை மறந்து விட்டிருந்தனர்.
“சித்து எதுக்கு இப்ப அழுற.. என்ன நடந்துச்சு..”என செழியனும் ஆர்த்தியும் கேட்க.. இருவரையும் ஏதோ புரியாத மொழி பேசுபவர்களை போல சில நொடிகள் பார்த்தாள் சித்ரா.
மிதுனின் கண்களிலும் அதே கேள்வியை கண்ட சித்ரா.. “அ.. அப்பா.. நியாபகமாவே இருக்கு..”என்றாள் மெல்ல அவனையே பார்த்தபடி.
“அதுக்கு ஏன்டா கண் கலங்குற.. அப்பா உன்னை விட்டு எங்கையும் போகலை.. உன்கூடவே தான் இருக்காங்க.. இனிமே இப்டி அழக்கூடாது..” மென்மையான குரலில் தொடங்கி.. லேசான கண்டிப்புடன் முடித்தான் மிதுன்.
அந்த மென்மையான கண்டிப்பில் மனம் உருகிட.. சரியென்பது போல தலையசைத்தாள் சித்ரா.
❤❤
“சித்து..”என்ற குரல் கேட்டு மெல்ல நிகழ்காலத்திற்கு வந்தாள் சித்ரா. எதிரில் நின்றிருந்தான் செழியன்.
எல்லாம் வெறும் நினைவு மட்டுமே.. அதிலே தொலைந்திட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது சித்ராவுக்கு.
சித்ராவின் மனம் மிதுனின் அன்பிற்கு ஏங்கியது.. தன் தவிப்பை தனக்குள்ளே புதைத்தவள்.. வலிந்து புன்னகைத்தாள் செழியனை பார்த்து.
“என்ன செழியன் இங்க வந்துருக்க..” என கேட்டாள் சித்ரா.
“இங்க பக்கத்தில அப்பாவோட ப்ரெண்ட்ட பார்க்க வந்தேன்.. அதான் அப்டியே உன்னையும் பார்க்க வந்தேன்..” என்றான் செழியன்.
மணியை பார்த்தவள்.. அப்போது தான் உணர்ந்தாள்.. கல்லூரி பேருந்து சென்றிருக்கும் என்பதை.. ஆட்டோ எதுவும் இருக்குமா.. சரி பார்த்துக் கொள்ளலாம் என யோசனையுடன் நடந்தாள். உடன்வந்த செழியனோடு பேசக்கூட தோன்றாமல் வந்து கொண்டிருந்தாள் சித்ரா.
“சித்து.. நான் உன்னை வீட்டில விட்டுடுறேன் வா..”என்றான் செழியன் தன் பைக் அருகில் வந்ததும்.
சரியென தலையசைத்தாள் சித்ரா. “சித்து.. நீ இன்னும் மிதுனை மறக்கலையா..”என கேட்டான் செழியன்.
“எப்டி முடியும்..”என பதிலுக்கு கேட்டாள் சித்ரா.
அந்த கேள்விக்கு செழியனிடம் பதில் இல்லை தான்.. எதுவும் பேசாமல் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றான் செழியன்.
கமலி வற்புறுத்தியதால் அங்கேயே சாப்பிட சம்மதித்தான் செழியன். சித்ரா தான் சமைத்தாள்.
❤❤
செழியனின் அக்கா செல்வியின் திருமணத்தின் போது.. நண்பர்கள் நால்வரும் செழியனின் வீட்டில் கொஞ்சம் கொஞ்சம் உதவியும் உபத்திரவமுமாக நேரத்தை சந்தோஷமாக கழித்தனர்.
சித்ரா விடுதியில் இருந்தாலும்.. விடுமுறை நாட்களில் நண்பர்கள்.. வீட்டில் நேரத்தை கழிப்பது வாடிக்கை. ஆர்த்தியின் அண்ணன் வினோத் அவளுக்கும் அண்ணன் ஆகியிருந்தான். செழியனின் வீட்டிலும் அவள் ஒருத்தியாக மாறியிருந்தாள்.
ஆனால் மிதுனின் உயிராக சித்ராவும் சித்ராவின் உயிராக மிதுனும் மாறியருந்தது அவர்களே உணராத ரகசியம்.
நண்பர்கள் எல்லாம் திருமண வேலைகளில் மும்மரமாக இருந்த வேளையில்.. அங்கே வந்த சித்ராவிடம் மிதுன்.. “சித்து.. ஒரு டீ போட்டு கொடேன்..”என்றான்.
சரியென தலையசைத்தவள் கிச்சனுக்குள் சென்று டீ போட்டாள். சித்ரா தன் வீடு போல உரிமையாக கிச்சனில் இருப்பதை கவனித்த செழியன்.. “சித்து.. என்ன பண்ற..”என கேட்டான்.
“மிதுன்.. டீ கேட்டான்.. அதான் டீ போடுறேன்.. உனக்கு வேணுமா..”என கேட்டாள் சித்ரா.
“இல்லை வேண்டாம்..”என புன்னகையோடு மனதில் சந்தோஷம் பரவ அங்கிருந்து நகர்ந்தான் செழியன்.
சித்ரா மிதுனிடம் டீயை கொடுக்க.. எதுவும் பேசாமல் கொஞ்சம் குடித்த மிதுன்.. டம்ளரை அவளிடம் நீட்டினான்.
என்ன குடிக்கலையா.. என்பது போல சித்ரா அவனை பார்த்து விழிக்க.. “சித்துமா.. உனக்கு டீ போடத் தெரியாதுனு கொஞ்சம் முன்னாடி சொல்லிருக்க கூடாதா..”என பாவமாக முகத்தை வைத்தபடி கேட்டான் மிதுன்.
மிதுன் சொன்னது புரிந்து.. அங்கிருந்த ஆர்த்தியும் செழியனும் சிரிக்க.. சித்ரா அவனை முறைத்தபடி அங்கிருந்து சென்றுவிட்டாள். மிதுனின் சிரிப்பு சத்தமும் அவள் காதுகளை எட்டியது.
கிச்சனுக்கு வந்த சித்ராவிடம் வைதேகி.. “நீதான் டீ போட்டீயா டா..” என கேட்டார். ஆம் என தலையசைத்தாள் சித்ரா.
“டீத்தூள் கொஞ்சம் குறைச்சி போட்டிருக்கலாம்ல..”என்ற வைதேகி.. “இந்த டீயை குடிச்ச அந்த அப்பாவி யாரு..”என கேட்க.. சிரிப்புடன் அங்கே மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.
“அந்த அதிர்ஷ்டசாலி நம்ம மிதுன் தான்..”என செழியன் சொல்ல.. அவனை முறைத்த மிதுன்.. “உனக்கு டீ பிடிக்காதுன்ற திமிரு.. இரு சித்து கிட்ட சொல்லி உனக்கு காபி போட்டு தரச் சொல்றேன்..”என்றவன் சித்ராவை பார்த்து.. “சித்துமா.. உன் கையால செழியனுக்கு காபி போட்டுக் கொடு..” என்றான்.
செழியன் வேண்டாம் என சித்ராவை பார்த்து தலையசைக்க.. அங்கே இருந்த மற்றவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.
இருவரையும் முறைத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் சித்ரா. முகத்தை முறைப்புடன் வைத்திருந்தாலும்.. உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. டீ போட தெரியாதுனு சொல்லிருக்கலாம்.. ஏன் இப்டி பண்ணேன்.. பாவம் மிதுன்.. என எண்ணினாள் சித்ரா.
அதன்பின் மிதுன் சித்ராவை சமாதானம் செய்தது.. அவளும் அவனும் மட்டும் அறிந்த நிகழ்வு.
“சித்துமா.. கோபமா..” என கேட்டபடி அவளருகில் வந்தான் மிதுன்.
சிரிப்பை காட்டக் கூடாதென எண்ணி.. முறைத்தபடி வேறுபுறம் திரும்பிக் கொண்டாள் சித்ரா.
“சித்துமா.. டீ போடத் தெரியாதுனு ஏன் சொல்லலை..” என லேசான குரலில் கேட்டான் மிதுன்.
ஏன்.. ஏன் சொல்லவில்லை.. அவளுக்கே காரணம் தெரியவில்லை.. ஏதோ கணவன் கேட்டதும் ஓடிச் சென்று டீ போடும் மனைவி போல.. ஏன் அப்படி செய்தாள்.. புரியாமல் திருதிருவென விழித்தாள் மிதுன் முகம் பார்த்து.
அவள் மனம் கவர்ந்த அந்தக் கள்வனோ.. அவள் மனதில் நினைத்ததை அறிந்தவன் போல புன்னகைத்தான்.
ஒருவேளை அவனுக்கு தன் மனம் புரிந்து விட்டதோ.. என எண்ணிய சித்ரா.. “எதுக்கு சிரிக்கிற..”என கேட்டாள் அவனை பார்த்து.
“ஒன்னுமில்லையே..”என தோள்களை குலுக்கி சிரித்த மிதுனின் கண்கள் சந்தோஷத்தில் ஒளிர்ந்தது.
❤❤
சித்ரா சமையலை முடித்துவிட்டு.. தன் அன்னைக்கும் செழியனுக்கும் பரிமாறினாள்.
எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த செழியனை பார்த்து.. “முன்னாடி டீ கூட போட தெரியாது.. இப்ப கொஞ்சம் முன்னேறிட்டேன்ல..”என கண்களை சிமிட்டியபடி கேட்டாள் சித்ரா.
“ம்.. ரொம்பவே..”என்றான் செழியன் லேசான புன்னகையோடு.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்ற செழியனை அழைத்தார் வைதேகி.
“என்னமா..”என கேட்டான் செழியன்.
“என்ன முடிவு பண்ணிருக்க..”என கேட்டார் வைதேகி.
“எதை பத்தி..”என கேட்டான் செழியன்.
“திரும்பவும் வேலை வேலைனு சொல்லிட்டு எங்கையாவது போகப் போறீயா.. இல்லை இங்கே இருக்கப் போறீயா..”என கேட்டார் வைதேகி.
செழியன் என்ன முடிவெடுக்கப் போகிறான்..??!!
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top