40 ❤
மிதுனாவின் வளைகாப்பிற்காக வினய் மிதுனா ஜெயந்தி சேகர் எல்லோரும் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
தானும் வருகிறேன் என அடம்பிடித்த சஞ்சுவிடம்.. “நீ சேட்டை பண்ணாம இருப்பீயாம்.. அத்தை வரும்போது குட்டி தம்பியை கூட்டிட்டு வருவேனாம்..”என்றாள் மிதுனா.
“குட்டி தம்பி வருவானா.. என்கூட விளையாடுவானா..”என உற்சாகமாக கேட்ட சஞ்சுவுக்கு சந்தோஷத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் மிதுனா.
அகிலாவும் ராஜீவ்வும் தங்களின் அன்பளிப்பாக மிதுனாவிடம் வளையலை கொடுத்தனர். அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்ட மிதுனா ராஜீவ்விடம்.. “சுப்ரியா பண்ணதை நாங்களே மறந்துட்டோம்.. நீங்க ஏன் ணா இன்னும் அதை மனசில வச்சிட்டு இருக்கீங்க.. சீக்கிரம் பேசுங்க ண்ணா..”என சொன்னாள்.
ராஜீவ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க.. “நான் சொல்லித்தான் கேட்கலை.. நீ சொல்லியாவது கேட்கிறாரா பார்ப்போம்..”என்றாள் அகிலா மெல்லிய புன்னகையோடு.
மிதுனாவின் வளைகாப்பு சொந்த பந்தங்களின் முன்னில் சீரும் சிறப்புமாக நடந்தது.
கைகளை ஆட்டிக் கொண்டே.. “குட்டிப் பையா.. உனக்கு சத்தம் கேட்குதா.. அம்மா கை நிறைய வளையல் போட்ருக்கேன்..”என மழலை போல பேசிக் கொண்டிருந்தவளை ரசித்தபடியே வந்த வினய்.. “மிது.. தூங்கு.. நேரம் ஆகுது பாரு..”என்றான்.
“கொஞ்ச நேரம் கழிச்சு தூங்குறேன் வினு..”என்றாள் மிதுனா அவன் நெஞ்சில் சாய்ந்தபடி.
“வினு நாளைக்கு நீங்க ஊருக்கு கிளம்புறீங்களா..”என கேட்டாள் மிதுனா.
“ம்..”என்றான் வினய்.
“வினு ஒரு வாரத்துல வந்துடுவீங்கல்ல..”என கேட்டாள் மிதுனா.
“வந்துடுறேன் மிது..”என்றான் வினய்.. இதே கேள்வியை ஒரே நாளில் பலமுறை கேட்டு விட்டாள் மிதுனா.. இருந்தும் சலிக்காமல் பதில் சொன்னான் வினய்.
“நீங்க வரலைனா.. நானும் குட்டிப் பையனும் உங்க கிட்ட பேச மாட்டோம்..”என்றாள் மிதுனா மிரட்டலாக..
வினய் சிரிப்புடன்.. “குட்டிப் பையனுக்கு என்ன பேர் வைக்கலாம்..”என கேட்டான்.
“ம்.. நான் ஒரு பேர் யோசிச்சு வச்சிருக்கேன்..”என்றாள் மிதுனா உற்சாகமாக.
“என்ன பேர்.. மிது..”என கேட்ட வினய் அவளை பார்த்தான்.
“மகிழன்.. எப்டி இருக்கு..”என மிதுனா வினய்யை பார்த்து கேட்க.. “ம்.. சூப்பர்..”என்றான் வினய்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு.. மிதுனாவை தூங்கச் சொன்னான் வினய். அவளும் சரி என்றாள்.
மிதுனாவை ராஜேந்திரனும் மஞ்சுளாவும் நன்கு பார்த்துக் கொண்டாலும்.. கண்காணா தூரத்தில் இருந்த வினய்யின் அருகாமைக்கு தான் அவள் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது.
என்ன பேசுவதென்று தெரியவில்லை என்றாலும் கூட வினய்க்கு போன் செய்து கொண்டிருந்தாள் மிதுனா.
“வினு எப்ப வருவீங்க.. எனக்கும் குட்டிப் பையனுக்கும் உங்களை பார்க்கணும் போல இருக்கு..”என்பதை மட்டும் எப்போது போன் செய்தாலும் சொல்லிக் கொண்டிருந்தாள் மிதுனா.
வினய் “கிளம்பிட்டேன் மிது..”என சொன்ன பிறகு தான் மிதுனா உற்சாகம் ஆனாள்.
“வினு நிஜமாவா.. கிளம்பிட்டீங்களா..”என சந்தோஷமாக கேட்டாள் மிதுனா.
“ம்.. கிளம்பிட்டேன் மிது.. வந்துட்டே இருக்கேன்..”என்றான் வினய்.
டாக்டர் குறித்து கொடுத்த தேதி நெருங்கிக் கொண்டிருக்க.. வினய் மிதுனாவை விட்டு நொடியும் விலகாமல் அவளுடன் இருந்தான்.
வினய் சாப்பிட உட்கார்ந்த வேளை.. மிதுனா.. “வினு.. வினு..”என வலியில் அலறினாள். வினய் பதற்றத்துடன் அவளருகில் வர.. மிதுனா அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டாள்.
மிதுனாவின் சத்தம் கேட்டு.. மஞ்சுளாவும் அங்கே வர.. “அம்மா ரொம்ப வலிக்குது மா..”என்ற மிதுனா வலியில் துடிக்க.. “ஒன்னுமில்லை டா.. பயப்படாத.. பயப்படாத..”என ஆறுதல் படுத்தினார்.
தன் மிதுனா வலியில் துடிப்பதைக் கண்ட பதற்றத்தில்.. சில நொடிகள் என்ன செய்வதென்றே புரியாமல் இருந்தான் வினய். மிதுனாவை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அப்போது தான் வினய்யின் உணர்வுக்கு வந்தது.
அப்போது அங்கே வந்த ராஜேந்திரன்.. “பதறாதீங்க மாப்பிள்ளை.. வண்டி இப்ப வந்துடும்..”என்றார். மிதுனாவை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றனர். மஞ்சுளா ராஜேந்திரனிடம்.. ஜெயந்திக்கும் சேகருக்கும் தகவல் சொல்லச் சொன்னார். வினய் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லாமல் இருந்தான்.
மிதுனா நலமாக இருக்கிறாள் என்ற வார்த்தைகள் காதில் விழும் வரை வினய் பதற்றத்துடன் தான் இருந்தான்.
மிதுனாவின் விருப்பம் நிறைவேறியது.. அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க.. குட்டி வினய்யே பிறந்திருந்தான்.
முகமெல்லாம் மலர..குழந்தையை மெல்ல கைகளில் ஏந்தினான் வினய். தங்கள் அன்பின் அடையாளம் இவன்.. தங்கள் உயிர்.. என்ற பெருமையும் சந்தோஷமுமாக குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
ராஜேந்திரனும் மஞ்சுளாவும் தங்கள் பேரனை கொஞ்சிக் கொண்டிருக்க.. ஜெயந்தியும் சேகரும் அங்கே வந்து சேர்ந்தனர். குழந்தை அவர்களிடம் இருக்க.. மிதுனாவின் கைகளை பற்றியபடி அவளருகில் கண்மூடி அமர்ந்திருந்தான் வினய்.
சிறிது நேரத்தில் கண்விழித்த மிதுனா.. “வினு..”என மெல்லிய குரலில் அழைத்தாள். கலங்கிய கண்களுடன் அவள் முகம் பார்த்தான் வினய்.
“வினு என்னாச்சு..”என லேசான பதற்றத்தோடு மிதுனா கேட்க.. “நீ வலியில துடிச்சத பார்த்ததுல இருந்து.. இப்ப வரைக்கும் நடக்கிற எதுவும் புரியல மிது எனக்கு.. என் உயிரே என்கிட்ட இல்லை..”என்றான் வினய்.
மெல்லிய புன்னகையோடு.. “குட்டிப் பையனை எங்க வினு..”என கேட்டாள் மிதுனா.
வினய் பதில் சொல்வதற்குள் மஞ்சுளாவே குழந்தையுடன் அங்கே வந்தார். “மிதுனா கண் முழிச்சிட்டீயா.. குழந்தையை பாரு..”என்ற மஞ்சுளா மிதுனாவிடம் குழந்தையை கொடுத்தார்.
குட்டிப் பையனை கைகளில் வாங்கிக் கொண்ட மிதுனா.. “வினு அப்டியே உங்களை மாதிரியே இருக்கான்ல..”என கண்களில் சந்தோஷம் மின்ன சொல்ல.. அவளை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் வினய்.
குழந்தை பிறந்து ஒரு மாதம் கடந்திருந்தது. வினய் வார விடுமுறைகளில்.. மிதுனாவையும் மகிழனையும் பிரிந்திருக்க முடியாமல் ஊருக்கு வந்து விடுவான்.
மிதுனாவும் என்னதான் குழந்தையுடன் இருப்பதற்கே நேரம் போதவில்லை என்றாலும் வினய்யின் அருகாமைக்கும் ஏங்கிக் கொண்டிருந்தாள்.
தங்கள் மகளின் மனம் புரிந்த ராஜேந்திரனும் மஞ்சுளாவும் வினய்யிடம் பேசி.. மிதுனாவுடன் தாங்களும் சென்னைக்கு கிளம்பினர்.
மிதுனா ஊரிலிருந்து வந்ததை அறிந்ததும் சஞ்சு.. “குட்டி தம்பி எங்க..”என கேட்க எண்ணித்தான் ஓடி வந்தான். அங்கே தொட்டிலில் படுத்திருந்த மகிழனை விழிகள் விரித்து ஆச்சரியமாக பார்த்தான் சஞ்சு.
குழந்தையை பார்க்க வந்த அகிலா.. மகிழனை தன் மடியில் வைத்திருக்க.. சஞ்சு.. “குட்டி தம்பி என்னைப் பாரு.. என்கூட விளையாட வர்றீயா.. நான் உனக்கு கார் தர்றேன்..”என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருக்க.. எல்லோரும் சிரிப்புடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ராஜீவ் அழைக்கும் சத்தம் கேட்டு அகிலா சென்றுவிட.. சஞ்சுவிடம் மிதுனா.. “சஞ்சு.. தம்பியை உன் மடியில வைப்போமோ..”என கேட்க.. உற்சாகத்துடன் தலையாட்டினான் சஞ்சு.
“குட்டி தம்பி என்கூட விளையாடுவீயா நீ.. நாம இரண்டு பேரும் ஒன்னா விளையாடலாம்..”என விழிகள் விரித்து.. தன் மடியில் இருந்த மகிழனிடம் பேசிக் கொண்டிருந்தான் சஞ்சு.
ராஜீவ் அகிலாவிடம்.. “எங்க போயிருந்த.. சஞ்சு எங்க..”என கேட்டான்.
“மிதுனா ஊரில இருந்து வந்துட்டா.. அதான் குழந்தையை பார்த்துட்டு வரப் போனேன்.. சஞ்சு அங்க தான் இருக்கான்.. சும்மாவே அங்க இருந்து வரமாட்டான்.. இனி எப்பவும் அங்க தான் இருக்கப் போறான்..”என அகிலா பேசிக் கொண்டேயிருக்க.. ராஜீவ் யோசனையுடன் அமர்ந்திருந்தான்.
அவனை கவனித்த அகிலா “என்ன யோசிக்கிறீங்க..”என கேட்டாள்.
“சுப்ரியா போன் பண்ணிருந்தா.. இங்க வரட்டுமானு கேட்டா.. நான் வரச் சொல்லிட்டேன்.. அதான்..”என ராஜீவ் சொன்னான்.
“அதுக்கென்ன.. அவளே வினய்யையும் மிதுனாவையும் இன்வைட் பண்ணட்டும்..”என்றாள் அகிலா.
“ம்.. சரி..”என்றான் ராஜீவ் தெளிவுடன்.
வினய்யையும் மிதுனாவையும் தன் திருமணத்திற்கு அழைக்க எண்ணி வந்த சுப்ரியா வாசலிலே தயங்கி நிற்க.. அவளை கவனித்த மிதுனா புன்னகையோடு.. “உள்ள வாங்க.. ஏன் அங்கையே நிக்கிறீங்க..”என்றாள்.
இருந்தும் தயக்கத்துடன் உள்ளே வந்தாள் சுப்ரியா.
மகிழனை எடுத்து வந்து சுப்ரியாவிடம் கொடுத்தாள் மிதுனா. அவனை பார்த்த சுப்ரியா.. “அப்டியே வினய் மாதிரியே இருக்கான்..”என லேசான புன்னகையோடு சொன்னாள்.
வினய்யும் அந்த நேரத்தில் அங்கே வர.. தயக்கத்துடன் அவனை பார்த்து புன்னகைத்தாள் சுப்ரியா.
“அடுத்த வாரம் எனக்கும் விமலுக்கும் கல்யாணம் சிம்பிளா ரிஜிஸ்டர் ஆபிஸ்ல.. விமலும் நானும் ஒரே ஆபிஸ்ல வேலை பார்க்கிறோம்.. அவருக்கு அம்மா அப்பா சொந்தம்னு யாரும் இல்லை.. நானும் நிறைய பேரை இன்வைட் பண்ணலை.. நீங்க இரண்டு பேரும் கண்டிப்பா வரணும்..”என சுப்ரியா சொல்ல.. வினய்யும் மிதுனாவும்.. “கண்டிப்பா வர்றோம்..”என்றனர்.
அதைக் கேட்ட.. சுப்ரியா மகிழ்ச்சியுடன்.. “ரொம்ப தேங்க்ஸ்..”என்றாள்.
அன்று இரவு..
“மகி தூங்கிட்டானா..”என வினய் கேட்க.. “ம்..”என்றாள் மிதுனா அவன் மடியில் தலைவைத்தபடி.
“கட்டில்ல படு மிது..”என வினய் அவள் தலையை மென்மையாக வருடியபடி சொல்ல.. “கொஞ்ச நேரம் வினு..”என சொன்னாள் மிதுனா.
சிறிது நேரத்தில் மிதுனா உறங்கிவிட.. அவளை கட்டிலில் படுக்க வைத்த வினய்.. அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
வினய் மிதுனாவின் உலகில் தன் வருகையால் மேலும் இன்பத்தை சேர்த்த மகிழன்.. உறக்கத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.😘
முற்றும்😘
❤❤ Thanks everyone for your support.. every comment and vote is very special for me.. Thanks for reading..
Jamuna❤❤
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top