WatTruyen.Top

காதலின் சங்கீதம்..

04

jamunaguru

காலையில் சீக்கிரமே கங்காவை பாலாவின் கடை திறப்பு விழாவிற்கு அழைக்க வந்துவிட்டார் தமயந்தி..

கங்காவும் முகம் மலர.. “புடவை கட்டிட்டு வந்துடுறேன் அத்தை..” என்றாள்.

“சரி சரி.. சீக்கிரம் வா..” என உற்சாகமாக சொன்னவர் சதாசிவத்தையும் அழைத்து விட்டு கிளம்பினார்.

அப்போது தான் அறையில் இருந்து உறக்க கலக்கத்துடன் வந்த கீர்த்தனாவையும் பெயருக்கு அழைத்தார் தமயந்தி.

“எனக்கு காலேஜ்க்கு லேட்டாகிடும்.. நான் வரலை..” என்றாள் கீர்த்தனா.

“சீக்கிரம் கிளம்பிடலாம்.. வந்துட்டு போ கீர்த்தி..” என கங்காவும் அழைக்க.. “நான் வரலை..” என்றாள் கீர்த்தனா.

“ரொம்ப நல்லது..” என மனதுக்குள் நினைத்த தமயந்தி.. “நாங்க போய்ட்டு இருக்கோம்.. நீ அப்பா கூட வந்துடு கங்கா..” என சொல்லிவிட்டு சென்றார்.

பாலா முன்பே கடைக்கு சென்றிருக்க.. தமயந்தியும் ரத்தினவேலும் கிளம்பினர்.

சதாசிவமும் பாலா குடும்பம் மீது கொண்டிருந்த நன்மதிப்பால்.. கங்காவை அழைத்துக் கொண்டு அங்கே கிளம்பினார்.

தன் வாழ்வில் தான் ஆசைப்பட்ட முக்கியமான நிகழ்வு தன் நண்பன் மதனுடன் பேசியபடியே  தாய் தந்தையின் வரவுக்காக காத்திருந்தான் பாலா.

தமயந்தியும் ரத்தினவேலும் தங்கள் மகன் தொழிலில் இன்னும் வளர வேண்டும்.. அவன் ஆசையெல்லாம் நிறைவேற வேண்டும் என எண்ணியபடியே அங்கே வந்து சேர்ந்தனர்.

மதனின் பெற்றோரும் அதே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் அறிமுகம் தேவையின்றி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர் பாலாவின் பெற்றோர்.

“அம்மா பூஜையை ஆரம்பிக்கலாம்.. வந்து விளக்கேத்துங்க..” என அழைத்தான் பாலா.

“கங்கா வந்துடட்டும் டா..” என்றார் ரத்தினவேல்.

கங்காவும் தன் தந்தையுடன் அங்கே வந்து சேர்ந்தாள்.

பாலாவின் தொழில் முன்னேற்றத்திற்காக கடவுளை வேண்டிக்கொண்டு.. பூஜை செய்தார் தமயந்தி.

கடையில் முதலில் யார் பொருளை வாங்கி தொடங்கி வைப்பது என்ற கேள்வி எழுந்ததுமே.. “கங்கா நீ உன் கையால வாங்கி ஆரம்பிச்சு வை..” என்றார் தமயந்தி.

கங்கா மட்டுமே தயங்கினாள்.. வேறு யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை அதில்.

தயக்கத்துடன் எல்லோரையும் பார்த்தாள் கங்கா.. எல்லோரும் சம்மதம் சொல்ல அவளும் சரியென்றாள்.

பாலாவின் தொழில்.. கங்கா கையால் தொடங்கிய ராசியோ என்னவோ நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது.

கீர்த்தனா வீட்டுக்கு வருவது தாமதமாக தொடங்கியிருந்தது மட்டுமே கங்கா அறிந்தது. சதாசிவத்துக்கு தெரிந்தால் வீட்டில் பிரச்சனை வருமே என எண்ணி.. கீர்த்தனாவிடம் அமைதியாக பேசி பார்த்தாள் கங்கா.

அவள் தான் கங்காவின் பாசத்தையே மதிக்காதவள் ஆயிற்றே.. பேச்சை காது கொடுத்து கேட்கவா போகிறாள்.

கல்லூரிக்கு செல்லாமல் அரவிந்துடன் சேர்ந்து தியேட்டர் பார்க் ஹோட்டல் என ஊர்சுற்றும் அளவு அவர்களின் நெருக்கம் அதிகமானது.

வீட்டிலும் எப்போதும் அவனுடன் போனில் பேசிக் கொண்டு திரிந்தாள் கீர்த்தனா.

கங்காவின் பேச்சை காது கொடுத்து கேட்கவில்லை என்றாலும்.. தந்தையிடம் இருந்து செலவுக்கு பணம் வாங்க மட்டும் கங்காவை பயன்படுத்திக் கொண்டாள் கீர்த்தனா.

கங்கா காரணம் கேட்டாலும்.. தனக்கு சம்பந்தமே இல்லாத படிப்பை காரணம் காட்டினாள் கீர்த்தனா. படிப்பு என்றபின் கங்காவும் அமைதியாக இருந்துவிடுவாள்.

அந்த ஊரில் உள்ள முக்கியமான நபர் ஒருவரின் வீட்டுக்கான வயரிங் பணிகள் பாலாவிடம் வந்தது. அவன் வேலை நேர்த்தி பிடித்து போன அவர்.. புதிதாக அவர் கட்டிக் கொண்டிருந்த கல்லூரியின் பணிகளையும் அவனிடமே ஒப்படைத்தார்.

தொழிலில் பாலாவின் முன்னேற்றத்தை வியந்து பெருமையாக பேசிக் கொண்டிருப்பார் தமயந்தி கங்காவிடம்.

அரவிந்த்துடன் சேர்ந்து ஊர்சுற்றி விட்டு தாமதமாக வந்தாள் கீர்த்தனா.

அறைக்கு வந்ததும் கீர்த்தனா அரவிந்துக்கு போன் செய்து கொண்டிருக்க.. அங்கே வந்தாள் கங்கா.

“கீர்த்தி.. நீ யூஸ் பண்ணாத நோட்டு ஒன்னு எடுத்துக்கவா..” என கேட்டபடி பேக்கில் இருந்து டிபன்பாக்ஸை எடுக்க தேடினாள்.

“யூஸ் பண்ணாததெல்லாம் எதுவும் இல்லை..” என்றாள் கீர்த்தனா எரிச்சலுடன்.

“வீட்டு செலவு கணக்கு எழுதிவைக்க வேணும் கீர்த்தி.. சின்ன நோட்டா இருந்தா கூட போதும்..” என்றாள் கங்கா.

“பெரிய செலவு கணக்கு.. என்கிட்ட நோட்டுலாம் ஒன்னுமில்லை.. கோலம் போடுறேன்.. சமையல் குறிப்பு எழுதுறேன்னு எல்லாத்தையும் வீணாக்கிட்டு என்கிட்டே வந்து கேளு..” என்றாள் கீர்த்தனா சலிப்பாக.

“டிபன்பாக்ஸ் எங்க கீர்த்தி..” என கேட்டாள் கங்கா.

அப்போதுதான் அரவிந்திடம் கொடுத்தது நினைவுக்கு வர.. “அ.. அது.. காலேஜ்ல போட்டுட்டு வந்துட்டேன்..”என சமாளித்தாள் கீர்த்தனா.

“நீ சாப்பிட்டல்ல.. நீ கேட்டன்னு தான் பிரியாணி பண்ணேன்..” என்றாள் கங்கா.. தங்கை சாப்பிட்டாளோ.. இல்லை தோழிகளிடம் கொடுத்துவிட்டாளோ.. என்ற ஏக்கத்துடன்.

“அரவிந்த் கிட்ட தான் கேட்கணும்.. எப்டி இருந்துச்சுன்னு..” என மனதில் நினைத்தவள்.. “நான் தான் சாப்பிட்டேன்.. நல்லா இருந்துச்சு.. நீ சமைச்சாலே நல்லா தான் இருக்கும்..” என்றாள்.

ஏதோ மனதில் உறுத்த அதையே எண்ணியபடி அங்கிருந்து நகர்ந்தாள் கங்கா.

அப்போது வீட்டுக்குள் வந்த தமயந்தி.. கங்காவின் முகத்தை கண்டதும் ஏதும் பிரச்சனையோ என எண்ணி விசாரிக்க.. “ஒன்னுமில்லை அத்தை.. வீட்டு கணக்கு எழுதி வைக்க ஒரு நோட்டு இருக்கானு கேட்டேன்.. கீர்த்தி இல்லைனு சொல்லிட்டா..” என்றாள் கங்கா.

“அப்டியே எல்லா நோட்டுலயும் எழுதி கிழிச்சிட்டாளாமோ..” என நக்கலாக சொன்னவர்.. “உன் முகத்தை பார்த்ததும் நான் கூட பிரியாணி தான் நல்லா இல்லைனு சொல்லிட்டாளோனு நினைச்சேன்..” என்றார்.

சிரித்துக் கொண்ட கங்கா.. “அவ சாப்பிட்டாளாம் அத்தை.. நல்லா இருக்குனு சொன்னா.. டிபன் பாக்ஸை தான் காலேஜ்ல மறந்து வச்சிட்டு வந்துட்டா..” என்றாள்.

“அதிசயம் தான் போ..” என கீர்த்தனாவின் செயலை வியந்த தமயந்தி.. “நீ இனிமே இப்டி என்னதாவது செஞ்சு கொடுத்து விடுறதா இருந்தா முன்னாடியே சொல்லிடு.. நான் சமைக்காமலே இருந்திடுறேன்.. நீ கொடுத்ததை சாப்பிட்டு.. அங்க நான் சமைச்சதை சாப்பிட ஆள் இல்லை..” என சலித்துக் கொண்டார்.

நீங்க சமைச்சதை நீங்களுமா சாப்பிடலை.. என கண்களில் கேலியுடன் கங்கா தமயந்தியை பார்க்க.. அவள் எண்ணத்தை புரிந்து கொண்டவர் போல.. “நானும் சாப்பிடலை.. நைட்டுக்கு அதையே சாப்பிட்டுக்கலாம்னு சொன்னதுக்கு தான்.. மதியம் கங்கா காப்பாத்திட்டா.. இப்ப என்ன பண்ண முடியும்னு உன் மாமா கிண்டல் பண்ணிட்டு இருக்காரு..” என்றார்.

சிரித்தாலும் “உங்க சமையல் நல்லா தான அத்தை இருக்கு.. அப்புறம் எதுக்கு மாமா உங்களை கிண்டல் பண்றாங்க.. இந்த பாலாவும் அப்டியே மாமா மாதிரி..” என்றாள் கங்கா.

“அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு.. ஒருநாள் சமையல் பண்ணாம வெளியே சாப்பிட சொல்லிட்டா உங்க மாமா முகத்தை பார்க்கணுமே.. பாலா மட்டும் என்ன.. லீவுக்கு வரும் போது தான் சாப்பிட திருப்தி இருக்கும்பான்..” என கணவரையும் மகனையும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் தமயந்தி.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top