WatTruyen.Top

காற்றினில் உன் வாசம்..

🌸 14 🌸

jamunaguru

சிவராமன் வேணி தம்பதியரின் ஒரே புதல்வி அர்ச்சனா. சிவராமன் தன் நண்பர் கண்ணனுடன் சேர்ந்து தொழில் தொடங்கினார். இருவரும் வெற்றிகரமாகவே தொழிலை நடத்தினர்.

ஒரே காம்பவுண்டில் நண்பர்கள் இருவரும் வீடு கட்டினர். அருகருகே ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வந்தனர். கண்ணன் மைதிலி தம்பதியரின் புதல்வன் திலீப்.

சிவராமன் மறைந்தது எல்லோருக்கும் அதிர்ச்சி தான் என்றாலும்.. தொழிலில் இருந்த அவரின் முதலீடுகள் மூலம் வேணிக்கும் அர்ச்சனாவின் படிப்புக்கும் தேவையான பணம் கிடைக்க ஏற்பாடு செய்தார் கண்ணன்.

தங்களுக்கு பெண் குழந்தை இல்லாத குறையை அர்ச்சனாவை வளர்த்து தீர்த்துக் கொண்டார் மைதிலி.

அர்ச்சனாவும் அந்த வீட்டில் ஒரு பெண்ணாக கலகலப்பாக வளர்ந்து வந்தாள். அவளுக்கு நேர்மாறாக இருப்பான் திலீப். கொஞ்சம் தனிமை விரும்பி. அவன் மீது அர்ச்சனாவுக்கு பாசம் மட்டுமே இருந்தது.

ஆனால் திலீப் தன் மனதை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும்.. அவன் மனமெல்லாம் அர்ச்சனா மட்டுமே நிறைந்திருந்தாள்.

ஒரே பள்ளியில் தான் அர்ச்சனாவும் திலீப்பும் படித்தனர். பள்ளியில் படிக்கும் போது அர்ச்சனாவுக்கு ஒரு பையன் காதல் கடிதம் எழுதியிருந்தான்.

அர்ச்சனாவே அதை எளிதாக எடுத்துக் கொண்டு.. அவன் எழுதிய கடிதத்தில் இருந்த எழுத்துப் பிழைகளை குறித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் திலீப்போ.. அவன் எப்படி தன்னுடைய அச்சுவை காதலிப்பான் என கோபத்தில் அவனை இரத்தம் வருமளவு அடித்தான். அது திலீப்பை பள்ளியில் இருந்து நீக்குமளவு பிரச்சனை ஆகியது.

கண்ணன்.. மைதிலி.. வேணி மூவரும்.. “அச்சுவே அதை பெருசா எடுத்துக்கலை.. நீ ஏன்டா இப்டி பண்ண..” என திலீப்பை கண்டித்தனர்.

அர்ச்சனாவும் திலீப் ஏதோ பாசத்தில் அப்படி நடந்து கொண்டதாகவே எண்ணினாள் மற்றவர்களை போல.

ஆனால் அர்ச்சனா தனக்கு சொந்தமானவள்.. அவள் மீது வேறு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.. என்ற எண்ணம்.. தன்னையும் ஏன் அவளையே காயப்படுத்தும் அளவு தீவிரமாக திலீப்பின் மனதில் வளர்ந்து கொண்டிருந்ததை யாரும் அறியவில்லை.

அர்ச்சனாவின் கல்லூரி படிப்பு முடிவடைந்திருந்தது. அவள் தோழிகள் அவ்வப்போது வீட்டுக்கு வருவது இயல்பான ஒன்று தான். அன்று அர்ச்சனாவின் தோழிகள் வந்தபோது.. வீட்டில் புதிதாக மாட்டியிருந்த ஊஞ்சலில் ஆடியபடி அவர்களை வரவேற்றாள் அர்ச்சனா.

“ஹே.. சூப்பரா இருக்கு.. போன தடவை கூட நாங்க வந்தப்ப.. இந்த இடத்துல ஊஞ்சல் மாட்டினா நல்லா இருக்கும்னு சொன்னோம்ல..” என்றாள் அர்ச்சனாவின் தோழி.

“ஆமா.. எனக்கும் ஊஞ்சல் வேணும்னு ஆசையா இருந்துச்சு.. அதான் நான் மாமா கிட்ட சொன்னேன்.. மாமா சரினு தான் சொன்னாங்க.. ஆனா அம்மா தான் நீ என்ன இன்னும் சின்ன பாப்பாவா ஊஞ்சலும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க..” என சொன்னாள் அர்ச்சனா.

“எல்லா வீட்டிலயும் இதே தான்.. எதாவது கேட்டா எங்க அம்மாவும் இதே டயலாக்கை தான் சொல்றாங்க..” என அர்ச்சனாவின் தோழி சொன்னாள்.

“ம்.. எப்பவும் எனக்கு சப்போர்ட் பண்ற மைதிலி அத்தையும் இந்த டைம் அம்மா சொல்றது சரிதான்னு சொல்லிட்டாங்க.. ஆனா திலீப் அத்தான் தான்.. அச்சு ஆசைப்பட்டல்லா.. அப்ப ஊஞ்சல் மாட்டணும்னு எனக்கு சப்போர்ட் பண்ணி உடனே மாட்டிட்டாங்க..” என உற்சாகமாக சொன்னாள் அர்ச்சனா.

அர்ச்சனா.. தன்னுடைய அச்சுவின் உதடுகள் தன் பெயரை உச்சரிப்பதை ரசித்துக் கொண்டிருந்தான் திலீப். அவன் பார்த்துக் கொண்டிருப்பதை அறியாமல் அர்ச்சனாவும் தன் தோழிகளிடம் உரையாடிக் கொண்டிருந்தாள்.

அதன்பின் தங்கள் நட்பு வட்டத்தில் யார் யாருக்கு எப்போது திருமணம் என பேச்சு எழுந்தது.

“எனக்கெல்லாம் ஏற்கனவே தேட ஆரம்பிச்சிட்டாங்க ப்பா.. ஆனா இன்னும் மாப்பிள்ளை தான் கிடைச்ச பாடில்லை..” என சலித்துக் கொண்டாள் ஒருத்தி.

“கல்யாணம்னா சும்மாவா.. போன வாரம் கூட புரோக்கர் ஏதோ மாப்பிள்ளை போட்டோ கொண்டு வந்தாரு.. ஆனா ஜாதகம் பொருந்தலைனு எங்க வீட்டில வேண்டாம்னு சொல்லிட்டாங்க..” என்றாள் ஒருத்தி.

தன் திருமணம் பற்றியோ.. வருங்கால கணவன் பற்றியோ யோசித்திராத அபி.. அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருந்தாள்.

ஆனால் அவள் தோழிகளோ.. “உனக்கென்ன கவலை.. அதான் வீட்டிலயே மாப்பிள்ளை இருக்காரே..” என்றனர் அர்ச்சனாவை பார்த்து.

புரியாமல் விழித்த அர்ச்சனா.. “என்ன சொல்றீங்க..” என கேட்டாள்.

“என்ன சொல்றோமா.. அதான் உங்க திலீப் அத்தான் இருக்காரே.. எப்டியும் அவருக்கே உன்னை கட்டி வச்சிடுவாங்க.. அம்மா.. பிறந்து வளர்ந்த வீடுனு எதையும் பிரிய வேண்டாம்..” என அர்ச்சனாவின் தோழி சொன்னாள்.

“திலீப் அத்தானா.. நான் இதுவரைக்கும் அப்டிலாம் நினைச்சதே இல்லையே..” என அர்ச்சனா சொன்னாள்.

அப்போது திலீப்பின் அறையில் இருந்து கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது.. என்னவாயிற்றோ என பதறி உள்ளே ஓடினாள் அர்ச்சனா.

திலீப்பின் கையில் கண்ணாடி கீறி இரத்தம் வழிந்தது. “அத்தான்.. என்னாச்சு.. ஏன் இப்டி பண்ண..” என பதறினாள் அர்ச்சனா.

“நீ என்னை தொடாத.. போ..” என அவளை தள்ளினான் திலீப்.

அவன் அதிர்ந்து பேசி கூட கேட்டிராத அர்ச்சனா பயந்து போனாள். அதற்குள் பெரியவர்களும் வந்துவிட திலீப்பை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கையில் கட்டுடன் திரும்பி வந்த திலீப் அவன் அறைக்குள்ளே அடைந்து கொண்டான்.

“எவ்வளவோ கேட்டு பார்த்துட்டேன்.. ஏன் இப்டி பண்ணானு சொல்லவே மாட்டிக்குறான்..” என கண்கலங்கினார் வேணி.

“சாப்பிடவும் மாட்டிக்குறான் அண்ணி.. சாப்பிட்டா தான மாத்திரை போட முடியும்..” என மைதிலியும் வருந்தினார்.

“நான் அத்தானுக்கு சாப்பாடு கொடுக்கிறேன் அத்தை..” என்ற அர்ச்சனா சாப்பாடை எடுத்துக் கொண்டு திலீப்பின் அறைக்குள் சென்றாள்.

அப்பா அம்மா அத்தை என எல்லோரும் வற்புறுத்தியும் சாப்பிட மறுத்தவன்.. அர்ச்சனா எதுவும் பேசாமல் சாப்பாடை ஊட்டிவிட அமைதியாக சாப்பிட்டான் திலீப்.

சாப்பாடை ஊட்டி முடித்தவள் திலீப்பின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

சில நொடிகள் அவன் காயத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்ணீர் அவன் கையில் சிந்தியது.

“அழாத அச்சு..” என்ற திலீப்பும் கண்ணீர் சிந்தினான்.

“ஏன் அத்தான் இப்டி பண்ண..” என கண்ணீருடன் கேட்டாள் அர்ச்சனா.

“எல்லாம் உன்னால தான்..” என திலீப் சொல்ல புரியாமல் அவனை பார்த்தாள் அர்ச்சனா.

“நா.. நான் உன்னை எவ்ளோ விரும்புறேன் தெரியுமா அச்சு.. நீ.. நீ.. எனக்கு சொந்தமானவ அச்சு.. ஆனா உன் ப்ரெண்ட் நம்ம கல்யாணம் நடக்கும்னு சொல்லும் போது.. நான் அப்டி நினைச்சு கூட பார்த்ததில்லைனு சொல்ற.. எப்டி அச்சு உன்னால முடிஞ்சுது..” என திலீப் பேசியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள் அர்ச்சனா.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top