WatTruyen.Top

காற்றினில் உன் வாசம்..

🌸 12 🌸

jamunaguru

இளங்கோ மைதிலிக்கென வாங்கிய புடவையை கொடுக்க.. அபியே அந்த புடவையை கட்டிக் கொள்ளட்டும் என ஆசையுடன் மைதிலி சொன்னார்.

உள்ளுக்குள் வேண்டும் என்ற ஏக்கம் தோன்றினாலும் மறுத்தவள்.. வாங்கிட்டு வந்தவன் எதுவும் சொல்லலையே என இளங்கோவை பார்த்தாள் அபி.

இளங்கோ எதுவும் பேசாமல் புன்னகையோடு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அபியின் பார்வையை கவனித்த மைதிலி.. “அவன் ஒன்னும் சொல்ல மாட்டான்.. நீயே கட்டிக்கோ.. உனக்கு இந்த புடவை நல்லா இருக்கும்..” என அபியிடம் சொன்னவர்.. “அவளுக்கு இருக்கட்டும் டா இது..” என்றார் இளங்கோவிடம்.

என்ன சொல்வானோ.. என தயக்கமாக இளங்கோவை பார்த்தாள் அபி.

“அது இருக்கட்டும்.. அவளுக்கு வாங்கிட்டு வந்ததை யார் கட்டுறது..” என கேட்டான் இளங்கோ.

“டேய் அவளுக்கும் வாங்கிட்டு வந்திருக்கீயா..” என முகம் மலர கேட்ட மைதிலி.. “அதை முதல்லே கொடுக்க வேண்டியது தானே..” என செல்லமாக இரண்டு அடி வைத்தார் இளங்கோவுக்கு.

சிரிப்புடன் அபிக்கு வாங்கிய புடவையை அவளிடம் நீட்டினான் இளங்கோ.

தன் மனதில் நிறைந்திருப்பவன்.. தனக்கென முதன்முதலாக வாங்கியது என ஆவலாக அதை வாங்கினாள்.

அந்த புடவையை மெல்ல பிரித்த அவள் கண்களில் காதல் நிறைந்திருந்தது. “ஹே சூப்பரா இருக்குடா இது..” என மைதிலி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அபியும் அதை ஆசையாக வருடினாள்.

“இன்னும் எத்தனை கடை தான்டி ஏறி இறங்குவ.. காலெல்லாம் வலிக்குது..”

“இத்தனை கடை ஏறி இறங்கியும் நான் மனசில நினைச்ச சேரி எனக்கு கிடைக்கலையே..”

“மயிலறகு போட்ட அந்த க்ரீன் சேரி நல்லா தான இருந்துச்சு..”

“நல்லா தான் இருந்துச்சு.. ஆனா எனக்கு வேண்டியது வெண்பட்டில மயிலிறகு இருக்கணும்..”

“ஆர்டர் கொடுத்து நெய்ய சொல்லணும் இனிமே..”

“அப்டித்தான் கிடைக்கும்னு நினைக்கிறேன்..” என ஏக்கமாக ஒலித்தது அர்ச்சனாவின் குரல்.

இந்த உரையாடல் யாருக்கும் தனக்கும் இடையே நடந்தது.. எவ்வளவு யோசித்தும் அபிக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை.

அதையே யோசித்தபடி அமர்ந்திருந்த அபி.. மைதிலி அங்கிருந்து எழுந்து சென்றதை கூட கவனிக்கவில்லை.

அபியையே பார்த்துக் கொண்டிருந்த இளங்கோ.. “என்ன அபி.. பிடிச்சிருக்கு தான..” என கேட்டான்.

“ஆங்..” என திகைத்து விழித்தாள் அபி.

தன் நினைவுகளில் மூழ்கியிருந்தவளுக்கு இளங்கோ என்ன கேட்டான் என்பதே புரியவில்லை.

“என்ன.. சேரி பிடிச்சிருக்கானு கேட்டேன்..” என்றான் இளங்கோ புன்னகையோடு.

“ஆங்.. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. இ.. இந்த மாதிரி ஒரு சேரி வேணும்னு யார்கிட்டயோ சொல்லிட்டு இருந்தேன்.. யார்கிட்ட.. என்ன எதுவுமே ஞாபகம் வரலை..” என்றாள் அபி.

“நீ ஆசைப்பட்டது என் கையால கிடைக்கணும்னு இருந்திருக்கு..” என இயல்பாக இளங்கோ சொல்ல.. அபியின் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது.

மெல்ல புடவையை வருடிக் கொண்டிருந்த அபி மனதில்.. “நா.. நான் ஆசைப்பட்டது புடவை மட்டுமில்லை.. நீயும் தான்..” என நினைத்துக் கொண்டு வெட்கத்தில் சிவந்தாள்.

“எனக்கு கூட ரொம்ப யோசனையா இருந்துச்சு அபி..” என இளங்கோ சொல்ல.. அவனை பார்த்தாள் அபி.

“பழகின இடம்.. பார்த்த மனிசங்கனு.. இருந்தா எல்லாம் அப்டியே கொஞ்ச கொஞ்சமா நினைவு வரும்னு டாக்டர் சொன்னாங்க..

நான் பாட்டுக்கு சம்பந்தமே இல்லாத இந்த இடத்துக்கு உன்னை கூட்டிட்டு வந்துட்டேனேனு இருந்துச்சு.ஆனாலும் உனக்கு கொஞ்ச கொஞ்சமா நினைவு வருதுல்ல.. சந்தோஷமா இருக்கு..

உன்னை பத்திரமா உன்னோட சொந்தக்காரங்க கிட்ட ஒப்படைச்சிட்டா அப்புறம் எனக்கு எந்த கவலையும் இல்லை..” என்ற இளங்கோ புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தான்.

அபியின் முகம் தான் வாடிவிட்டது. நினைவு வந்தால் உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவானாம்.. அவன் சொல்வது சரிதானே.. அது புரிந்தாலும் மனமெல்லாம் நிறைந்து இருக்கும் அவனை பிரிவதா என உள்ளுக்குள் வருந்தினாள் அபி.

ஆனால் தன் மனதில் உள்ள நேசத்தை எப்படி இளங்கோவிடம் வெளிப்டுத்துவது என்றும் அவளுக்கு புரியவில்லை. இப்போதுதான் சொந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவந்திருக்கிறான்.

இப்போது தன் மனதில் உள்ள நேசத்தை வெளிப்படுத்தினால் ஏற்றுக் கொள்வானா.. அவன் மனசில என்ன இருக்குனே தெரியாம எப்டி சொல்றது.. என தனக்குள்ளே தவித்துக் கொண்டிருந்தாள் அபி.

அந்த தவிப்பு உள்ளுக்குள் இருந்த போதிலும்.. மைதிலியை படுத்தி எடுத்து.. இளங்கோ வாங்கி வந்த புடவைக்கு ப்ளவுஸ் தைக்க கொடுத்து.. டெய்லரிடமும் பத்து முறைக்கும் மேலாக சீக்கிரம் வேண்டும் என நச்சரித்தாள் அபி.

இளங்கோ கிளம்பும் முன்னர் அவன் வாங்கிக் கொடுத்த புடவையில் அவனுக்கு தரிசனம் அளிக்கவே இந்த பரபரப்பு.

அவளின் பரபரப்பை துளியும் அறியாமல் கிளம்பிக் கொண்டிருந்தான் இளங்கோ தன் அறையில்.

அப்போது கதவு தட்டப்பட.. மைதிலியாக இருக்கும் என எண்ணிய இளங்கோ.. கதவை திறந்தான்.

தான் வாங்க ஏங்கிய புடவையில்.. தன் மனதை ஆட்சி புரிபவன் வாங்கிக் கொடுத்த புடவையில்.. அவனை தயக்கமும் வெட்கமுமாக பார்த்தாள் அபி.

அபியை முதன்முதலாக புடவையில்.. அதுவும் வெட்கப் புன்னகையோடு பார்த்த அந்த நொடியில் தன்னுள் ஏதேதோ மாற்றம் ஏற்படுவதை மட்டுமே இளங்கோவால் உணர முடிந்தது.

தனக்குள் இருக்கும் உணர்வுகள் அவனுக்கும் கடத்தப்படுவதை உணராத அபி.. அவன் வாங்கிக் கொடுத்த புடவையில் அழகாக இருப்பதாக சொல்லமாட்டானா என ஏங்கிக் கொண்டிருந்தாள்.

“அபி.. ரொம்ப அழகா இருக்கடா..” என்ற மைதிலியின் குரல் கேட்டு.. அபி இளங்கோ இருவரும் தங்கள் மயக்கத்தில் இருந்து வெளிவந்தனர்.

“நல்லா இருக்கா அத்தை..” என சந்தோஷமாக கேட்டவள்.. மைதிலியை கட்டிக் கொண்டாள்.

“உனக்கென்ன டா.. ரொம்ப அழகா இருக்க..” என சொன்ன மைதிலி.. “கண்ணா.. நீ கிளம்பிட்டீயா..” என இளங்கோவிடம் கேட்டார்.

“ஆங்.. இதோ கிளம்பிட்டேன் ம்மா..” என்ற இளங்கோ தன் பார்வையை அபியிடம் இருந்து விலக்கத்தான் திண்டாடினான்.

வழக்கமாக தாயின் முகம் பார்த்து புன்னகையுடன் விடைபெறுபவனின் கண்கள்.. இந்த முறை தாயின் பின்னால் நின்று கொண்டு தலை சரித்து பார்த்தவளின் முகத்தை மட்டுமே கண்டன.

மனதில் அபியின் வெட்கம் பூசிய முகத்தையும் தன்னுள் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணம் புரியாத குழப்பத்துடனும் கிளம்பினான் இளங்கோ.

தான் புடவையில் எப்படி இருக்கிறோம் என இளங்கோ சொல்லாதது ஏன் என புரியவில்லை என்றாலும்.. தனக்கு நினைவு திரும்பும் முன்னரே தன் மனதில் உள்ள நேசத்தை அவனிடம் சொல்ல வேண்டும்.. ஆனால் எப்படி.. என யோசித்துக் கொண்டிருந்தாள் அபி.

அன்று பள்ளியின் மரத்தடியில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்த அபியின் கவனத்தை ஈர்த்தது அந்தக் குரல்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top