🌸 03 🌸
தான் ஏன் அந்தப் பெண்ணுக்காக இதையெல்லாம் செய்கிறோம் என்பதே இளங்கோவுக்கு புரியவில்லை.
மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்ததோடு தன் வேலை முடிந்தது என கிளம்பியிருக்கலாம்.. இல்லையா.. அவள் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்த பின்னராவது..
ஆனால் ஏன்.. பெயர் கூட தெரியாத அவளுக்கு பெயர் சூட்டி.. சிகிச்சைக்கு பணம் கட்டி.. அவள் கண் விழித்து.. தன் பிரச்சனை என்ன என்பதை சொன்னதும்.. தன்னை நம்பி அவள் பகிர்வாளா.. தெரியாது.. ஆனால் அதை அறிந்து.. தீர்த்து வைக்க வேண்டும் என்ற உறுதி.. ஏன் இதெல்லாம்..
இளங்கோவுக்கு தெரியவில்லை.. சில நொடிகள் நிலவொளியில் பார்த்த அவள் முகம்.. அந்த விழிகளில் இருந்த பயம்.. தவிப்பு.. அதை நீக்கிவிடும் துடிப்பு.. அது மட்டுமே அவனுக்குள் இருந்தது.
தனக்கும் அவளுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போல.. அவள் துயர் துடைக்கவே வந்தவன் போல.. எண்ணிக் கொண்டான் இளங்கோ.
அந்த விடியல் இருவரையும் பிணைக்க இருப்பதை அறியாமல்.. அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தான் இளங்கோ.
ஏதோ பேச்சு சத்தம்.. அரைகுறை உறக்கமும் கலைந்து கண்விழித்தான்.
“ஏன்டா.. எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல.. பாப்பாவை விட வேலையா முக்கியம்.. நான் பயந்துடுவேன்னு சொல்லாம நைட் முழுக்க நீ கஷ்டப்பட்டுட்டு இருந்துருக்கீயே மா..” என்ற அவன் குரலில் குழந்தையின் உடல்நிலையை எண்ணி இரவெல்லாம் தவித்த அவள் தவிப்பு கரைந்தோட அவனை அணைத்துக் கொண்டாள்.
அன்பின் வலிமையை உணர்ந்து.. மென்னகையோடு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.
அப்போது அங்கே வந்த மருத்துவர்.. அந்த குட்டி பாப்பாவை பரிசோதித்தார்.
பாப்பாவுக்கு காய்ச்சல் குறைந்திருக்க.. என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும்.. என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என மருத்துவரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தனர் கணவனும் மனைவியும்.
அப்போது கண்விழித்த அபி.. இரத்தக்கறை படிந்த சட்டையுடன் நின்றிருந்த இளங்கோ மீது தன் பார்வையை பதித்தாள். இளங்கோவும் முகம் மலர.. அபியை பார்த்தான்.
அப்போது அங்கே வந்த மருத்துவர்.. “மிஸ் அபிநயா.. ஆர் யூ ஓகே..” என கேட்டார்.
மலங்க மலங்க விழித்தாள் அபிநயா. “அ.. அபிநயா..” என தனக்குள்ளே முணுமுணுத்தாள்.
தான் சொன்ன பொய்கள் எல்லாம் அப்போது தான் இளங்கோவின் நினைவுக்கு வந்தது.
“அவ பேர் என்னனே தெரியாதே.. நான் பாட்டுக்கு அபிநயானு சொல்லி வச்சிருக்கேன்.. தெரிஞ்சவங்கனு வேற சொல்லிருக்கேன்.. அவ இப்ப யார் நீ..னு கேட்கப் போறா.. அடிச்சு துரத்தாம இருந்தா சரி..” என மனதுக்குள் தவித்தான் இளங்கோ.
மெல்ல எழுந்து அமர்ந்த அபி.. “அ.. அபிநயாவா..” என மெல்ல கேட்டாள்.
“ம்.. உங்க பேர் அபிநயானு உங்க ரிலேட்டிவ் தான் சொன்னாரு..” என இளங்கோவை காட்டி சொல்ல.. அவனை பார்த்தாள் அபிநயா.
“தேவையில்லாம நிறைய பொய் சொல்லிட்டோமே.. இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது.. எப்டி சொல்றது.. நா.. நான் ஹெல்ப் பண்றதா நினைச்சு ஏதோ பண்ணப்போக..” என பரிதவித்தான் இளங்கோ.
சுழித்த புருவங்களுடன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தவள்.. “எ.. எனக்கு எதுவுமே நியாபகம் வரமாட்டிக்குது டாக்டர்.. என் பேர்.. இவரு.. வே.. வேற எதுவுமே.. எ.. எப்டி ஆக்சிடெண்ட் ஆச்சு..” என பேசிக் கொண்டே சென்றாள் அபிநயா.
“அப்பாடா..” என அந்த நொடியில் நிம்மதியாக உணர்ந்தான் இளங்கோ.
மருத்துவர் அபிநயாவை பரிசோதித்துக் கொண்டிருக்க.. அப்போது தான் மற்ற விஷயங்களை யோசிக்க தொடங்கினான் இளங்கோ.
கண்விழித்து அவள் தன் பிரச்சனையை சொல்வாள்.. அதை தீர்க்க தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தவன் அவள் பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொள்ள இருந்த ஒரே வழியும் அடைபட்டு போனதை உணர்ந்தான்.
விபத்து என்பதால் மருத்துவமனையில் இருந்தே காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லப்பட்டு.. வந்து விசாரித்த காவலரிடமும் தெரிந்தவள்.. சொந்தம்.. என மருத்துவமனையில் சொன்ன அதே பொய்யை தான் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது.
குறைந்தபட்சம் அந்தக் காவலரிடமாவது யாரென தெரியாது என்ற உண்மையை கூறியிருந்தால்.. அவர்கள் மூலமாவது அபி யார்.. அவளுக்கு என்ன பிரச்சனை என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால்..
தான் யார்.. தனக்கு என்ன பிரச்சனை என்பதை சொல்ல வேண்டியவளுக்கு எதுவுமே நினைவில் இல்லை.. எப்படி அறிவதென்றும் தெரியவில்லை.
இப்போது அவளிடம் நீ யாரென்றே எனக்கு தெரியாது.. உதவி செய்வதாக எண்ணிக் கொண்டு நான் பொய் சொன்னேன்.. ஹாஸ்பிட்டல் பில்லை கட்டிட்டேன்.. நீ இனி உன் வேலையை பார்த்துட்டு போ..னு எப்டி சொல்ல முடியும்.. என யோசித்துக் கொண்டிருந்தான் இளங்கோ.
மருத்துவர் அழைப்பதாக தகவல் வர.. அவர் அறைக்கு சென்றான் இளங்கோ.
“ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் லாம் பார்த்துட்டேன்.. எந்த ப்ராப்ளமும் இல்லை.. சடன் அதிர்ச்சியில ஏற்பட்ட மறதி தான்.. பார்த்த முகம்.. பழகின மனிதர்கள்.. இடங்கள் அதெல்லாம் பார்க்கும் போது தானேவே சரியாகிடும்..
ஞாபகம் வரவழைக்கிறதா நினைச்சிட்டு.. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்க வேண்டாம்..” என மருத்துவர் சொன்னார்.
மற்ற விவரங்களையும் கேட்டுக் கொண்டு அபிநயா இருந்த அறைக்கு வந்தான் இளங்கோ.
“ம்மா.. ப்பா..” என முந்தைய நாள் காய்ச்சலின் சுவடே இல்லாமல் உற்சாகமாக உணவருந்திக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.
அதை ரசித்துக் கொண்டிருந்த அபிநயாவை பார்த்தபடியே நின்றிருந்தான் இளங்கோ.
குழந்தையை ரசித்துக் கொண்டிருந்த அபிநயாவின் பார்வை இளங்கோவின் மீது பதிந்தது.
அபிநயா மெலிதாக புன்னகைக்க.. குழப்பத்துடன் யோசனையுடன் இருந்த இளங்கோவும் பதிலுக்கு புன்னகைத்தான்.
“நீ.. நீங்க.. எனக்கு யாரு..” என கேட்ட அபி.. “சா.. சாரி.. எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை.. என் பேர் அபிநயா ன்றதே நீங்க சொல்லித்தான் தெரியும்.. நா.. நான்.. எவ்ளோவோ யோசிச்சிட்டேன்.. நியாபகம் வரமாட்டிக்குது.. அதான் நான் கேட்டேன்..” என உண்மையிலே வருத்தம் தெரிவித்தாள்.
அவள் மனதை புரிந்து கொண்ட இளங்கோ.. “நா.. நான்.. உ.. உங்க பேமிலி ப்ரெண்ட்..” என்றான் தயக்கத்துடன்.
“ஓ..” என்றாள் அபிநயா புன்னகையுடன்.
“ம்மா.. ம்மா..” என குழந்தை மகிழ்ச்சியுடன் அழைக்க.. அந்த சத்தம் கேட்டதும்.. “அ.. அம்மா.. என்னோட அம்மா எங்க..” என இளங்கோவிடம் கேட்டாள் அபிநயா.
அவள் கேள்வியில் திகைத்த இளங்கோ.. எப்படி சமாளிப்பது என புரியாமல் விழித்தான்.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top