WatTruyen.Top

காற்றினில் உன் வாசம்..

🌸 01 🌸

jamunaguru

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கையில் வீட்டுக்குள் நுழைந்தவன் விளக்கை ஒளிரச்செய்தான். கண்ணில் பட்டது அந்த புகைப்படம்.

இளங்கோ ரம்யாவின் திருமண புகைப்படம்.. அந்த புகைப்படத்தை பார்க்க பார்க்க பற்றிக் கொண்டு வந்தது இளங்கோவுக்கு.

ரம்யாவின் அந்த சிரிப்பு.. அத்தான் அத்தான் என்ற கொஞ்சல் மொழி.. ச்சே.. பொய்.. பொய் எல்லாம் பொய்.. புகைப்படத்தை இளங்கோ தூக்கி எறிய அது சுவரில் மோதி உடைந்து சிதறியது.

சோர்வாக சோபாவில் அமர்ந்தான் இளங்கோ. சுபநாளில் நடந்தேறிய திருமணம்.. இனிமையான இல்லறம்.. சந்தோஷம்.. மகிழ்ச்சி.. எல்லாம் ஆறே மாதத்தில் முடிந்து போவதை ஏற்றுக் கொள்வது அத்தனை சுலபமா என்ன.. இளங்கோவும் அதே மனநிலையில் தான் இருந்தான்.

எந்த ஒரு கணவனுக்கும் தன் மனைவி திருமணத்துக்கு முன்பே வேறு ஒருவனை நேசித்ததை ஏற்றுக் கொள்வது கடினம் தான்.

அதனால் திருமணமான புதிதில் அதை கணவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற பயத்தில் கூட அவள் காதலை பற்றி சொல்லாமல் விட்டிருக்கலாம்.. ஆனால் ஆறு மாதம்.. ஆறு மாதத்தில் அதை சொல்வதற்கு ஒரு சிறு சந்தர்ப்பம் கூடவா அமையவில்லை..

அவள் காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல் போயிருந்தாலும்.. அவள் மனம் மாற காத்திருக்கும் பொறுமை இளங்கோவுக்கு இருந்திருக்கும்.. அவளால் மாறவே முடியாது.. என்பதை உணர்ந்திருந்தால்.. முழுமனதோடு விவகாரத்து கொடுத்து பிரிந்திருப்பான் இளங்கோ.

ஆனால்.. திருமணமாகி ஆறு மாதம் கடந்த பின் அவனோடு ஓடிப்போகும் அளவு காதல் கொண்டிருந்தவள் தன்னிடம் இருந்து விலகியே இருந்திருக்கலாமே.. அத்தான்.. அத்தான் என்ற கொஞ்சலும்.. ஏதோ தன்னுடன் வாழவே இந்த பிறவி எடுத்தவள் போல என்ன ஒரு நடிப்பு.. ச்சே.. நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது இளங்கோவுக்கு.

தினமும் வேலை முடிந்து வீடு திரும்பும் வேளை.. அலங்காரம் என்ன.. கொஞ்சல் என்ன.. கெஞ்சல் என்ன.. உங்களுக்காக அது செய்தேன்.. இது செய்தேன்.. என உருகுவதென்ன.. எல்லாவற்றுக்கும் மேலாக அவனை மனதில் வைத்துக் கொண்டா.. என்னோடு.. ச்சீ.. ச்சீ.. உடலெல்லாம் தீப்பற்றி எரிவது போலிருந்தது இளங்கோவுக்கு.

அவள் நடிப்பை உண்மை நேசம் என நம்பி ஏமாந்து போனதை தவிர இளங்கோ வேறெந்த தவறையும் செய்யவில்லை தான். ஆனால் இந்த உலகின் தீ நாக்குக்கு அது புரியவில்லை.

“கல்யாணம் ஆகி ஆறு மாசம் தான் ஆகுதாம்.. அதுக்குள்ள பொண்டாட்டி ஓடி போய்ட்டாளாம்..”

“கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் பண்ணிருப்பா போல.. ஆறு மாசம் ஆகியும் அதைக்கூட கண்டுபிடிக்க முடியாம இருந்திருக்கான்..”

“வேலை வேலைனு பொண்டாட்டியை கண்டுக்காம இருந்திருப்பான்.. அதான் ஆறே மாசத்துல இவன் சலிச்சு போய் அவன் கிட்ட போய்ட்டா..”

“மனிசன் வேலைல பெர்பெக்டா இருந்து என்ன பிரயோஜனம்.. அந்த விஷயத்துல வீக்கோ என்னமோ.. அதான் அவ ஓடி போய்ட்டா..” கிசுகிசுத்து சிரித்த அந்தக் குரல்.. ஏளனம்.. கேலி எல்லாம் இளங்கோவின் செவிகளுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

ரம்யா தன்னை விட்டு போனதைக்கூட நாட்கள் செல்ல செல்ல மறந்திருக்க இளங்கோவால் முடிந்திருக்கும்.. ஆனால் நீ ஏமாளி.. முட்டாள்.. என பறைசாற்றிய இந்த பேச்சுக்கள்.. அதை கடந்திட இளங்கோவால் முடியவில்லை.

“அப்பா.. எனக்கு 42 இஞ்ச் எல்.இ.டி டீவி வேணும்..”

“ரம்யா இதெல்லாம் ஏன் மாமா கிட்ட கேட்கிற.. நாமளே வாங்கிக்கலாம்..”

“நிஜமாவா அத்தான்..”

“ம்..”

“அப்பா.. நீங்க வாங்கித்தர வேண்டாம்.. அத்தானே டீவி வாங்கித்தர்றேன்னு சொல்றாங்க..”

டீவியை பார்க்க பார்க்க எரிச்சலும் கோபமும் தலைக்கேறியது.. உடைக்க வேண்டும் என வெறிகூட வந்தது. ஆனால் இந்த வீடு.. வீட்டின் ஒவ்வொரு பொருளும்.. அவளை.. அவளுடன் வாழ்ந்த அந்த நிமிடங்களை தானே நினைவுபடுத்துகிறது.

பொருட்களை உடைத்தெறிந்து விடலாம்.. ஆனால்.. “அத்தான் உங்க கன்னத்துல இந்த மச்சம் ரொம்ப.. ரொம்ப அழகா இருக்கு..” என அவள் முத்தமிட்ட இடம்.. இந்த உடல்.. இதை என்ன செய்வது.. தீயிட்டு கொளுத்தினாலும் கூட இப்போது அனுபவிக்கும் நரக வேதனை இருக்காதோ..

அவள் செய்த தவறுக்கு.. நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்.. திருமணமான ஒரே வாரத்தில் தன் மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை தந்து விலகிச் சென்ற தன் தாய் மைதிலிக்கு.. தான் ஏன் தண்டனை கொடுக்க வேண்டும்..

ஒரே பையன்.. அப்பாவின் இறப்புக்கு பின்  அவனை வளர்க்க.. மைதிலி எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள். இந்த எண்ணங்கள் தான் இன்னும் இளங்கோவை தவறான எந்த முடிவும் எடுக்காத வண்ணம் காத்து நிற்கிறது.

வீட்டுக்குள் அடைந்து கிடக்க மனமின்றி.. நள்ளிரவில் ஆளரவமற்ற சாலையில் நடக்க தொடங்கினான் இளங்கோ.

பிறை நிலவின் மெல்லிய ஒளி சாலையெங்கும் பரவிக் கிடந்தது. ஏனோ எதையும் ரசிக்கும் மனமில்லை இளங்கோவுக்கு. கால் ஓயும் வரை நடக்க வேண்டும்.. என்று நடந்து கொண்டிருந்தான்.

திடீரென இளங்கோ மீது மோதினாள் அந்தப் பெண். முகமெல்லாம் பயத்தில் துளிர்த்த வியர்வை துளிகள். அவள் உடல் நடுங்குவதை கூட மெல்லிய வெளிச்சத்தில் இளங்கோவால் பார்க்க முடிந்தது.

யார் அவள்.. யாருக்கு பயந்து இப்படி ஓடி வருகிறாள்.. என இளங்கோ மனதில் கேள்விகள் எழ.. அவன் வார்த்தைகளில் அதை கேட்கும் முன்னரே அவள் அங்கிருந்து ஓடத் தொடங்கினாள்.

தெரு முனையில் இருந்த மெல்லிய வெளிச்சம் கூட இல்லாத தெருவின் இருளுக்குள் அவள் மறைந்ததை பார்த்தபடியே நின்றிருந்தான் இளங்கோ சில நொடிகள்.

அங்கிருந்து இளங்கோ நகர தொடங்கிய சில நொடிகளில்.. “அம்மா..” என அலறல் சத்தம் கேட்க.. திரும்பி பார்த்தான்.

இளங்கோவை அதிக வேகத்துடன் கடந்து சென்றது ஒரு வாகனம்.. இளங்கோ வேகமாக ஓடிச்சென்று பார்த்தான்.

நிலவின் ஒளியை தடை செய்திருந்த மேகம் விலகிச்செல்ல.. அவன் மீது மோதிய அதே பெண்.. இரத்தத்தில் நனைந்து கொண்டிருந்தாள்.

உடனே விரைந்து செயல்பட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அவளை சேர்த்தான் இளங்கோ.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top