01
பௌர்ணமி நிலவின் ஒளி அறைக்குள் ஊடுருவ.. ஜன்னலருகில் நின்றபடி.. தலையின் பின்னலை அவிழ்த்துவிட்டுக் கொண்டு பார்வையை நிலவின் மீது வைத்திருந்தாள் அவள்.
நிலவொளியில் மேலும் பன்மடங்காய் மிளிர்ந்த அவளழகை விழிகளால் பருகிக் கொண்டிருந்தவன்.. மெல்ல அவளை நெருங்கி.. அவளிடையோடு சேர்த்து அணைத்தான்.
அவள் கழுத்தில் இதழ்களால் வருடத் தொடங்கியவனை.. “குணா.. ப்ளீஸ்..” என்ற கிறங்கிய குரலால் தடுத்தாள் அவள்.
தன் இதழ் தீண்டல்களை தடுத்து நிறுத்தியவளின் முகத்தில் இருந்த கிறக்கத்தை நிலவொளியில் ரசித்தான். அவன் விழி தீண்டல்களில் வெட்கிக் கொண்டிருந்தாள் அவள்.
தன் கரங்களில் அவளை ஏந்தியபடி படுக்கையில் அவளோடு சேர்ந்து படுத்தவன்.. அவள் வெட்கத்தை ரசித்தபடியே.. இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.
உடலெல்லாம் அவள் வேண்டும் வேண்டும் என ஏங்க.. அவள் தன்னருகில் இல்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்புடன் நிலவை வெறித்துக் கொண்டிருந்தான் குணா.
குணாவின் இதயம் மது.. மது.. என அவள் பெயர் சொல்லி துடித்துக் கொண்டிருந்தது.
உலகின் ஏதோ ஓர் மூலையில் அவளும் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருப்பாள் என காதல் கொண்ட மனம் வாதிட்டது.
அது உண்மையே என ஒத்துக்கொள்ள முடிந்தாலும்.. ஆனாலும் ஏன் இந்த பிரிவு.. ஏன் இந்த தவிப்பு என மனதுக்குள் வருந்திக் கொண்டிருந்தான் குணா.
எல்லாம் மாறும்.. அவள் நிச்சயம் தன்னிடம் வந்து சேருவாள் என நம்பிக்கையுடன் நிலவை பார்த்துக் கொண்டிருந்தான் குணா.
எப்போது உறக்கம் தழுவியது என்பதே அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த குணா.. இந்த விடியல் தன்னை.. தன் மதுவிடம் அழைத்துச் செல்லப்போவதை அறியாமல் கண்விழித்தான்.
குளித்து உடை மாற்றி விட்டு.. அறையில் இருந்து வெளியே வந்தான் குணா.
அவனுக்கு காலை உணவை பரிமாறியபடியே பேசத் தொடங்கினார் அவன் அன்னை மஞ்சுளா.
“ஊரிலே இருந்து சுமதி அத்தை போன் பண்ணா.. அவ பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாளாம்.. நீ சரினு சொன்னா போதும்.. உனக்கே பேசி முடிச்சிடலாம்.. அவ..” என மஞ்சுளா பேசிக் கொண்டிருக்க.. எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல்.. போனை பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான் குணா.
“நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா..” என கெஞ்சலாக மஞ்சுளா தொடங்க.. ம் என தலையை அசைத்தபடியே.. தன் அக்கா சுமித்ராவுக்கு போன் பண்ணினான்.
மறுமுனையில் சுமித்ரா போனை அட்டெண் பண்ணியதும்.. “அக்கா.. நான் ஒரு வாரம் பிசினஸ் விஷயமா வெளியூர் போறேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவ அங்க கொண்டு வந்து விட்டுடுறேன்.. நான் வர்ற வரைக்கும் பார்த்துக்கோ..” என்றான் குணா.
“அம்மாவை நான் பார்த்துக்கிறேன்.. அதெல்லாம் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. நீ பிசினஸ் விஷயமா தான் போறீயா.. இல்லை..” என சுமித்ரா இழுக்க.. “பிசினஸ் விஷயமா தான்..” என அழுத்தமாக சொல்லிவிட்டு போனை கட் பண்ணினான் குணா.
முறைத்தபடி நின்றிருந்த அம்மாவை பார்த்து.. “சீக்கிரம் கிளம்பு மா.. அக்கா வீட்டில விட்டுட்டு நான் கிளம்பணும்..” என சொல்லிவிட்டு.. சாப்பிட தொடங்கினான் குணா.
எதுவும் பேச இயலாது அங்கிருந்து நகர்ந்தார் மஞ்சுளா. சாப்பிட்டு முடித்துவிட்டு அன்னையை அழைத்துக் கொண்டு அக்கா வீட்டுக்கு கிளம்பினான் குணா.
கோபத்திலும்.. தான் என்ன பேசினாலும் அது செவிடன் காதில் ஊதும் சங்கு போல தான் என்பதை உணர்ந்து எரிச்சலுடன் அமர்ந்திருந்தார் மஞ்சுளா.
வீட்டுக்கு வந்த அம்மாவின் முகத்தை பார்த்ததுமே.. தம்பிக்கும் அம்மாவுக்கும் இடையில் என்ன விவாதம் நடந்திருக்கும் என்பதை அறிந்து கொண்ட சுமித்ரா.. “டேய் இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இப்டியே இருக்கப்போற..” என தொடங்கினாள்.
ஆனால் குணா அலட்சியத்துடன்.. அங்கே வந்த அக்கா மகள் வெண்பாவை கொஞ்சிக் கொண்டிருந்தான்.
“மாமா.. ஊருக்கு போகப்போறீயா.. எனக்கு என்னெல்லாம் வாங்கிட்டு வருவ..” என தன் மழலை மொழியில் வினவினாள் வெண்பா.
“என்னெல்லாம் வேணும்.. என் செல்லத்துக்கு..” என பதிலுக்கு கேட்டான் குணா.
“சாக்லேட்.. ஐஸ்கிரீம்.. அப்புறம் அப்புறம்.. புது ஸ்கூல் பேக்.. டெடி பியர்.. அப்புறம்.. அப்புறம்..” என வெண்பா இழுத்துக் கொண்டிருக்க.. “அப்புறம் அத்தை வேணும்னு கேளு.. நீ கேட்கிறதெல்லாம் வாங்கிக் கொடுக்கிற உன் மாமா அப்டியே ஒரு அத்தையையும் கொண்டு வந்து நிறுத்தட்டும்..” என தலையை திருப்பிக் கொண்டு நகர்ந்தாள் சுமித்ரா.
அலுவலகம் செல்ல தயாராகி வந்த சுமித்ராவின் கணவர் வசந்தனிடம் தன் பயணம் குறித்த விபரங்களை பேசியபடியே அங்கிருந்து கிளம்பினான் குணா.
“இந்த டைம் எங்க..” என வசந்தன் கேட்க.. “புனே..” என்றான் குணா.
“பிசினஸ் தானா..” என லேசான புன்னகையோடு வசந்தன் வினவ.. “பிசினஸ் தான் அத்தான்..” என புன்னகையோடு சொன்னான் குணா.
“அங்க உள்ள ஒரு கம்பெனிய டேக் ஓவர் பண்ணிருக்கேன்னு சொன்னேன் இல்லையா.. அதான் அங்க ஒரு விசிட்..” என்றான் குணா.
“ம்.. எவ்ளோ நாள்..”
“ஒரு வாரம் ப்ளான் பண்ணிருக்கேன்.. முன்னபின்ன ஆகலாம்..” என்றான் குணா.
அம்மா அக்காவை போல அக்கா கணவரும் திருமணம் குறித்து பேசாதது சற்று நிம்மதியாக இருந்தது குணாவுக்கு.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக.. “தேங்க்ஸ் அத்தான் நீங்களாவது..” என குணா தொடங்க.. அவன் சொல்ல வருவதை அறிந்தவன் போல வசந்தன்.. “நான் புரிஞ்சுக்கிட்டு என்ன ஆகப்போகுது குணா.. இரண்டு வருஷம் ஆச்சு.. இனிமேலாவது நீ அத்தையை பத்தியும் கொஞ்சம் யோசி..” என்றான்.
எதுவும் பேச இயலாது மௌனத்துடன் விடைபெற்றுக் கொண்டான் குணா.
திட்டமிட்டது போலவே பயணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. புதிதாக வாங்கியிருக்கும் அந்த கம்பெனியை பார்வையிட அன்றே சென்றான் குணா.
இரண்டு வருடங்கள் யாரை தேடி அலைந்து கொண்டிருந்தானோ.. அவளை.. தன் உயிரில் கலந்த தன் மதுவை கண்டான் குணா.. தான் வாங்கியிருக்கும் அந்த கம்பெனியில் வேலை பார்ப்பவளாக.
தன்னைக் கண்டதும் அதிர்ச்சியில் கையில் இருந்த பொக்கேவை கூட கொடுக்க மறந்து நின்றிருந்த மதுவின் முகத்தை ஆராய்ந்தான் குணா சில நொடிகள்.
சில நொடிகளுக்கு பின்னரே.. “வெ.. வெல்கம் சார்..” என தான் இருக்கும் இடம் உணர்ந்து.. தடுமாற்றத்துடன் சொன்னாள் மது.
குணா.. குணா.. என கொஞ்சிய அதே குரல்.. இன்று சார் என அழைக்கிறாள். இமைக்காமல் அவளை பார்த்தான் குணா.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top