WatTruyen.Top

நேசிக்க நெஞ்சமுண்டு..

❤ 13

jamunaguru

செழியன் கண் திறந்து பார்த்த போது.. அவன் மடியில் தலை வைத்தபடி.. அவன் காலருகே அமர்ந்திருந்தாள் சித்ரா.

தன்னை மீறி.. செழியனின் கரங்கள் அவள் தலையை மெல்ல வருடியது. “சித்து..” என அழைத்தான் செழியன்.

கண்ணீருடன்.. “சாரி செழியன்..” என்றாள் சித்ரா.

“மிதுன் மேல இருந்த லவ்ல.. நான் உ.. உன்னை ரொம்ப.. ரொம்ப.. கஷ்டப்படுத்திட்டேன்.. நீ.. நீ.. என்னை வி.. விரும்புனது தெரியாம.. உன்னை தப்பா பேசிட்டேன்.. என்னை மன்னிச்சிடு செழியன்.. ப்ளீஸ்..” என அழுகையோடு சொன்னாள் சித்ரா.

“சித்து.. அழாத ப்ளீஸ்..” என்றவனின் கண்களும் கண்ணீர் சிந்திய காரணம் அவனுக்கே புரியவில்லை.

“சாரி.. நா.. நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்.. உ.. உன்னை.. உன்கிட்ட.. நா.. நான் என்ன பண்ணுவேன் செழியன்.. என்னால மிதுனை மறக்க முடியலை..” என்றாள் சித்ரா.

“சித்து உன்னை யார் மறக்க சொன்னது..”என செழியன் கேட்க.. நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் சித்ரா.

“மறக்கிறது எவ்ளோ கஷ்டம்னு எனக்கும் தெரியும் சித்து.. நானும் அதே வலியை அனுபவிச்சிருக்கேன்.. ஆனா உன்னை நினைக்கும் போதெல்லாம்.. உன் மனசில நான் இல்லைங்கிற உறுத்தல் இருக்கும்.. நீ எனக்கு சொந்தமானவ இல்லைங்கிற வலி இருக்கும்.. அந்த கஷ்டம் உனக்கில்லைல சித்து..” என்றான் செழியன் வலியுடன்.

“அஞ்சு வருஷமா எதையும் மறக்காத நீ இந்த கல்யாணம் ஆன உடனே எல்லாத்தையும் மறந்துடுவன்னு நான் நினைக்கலை சித்து..

ஆனா உனக்கு என் மனசில இருக்கிறத புரியவச்சு.. உன்னை கொஞ்சமாவது பழைய சித்துவா பார்க்க மாட்டோமோனு ஒரு ஏக்கம்..

மிதுன் மாதிரி உன் பார்வையிலே எல்லாத்தையும் புரிஞ்சுக்க எனக்கு தெரியலை.. என் மனசை உனக்கு புரியவைக்க கூட எனக்கு தெரியலை.. நான் தோத்துட்டேன் சித்து..” என்றான் செழியன் கலங்கிய கண்களுடன்.

பார்வையிலே எல்லாவற்றையும் புரிந்து கொள்வது மட்டும் தான் காதலா.. வார்த்தையிலும் செயலிலும் அவள் செய்த கொடுமையை தாங்கிக் கொண்டிருந்தானே.. அது அவள் மீது கொண்ட காதலினால் தானே..

அவனை இவ்வளவு வதைத்து விட்டேனே.. என எண்ணிய சித்ராவுக்கு குற்ற உணர்வாக இருந்தது.

அவன் மனவலியை உணர்ந்தவளின் மனம் தன் தவறை எண்ணி தவித்தது. கண்ணீர் வழிய அவன் மடியிலே தலைவைத்துக் கொண்டாள்.

“அழாத சித்து..” என்றவனின் கரங்கள் அவள் தலையை மெல்ல வருடிக் கொண்டிருந்தது.

நெடுநேரம் அப்படியே இருந்தனர் இருவரும்.. மனதில் உள்ள எல்லாவற்றையும் பேசிவிட்டதாலோ என்னவோ.. பெரும் பாரம் குறைந்த உணர்வு இருவருக்கும்.

“சித்து..” என அழைத்தான் செழியன்.

“ம்..”என்றாள் சித்ரா.

“உ.. உனக்கு..”என தொடங்கியவன் மேலே பேச முடியாமல் தடுமாறினான்.

அவன் முகம் பார்த்தாள் சித்ரா.

“கண்டிப்பா டிவோர்ஸ் வேணுமா..”என கேட்டான் செழியன் தயக்கத்துடன்.

வேண்டாம் என தலையசைத்தவள்.. “ஆனா..” என தொடங்க.. அவள் இதழ்களை தன் விரல்களை வைத்து தடுத்தான்..

“வேற எதுவும் யோசிக்காத.. நீ என்கூட இருந்தா போதும் எனக்கு..” என்றான் செழியன் கண்களில் ஏக்கத்துடன்.

சரியென தலையசைத்த சித்ரா.. செழியன் மடியில் தலைவைத்துக் கொண்டாள். சிறிது நேரம் மௌனமாக இருந்தவன்.. “எழுந்திரு சித்து.. கட்டில்ல படு..” என்றான்.

“ம்..” என சித்ரா சொன்னாலும் எழும்பாமல் அவன் மடியிலிருந்து தலையை எடுக்காமல் இருந்தாள்.

சற்று நேரம் கழித்து எழுந்தவளின் முகம் பார்த்து.. “சாரி சித்து.. கோபத்துல உன்னை அடிச்சுட்டேன்.. நான் அப்டி பண்ணிருக்க கூடாது..” என்றான் செழியன்.

“நான் உனக்கு கொடுத்த வலிக்கு முன்னால இது ஒன்னுமே இல்லை..” என வலியுடன் சொன்னவள் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள்.

இனியாவது செழியனின் மனவலிக்கு தான் மருந்தாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உறங்கிப் போனாள் சித்ரா.

இத்தனை நாட்கள் மனதில் இருந்த பெருஞ்சுமை அகன்று மனம் லேசான உணர்வில் நிம்மதியாக உறங்கினான் செழியன்.

அதன் பின் சித்ரா.. செழியனின் சித்துவாக மாறத் தொடங்கினாள்..

தோட்டத்தில் தான் வைத்த செடியில் பூ பூத்திருப்பதை செழியனிடம் ஆசையாக காட்டுவாள். இருவரும் ஒன்றாக வெளியே சென்று வருவார்கள். செழியனிடம் இருந்து விலகி விலகி செல்வதை தவிர்த்தாள்.

மிதுனை முழுதாக மறந்து விட்டாள் என சொல்ல முடியா விட்டாலும்.. செழியனிடம் மிதுனின் நினைவுகளை பற்றி பேசுவதை தவிர்த்தாள். அதை செழியனும் புரிந்து கொண்டான்.

ஊரிலிருந்து திரும்பி வந்த வைதேகிக்கும் சத்யநாதனுக்கும் அவர்கள் இருவரிடமும் நெருக்கம் அதிகரித்திருந்தது மகிழ்ச்சியை தந்தது.

“நாம வீட்டில இல்லாதப்ப என்னலாமோ நடந்துருக்கு போல..” என வைதேகி கேலியாக சொல்ல.. “நாம இனி அடிக்கடி வெளியூர் போக வேண்டியது தான்..”என சத்யநாதன் சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டனர்.

ஒரு நாள் சித்ரா.. “செழியன்.. டிபன் ரெடி.. சாப்பிட வா..” என அழைத்தாள்.

செழியன் அவளிடம் ஒரு பாக்ஸை நீட்டினான். புரியாமல் விழித்தவளை.. திறந்து பார்க்கச் சொன்னான். அதில் தங்கக் கம்மல் இருந்தது.

“என்ன திடீர்னு.. கம்மல்..” என புரியாமல் விழித்தாள் சித்ரா.

“இன்னைக்கு என்ன நாள்..” என செழியன் கேட்க.. திருதிருவென விழித்தபடி அவனை பார்த்தாள் சித்ரா.

“உன் பிறந்த நாள் இன்னைக்கு.. அது கூடவா நியாபகம் இல்லை..” என செழியன் சொன்னதும் சித்ராவின் கண்கள் தானாக கையிலிருந்த மோதிரத்தின் மீது பதிந்தது.

❤❤

அன்று சித்ரா வகுப்புக்குள் நுழைந்ததும்.. “happy birthday சித்து..” என அலறினாள் ஆர்த்தி.

செழியனும் மிதுனும் வாழ்த்து சொல்ல.. ஆர்த்தி.. கேக் கொண்டு வந்து.. “கட் பண்ணு சித்து..” என்றாள்.

வகுப்பில் இருந்த மற்றவர்களும் வாழ்த்து சொல்ல.. அந்த நாள் இனிமையாக தொடங்கியது.

மிதுன் அவளுக்கு ஒரு புது போன் பிறந்தநாள் பரிசாக கொடுத்தான். “எல்லார் birthdayக்கும் costly gift கொடு.. ஆனா உன் பிறந்த நாளுக்கு காணாம போயிடு..”என ஆர்த்தி கிண்டலாக சொல்ல.. மிதுனின் பார்வை சித்ராவின் மீதிருந்தது.

சித்ரா அன்று போலொரு தனிமை இன்று கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தோடு மிதுனை பார்த்தாள்.

செழியன் அவளுக்கு வாட்ச் ஒன்று பரிசாக கொடுத்தான். நாள் முழுவதும் மிதுனுடன் சில நிமிடங்களாவது தனிமை வேண்டுமென தவித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.

வகுப்புகள் முடிந்தபின்.. மிதுன் பெஞ்ச்சிலே படுத்திருந்தான். செழியன் அழைக்கும் போது அவனை கிளம்புமாறு கூறிவிட்டான்.

தவிப்புடன் மிதுனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா. ஆர்த்தியும்.. மற்றும் சிலரும் சித்ராவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆர்த்தி.. “வா சித்து.. கிளம்பலாம்..” என பேசிக் கொண்டே அவளையும் அழைத்தாள்.

தவிர்க்க இயலாது அவர்களுடன் கிளம்பினாள் சித்ரா.. படுத்திருந்த மிதுனை திரும்பி திரும்பி பார்த்தபடி.

சில நிமிடங்களில் மிதுனை காண வேண்டும் என்ற ஏக்கத்தில் வந்தாள் சித்ரா. அங்கே அவனில்லாமல் மனம் படபடக்க.. “ சித்துமா..” என அவள் பின்னிருந்து அழைத்தான் மிதுன்.

மிதுனின் மலர்ந்த முகம் கண்டதும் அவனை அணைத்துக் கொண்டாள் சித்ரா. அவள் தலையை வருடியவாறு அவளை அணைத்துக் கொண்டிருந்தான் மிதுன்.

“சித்துமா.. கையை காட்டு..” என்றான் மிதுன்.

கையை நீட்டியபடி அவன் முகம் பார்த்தாள் சித்ரா. புன்னகையோடு அவள் விரலில் மோதிரத்தை மாட்டினான் மிதுன்.

“birthday gift..” என மிதுன் கண்கள் மின்ன சொன்னதும்.. சித்ரா.. “அதான் போன் கொடுத்தல்ல..” என்றாள்.

“நான் அப்டித்தான்.. இன்னும் இன்னும் நிறைய கிப்ட் தருவேன்..” என்றவன் அவள் இதழ்களை ருசிக்கத் தொடங்கினான். அவளும் அதில் கிறங்கிப் போனாள்.

❤❤

“சித்து.. என்ன அப்டி பார்க்கிற.. கம்மல் பிடிச்சிருக்கா..” என்ற செழியனின் குரலில் நிகழ்வுக்கு வந்தாள் சித்ரா.

“ஆ.. ஆங்.. பிடிச்சிருக்கு..” என்றாள் சித்ரா.

வைதேகி இருவரையும் அழைக்கும் சத்தம் கேட்டு.. “அம்மா கூப்பிடுறாங்க வா போகலாம்..” என்றான் செழியன்.

“நீ.. நீ போ செழியன்.. நான் இந்த கம்மலை போட்டுட்டு வர்றேன்..” என்றாள் சித்ரா.

சரியென செழியன் புன்னகையோடு சென்றதும்.. விரலில் இருந்த அந்த மோதிரத்தை பார்த்தபடியே நின்றிருந்தாள் சித்ரா.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top