WatTruyen.Top

நேசிக்க நெஞ்சமுண்டு..

❤ 11

jamunaguru

அடிக்கடி அந்த நாற்காலியில் சித்ரா கண்மூடி அமர்ந்திருப்பது.. செழியனுக்கு வித்தியாசமாக தோன்றியதில்லை.. அவளுக்கு அது பிடித்திருக்கிறது என நினைத்துக் கொண்டான்.

ஒரு நாள் கண்மூடி அதில் சாய்ந்து அமர்ந்திருந்தவள்.. தன் விரல்களால் ஒரு கையை மெல்ல வருடினாள். என்ன செய்கிறாள் என புரியாமல் அவளை பார்த்துக் கொண்டே நின்றான் செழியன்.

விரல்களால் கன்னத்தில் மெல்ல வருடியபடி.. ஒற்றை விரலால் இதழை தடவினாள். அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரில் எதையோ உணர்ந்த செழியன்.. “சித்து..”என அழைத்தான்.

மிதுனின் நினைவில் தன்னை மறந்து இருந்த சித்ரா.. திடுக்கிட்டு கண்விழித்தாள். செழியனை கண்டதும்.. என்ன என்பது போல அலட்சியமாக பார்த்தாள்.

“என்ன செஞ்சுட்டு இருக்க..”என கேட்டான் செழியன்.

தனக்கு திருமணம் ஆகிவிட்டது.. என்ற உண்மை அப்போது தான் உணர்வுக்கு வர.. ஏதோ தவறு செய்து விட்டதை போல மனம் சுட்டது.. பேசாமல் அமைதியாக இருந்தாள் சித்ரா.

அவள் மௌனமே செழியனுக்கு அவள் மனதை உணர்த்த.. “இந்த மாதிரி சேர் மிதுன் வீட்டில உண்டா..”என கேட்டான் செழியன்.

“ஆமா..”என்றாள் சித்ரா வெறித்த பார்வையுடன்.

செழியன் ஏதோ சொல்லத் தொடங்கும் முன்.. “எல்லாம் தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணிக்கிட்ட..” என்றாள் அலட்சியமாக.

சற்று நேரம் அமைதி நிலவியது.. “இதே மாதிரி சேர்ல தான்.. அவன் மடியில.. என் மிதுன் மடியில.. நான் இருந்தேன்.. எதுவும் பேசாம.. என்னை கட்டிப்பிடிச்சிட்டு.. நாங்க சந்தோஷமா இருந்தோம்..” என்றாள் சித்ரா.

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் தீயென சுட்டது. இருந்தும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் செழியன்.

“அவனோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அந்த வீட்டில நாங்க மட்டும் தனியா.. எவ்ளோ சந்தோஷமா இருந்தோம்.. என் கையால ஊட்டிவிடச் சொல்லி சாப்பிடுவான்.. எனக்காக அவனே சமைப்பான்.. எனக்காக பார்த்து பார்த்து தேடித்தேடி வாங்கின புடவையை தருவான்.

எதுவும் பேசாம எதை பத்தியும் யாரை பத்தியும் யோசிக்காம என்னை கட்டிப்பிடிச்சிட்டு இருப்பான்.. அந்த ஒரே நாள்ல ஒரு ஜென்மம் வாழ்ந்த திருப்தி இருக்கும்..

ஆனா அதெல்லாம் போதலையே.. இன்னும் வேணும் இன்னும் வேணும்னு மனசு தவிக்குது.. அவன் ஏன் என்னை விட்டு போனான்.. எனக்கு அவன் வேணும்.. அவனோட வாழணும்.. நான் அவனோட வாழணும்.. சித்துமா..னு அவன் கூப்பிடுறத கேட்கணும்..”

அமைதியாக நிதானமாக பேச தொடங்கியவள் தன் கரங்களில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள்.

அவளை அணைத்து ஆறுதல் சொல்ல துடித்த மனதை அடக்கிக் கொண்டு அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் செழியன்.

சற்று நேரம் அழுத பின்.. கண்ணீரை துடைத்தபடி எதிரில் இருந்த செழியனை பார்த்தாள்.

“மிதுன் ரொம்ப லக்கி.. அதான் அவனை இவ்ளோ நேசிக்கிற உன்னோட காதல் அவனுக்கு கிடைச்சிருக்கு..” என்ற செழியனின் கண்களில் வலி இருந்தது.

“ஆனா..” என ஏதோ சொல்ல நினைத்தவன்.. எதுவும் பேசாமல் அறையில் இருந்து வெளியேறி விட்டான்.

சில தினங்கள் கடந்திருந்த நிலையில்.. “ஒரு இடத்துக்கு போகணும்.. இரண்டு நாள்ல திரும்பி வந்துடலாம்.. கிளம்பு..” என்றான் செழியன் சித்ராவிடம்.

“நான் எங்கையும் வரலை..”என்றாள் சித்ரா அலட்சியத்துடன்.

“நீ வந்துதான் ஆகணும்.. கிளம்பு..” என்றான் செழியன் பிடிவாதமாக.

முடியாது என மறுத்தவளை விடாமல் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

“ப்ரெண்டோட கெஸ்ட் ஹவுஸ் தான்.. உள்ள வா..” என்றான் செழியன்.

“என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீயா.. ஏன் இப்டி டார்ச்சர் பண்ற..” என்றாள் சித்ரா கோபத்துடன்.

அவள் பேச்சை காதிலே வாங்கிக் கொள்ளாமல் “இரண்டு நாள் இங்க தான் இருக்கப் போறோம்..” என்றான் செழியன்.

கோபமும் எரிச்சலுமாக அங்கே வந்தாள் சித்ரா. எதுவும் பேசாமல் ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

“இங்க எதுக்கு கூட்டிட்டு வந்துருக்கான்..” என யோசிக்கத் தொடங்கினாள் சித்ரா.

“ஒ.. ஒரு வேளை கணவன் ங்கிற உரிமையை எடுத்துக்க நினைக்கிறானோ..” என மனதில் தோன்றிய நொடியிலே உடலெல்லாம் பயம் பரவியது சித்ராவுக்கு.

“நீ எனக்கு சொந்தமானவ..” என்ற மிதுனின் குரல் காதில் கேட்க.. “நா.. நான் மிதுனுக்கு சொந்தமானவ.. இந்த உடம்பும் உயிரும் அவனுக்கு மட்டும் தான் சொந்தம்..” என மனதுக்குள் தீவிரமாக முடிவு செய்தாள்.

சிறிது நேரத்தில்.. “சித்து வா சாப்பிடலாம்..” என அழைத்தான் செழியன்.

“என்னை இதுக்கு இங்க கூட்டிட்டு வந்த.. நான் உடனே போகணும்..” என்றாள் சித்ரா.

“போகலாம்.. முத சாப்பிடு..” என்றான் செழியன் நிதானமாக.

“என்ன நினைச்சிட்டு நீ இதெல்லாம் பண்ணிட்டு இருக்க..” என சித்ரா கோபத்துடன் பேசத் தொடங்க.. “நாளைக்கு என்ன நாள்னு என்னை விட உனக்கு நல்லா நியாபகம் இருக்கும்.. அது அம்மா அப்பாவுக்கு தெரிய வேண்டாம்னு தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்..” என்றான் செழியன் பொறுமையுடன்.

அவ்வளவு நேரம் மனதில் இருந்த பயம் தொலைந்து.. நாளை என்ன நாள் என யோசிக்கத் தொடங்கினாள் சித்ரா.

உன்னை எனக்கு சொந்தமானவாள் ஆக்கிக் கொள்வேன் என்ற எண்ணத்தில் மிதுன் சொன்ன அந்த கடைசி நாள்.. அது அவன் வாழ்வின் கடைசி நாளாகவே அமைந்து விட்டது.

இதயம் படபடக்க தன் கைகளை பார்த்தாள் சித்ரா. வழக்கமான மென்மை தொலைந்து அழுந்த பற்றிய மிதுனின் அந்த கடைசி தீண்டல்.

கைகளெல்லாம் மிதுனின் இரத்தம் உறைந்திருப்பது போல விழிகள் உணர.. மயங்கி விழுந்தாள் சித்ரா.

செழியன் அவளை அறையில் படுக்க வைத்தான். மயக்கத்தில்.. “மிதுன்.. மிதுன்..” என புலம்பினாள்.

லேசாக காய்ச்சலும் இருந்தது சித்ராவுக்கு. அவளை அருகில் இருந்து அன்போடு கவனித்துக் கொண்டான் செழியன்.

இரண்டு நாட்கள் அங்கே இருந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினர் செழியனும் சித்ராவும். சித்ராவின் காய்ச்சல் சரியாகியிருந்தது.

வீட்டுக்கு வந்தபின் மீண்டும் செழியனிடம் இருந்து விலகியிருந்தாள் சித்ரா. காய்ச்சலில் இருக்கும் போது அவன் செய்த உதவிகளை மறுக்காமல் ஏற்றுக் கொண்டவள் மீண்டும் விலகிச் செல்கையில் மனம் வலித்தது செழியனுக்கு.

சித்ராவுக்கு தன் நேசத்தை புரிய வைப்பது இயலாத காரியம்.. அவள் தன்னை துணையாக.. இல்லை.. குறைந்தபட்சம் நண்பனாக கூட இனி ஏற்றுக் கொள்ள மாட்டாள் என செழியனுக்கு தோன்றியது.

அவளை விட்டு முடிந்தவரையில் விலகியிருக்க தொடங்கினான். அவன் விலகுவது சித்ராவுக்கு புரிந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே மதிக்க மனமில்லை அவளுக்கு.

வீட்டில் அவர்கள் மட்டும் இல்லையே.. வைதேகிக்கும் சத்யநாதனுக்கும் அரைகுறையாக அவர்கள் விலகியிருப்பது புரிய தொடங்கியது.

செழியனிடம்.. “ஏன் வீட்டிலே இருக்க மாட்டிக்குற.. டெய்லி நைட் லேட்டா வர்ற.. உன்னை நம்பி இங்க ஒருத்தி இருக்கா.. அந்த நினைப்பு இருக்கட்டும்..” என்றார் வைதேகி கண்டிப்புடன்.

“வேலை அதிகம்.. கொஞ்ச நாளைக்கு அப்டித்தான் இருக்கும்..” என சமாளித்தான் செழியன்.

ஒரு நாள் சித்ராவுடன் உறவினர் வீட்டு திருமணம் ஒன்றிற்கு சென்றார் வைதேகி. சித்ராவை தன் மருமகள் என பெருமையாக அறிமுகம் செய்து வைத்தார் வைதேகி.

அப்போது ஒருவர்.. “செழியனோட wifeஆ.. மாசமா இருக்காளா..” என கேட்டார்.

இல்லை என வைதேகி பதில் சொன்னதும்.. “கல்யாணம் ஆகி ஆறேழு மாசம் இருக்காது.. என்ன ஏதுனு பாருங்க.. இப்பலாம் டயட்னு பட்டினி கிடந்து உடம்பில சத்தில்லாம இருக்குது பிள்ளைங்க.. இவளும் ஒல்லியா தான் இருக்கா.. சீக்கிரம் நல்ல டாக்டரா பாருங்க..” என சொல்ல.. சித்ராவின் முகம் வாடிப்போனது.

“சித்ரா டயட் அது இதுனு உடம்பை கெடுத்துக்கிற பொண்ணு இல்லை.. இரண்டு பேருக்கும் சின்ன வயசு தான.. மெதுவா குழந்தை பெத்துப்பாங்க.. இப்ப என்ன அவசரம்..” என சட்டென்று பதிலளித்த வைதேகி.. “நீ வா மா போகலாம்..”என சித்ராவை அழைத்துச் சென்றார்.

வீட்டுக்கு வந்த பின்னும் சித்ராவின் முகம் வாடியிருக்க.. “நீ அவ பேசுனதெல்லாம் யோசிக்காத மா.. அவளை மாதிரி ஆளுங்களுக்கு மத்தவங்க சந்தோஷமா இருந்தாலே பிடிக்காது.. யார் கிட்ட என்ன குறை கண்டுபிடிக்கலாம்னு அலையுறாங்க..” என அவளை சமாதானம் செய்ய எண்ணி பேசிக் கொண்டிருந்தார் வைதேகி.

ஆனால் சித்ராவின் மனதில் இருந்த எண்ணம் வேறு..

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top